search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தமிழக மக்களின் உரிமைகளுக்காக தி.மு.க. அரசு போராடும்- கனிமொழி எம்.பி. பேச்சு
    X

    தமிழக மக்களின் உரிமைகளுக்காக தி.மு.க. அரசு போராடும்- கனிமொழி எம்.பி. பேச்சு

    • இலவச பஸ் பயணத்திற்கு பெண்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை.
    • முதல்-அமைச்சருக்கு பெண்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தெரியும் என்பதால் பஸ்சில் இலவச கட்டணத்தை வழங்கினார்.

    கோவை:

    கோவை ஆர்.எஸ்.புரத்தில் தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.

    விழாவில் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. கலந்து கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    நான் துணைப்பொதுச்செயலாளராக பதவியேற்ற பின்பு முதன் முதலாக இந்த கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளேன். இதில் நான் மிகவும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறேன். எந்த அளவிற்கு அரசு மக்களுடைய குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்து வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.

    அதேசமயம், கடந்த ஆட்சியின் குறைகளையும் தற்போது தி.மு.க. அரசு சரி செய்து வருகிறது. 10 ஆண்டுகள் நடைபெற்ற பிரச்சினைகள் மக்கள் சந்திக்கக்கூடிய கஷ்டங்கள் இவை எல்லாம் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒவ்வொன்றாக சரி செய்து வருகிறார். மேலும் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை தொடர்ந்து முதல்-அமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.

    மக்களுக்கு என்ன வேண்டும் என சிந்தித்து மக்கள் கோரிக்கை வைப்பதற்கு முன்பாகவே நடவடிக்கைகள் எடுத்து அதனை நிறைவேற்றி தருகிற ஆட்சி தி.மு.க. ஆட்சி.

    இலவச பஸ் பயணத்திற்கு பெண்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. ஆனால் முதல்-அமைச்சருக்கு பெண்கள் எவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்பது தெரியும் என்பதால் பஸ்சில் இலவச கட்டணத்தை வழங்கினார். இதனால் பெண்கள் தன்னம்பிக்கையோடு வெளியே சென்று வருகிறார்கள்.

    நம்ம வீட்டு பெண்கள் உயர்கல்வி படிக்க வேண்டும் என்பதற்காக அரசு ரூ.1000 வழங்கும் திட்டத்தை உருவாக்கி தந்தவர் முதல்-அமைச்சர். பெண்களின் உயர்கல்வி கனவு எந்த விதத்திலும் நின்று போகக்கூடாது என்பதற்காக இந்த திட்டத்தை தந்து உள்ளார்.

    பள்ளிகளில், பசியோடு மாணவர்கள் மதிய உணவு வரை காத்திருக்க கூடாது என்பதற்காக காலை உணவு திட்டத்தை உருவாக்கி தந்திருக்கிறார். இந்த திட்டம் மதிய உணவு திட்டத்தை போல எல்லா பள்ளிகளிலும் விரைவில் கொண்டு வரப்படும்.

    தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்ச்சி இருக்க வேண்டும். வேலைவாய்ப்பு உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோடு எல்லா பகுதிகளிலும் தொழில் முதலீடுகளை கொண்டு வர வேண்டும். இங்கு இருக்கும் படித்த இளம்பெண்கள், இளைஞர்களுக்கு வேலை கிடைக்க வேண்டும்.

    எல்லா பகுதிகளும் வளர்ச்சி பெற்ற பகுதிகளாக மாற வேண்டும் என்பதற்காக லட்சக்கணக்கான முதலீடுகளை ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் முதலீடுகளை, வளர்ச்சியை கொண்டு வந்த ஆட்சி தி.மு.க . ஆட்சி.

    இந்த ஆட்சி தமிழக மக்களின் உரிமைக்காக, மொழி உணர்வுக்காக, இன உணர்வுக்காக உரிமைகளுக்காக போராடக்கூடிய ஆட்சி தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி.

    நாம் அனைவரும் அவருடன் நின்று நம்முடைய எதிர்காலத்துக்காக நம் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நம்முடைய சுயமரியாதைக்காக அவரோடு நின்று அவர் வழியில் பயணம் செய்வோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×