search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம்- மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு
    X

    சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டம்- மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் மத்தியில் கமல்ஹாசன் பேச்சு

    • மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
    • நாம் இந்த மத அரசியலை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில் ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும்.

    சென்னை:

    சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று நிர்வாகிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் நடைபயணம் டெல்லியில் நடந்த போது அதில் கமல்ஹாசன் கலந்து கொண்டார். இந்த நடை பயணத்தின் போது பொதுக்கூட்டம் ஒன்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்று கமல்ஹாசன் பேசினார். இதில் தமிழகத்தில் இருந்து மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அவர்களை கவுரவப்படுத்த கமல்ஹாசன் முடிவு செய்திருந்தார்.

    இதன்படி டெல்லி சென்ற மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் சுமார் 300 பேர் கட்சி அலுவலகத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். அவர்களை பாராட்டி சான்றிதழ் வழங்கிய கமல்ஹாசன் நிர்வாகிகள் மத்தியில் பேசினார்.

    டெல்லியில் நடைபெற்ற பாரத் ஜோடோ யாத்திரையில் என்னோடு கலந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் பாராடுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு மத அரசியலை செய்து கொண்டிருக்கிறது.

    மதத்தை அரசியலுக்கான தகுதியாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

    நாம் இந்த மத அரசியலை தடுத்து நிறுத்த வேண்டும். நாட்டில் ஒற்றுமையை நிலை நாட்ட வேண்டும். இதனை நிலை நாட்டும் வகையில் தான் ராகுலின் யாத்திரை அமைந்துள்ளது. தமிழகத்தில் பா.ஜனதா நடத்தும் மத அரசியல் எடுபடாது.

    மக்கள் நீதி மய்யம் கட்சியை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல தேவையான நடவடிக்கைகளை நான் எடுத்து வருகிறேன். தலைமை பொறுப்பில் உள்ள நான் ஏ சொன்னால் நீங்களும் ஏ சொல்ல வேண்டும் என்பதை அனைவரும் என்னை பின்பற்றுங்கள்.

    தமிழர்களின் பாரம்பரியத்தை காப்பதிலும் மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து உறுதுணையாக இருக்கும்.

    அந்த வகையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை சென்னையில் நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளோம். பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டை நடத்த அனுமதி கேட்டுள்ளோம். இந்த அனுமதி கிடைத்தால் ஜல்லிக்கட்டை நடத்த தயாராக உள்ளோம். மெரினாவில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வேண்டும் என்பது எனது விருப்பம்.

    இவ்வாறு கமல்ஹாசன் பேசினார்.

    இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்ய துணை தலைவர்கள் மவுரியா, தங்கவேலு, நிர்வாக குழு உறுப்பினர்கள் அருணாசலம், செந்தில் ஆறுமுகம், சிவ இளங்கோ, நாகராஜ், அர்ஜுன் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

    Next Story
    ×