search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கந்துவட்டி கேட்டு மிரட்டியதால் விஷம் குடித்த தொழிலாளி- காங். பெண் பிரமுகர்-பஞ்.துணை தலைவர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு
    X

    கந்துவட்டி கேட்டு மிரட்டியதால் விஷம் குடித்த தொழிலாளி- காங். பெண் பிரமுகர்-பஞ்.துணை தலைவர் உள்பட 3 பேருக்கு வலைவீச்சு

    • ஜெயக்குமாரை அவதூறாக பேசியும், கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
    • ராணி உள்பட மற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள கீழ துவரைகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார்(வயது 50). தொழிலாளி. இவர் அதே ஊரை சேர்ந்த கணபதி மனைவி ராணி(60) என்பவரிடம் குடும்ப செலவுக்காக ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் கடன் வாங்கியதாகவும், அதற்கு மாதந்தோறும் ரூ.9 ஆயிரம் வட்டி கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் கடந்த மாதம் வட்டி பணத்தில் ரூ.3,500 மட்டும் கொடுத்த ஜெயக்குமார் மீதி பணத்தை பிறகு தருவதாக கூறியிருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் ராணி, அவரது கணவர் கணபதி(70), மகள் சுமதி(40), மருமகள் முத்துலெட்சுமி(38) ஆகிய 4 பேரும் ஜெயக்குமார் வீட்டிற்கு சென்றுள்ளனர். அவர்கள் ஜெயக்குமாரை அவதூறாக பேசியும், கந்துவட்டி கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனம் உடைந்த ஜெயக்குமார் அன்று இரவில் விஷம் குடித்தார். உடனே உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.

    இதுதொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் வேலம்மாள் விசாரணை நடத்தி ராணி, கணபதி உள்பட 4 பேர் மீது கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்து சுமதியை கைது செய்தனர். ராணி உள்பட மற்ற 3 பேரும் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

    இதில் தலைமறைவாக உள்ள ராணி, கடந்த ஜூலை மாதம் தெற்கு மீனவன்குளம் பகுதியை சேர்ந்த இசக்கி என்பரிடம் கந்துவட்டி கேட்டு மிரட்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைதானவர். காங்கிரஸ் பிரமுகரான அவர் சமீபத்தில் தான் ஜாமீனில் வெளியே வந்தார். அவரது மருமகள் முத்துலெட்சுமி கள்ளிகுளம் பஞ்சாயத்து துணை தலைவராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×