search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைகிறது
    X

    கத்திரி வெயில் இன்றுடன் நிறைவடைகிறது

    • அக்னி நட்சத்திரம் இன்று முடிவடைந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
    • கடந்த 8-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்தது.

    சென்னை:

    அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கி இன்று (செவ்வாய்க்கிழமை) நிறைவடைகிறது. பொதுவாக கத்திரி வெயிலின் போது வெப்பம் 100 டிகிரியை தாண்டி பதிவாவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்தே பல நகரங்களில் வெப்பம் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது. சில ஆண்டுகளில் கத்திரி வெயிலே தெரியாத வகையிலும் இருந்துள்ளது. ஆனால் இந்த ஆண்டு கடந்த 4-ந்தேதி கத்திரி வெயில் தொடங்கியது முதல் உள்மாவட்டங்கள் மட்டுமல்லாது கடலோர மாவட்டங்களிலும் கடும் வெயில் சுட்டெரித்தது.

    இந்த ஆண்டு கத்திரி வெயில் தொடங்குவதற்கு முந்தைய நாள் அதாவது மே 3-ந்தேதி ஈரோடு, திருத்தணி, வேலூர், கரூர், திருப்பத்தூர், மதுரை உள்ளிட்ட 18 இடங்களில் வெயில் சதம் அடித்தது. தொடர்ந்து கத்திரி வெயில் தொடங்கிய நாளில் இருந்து 3 நாட்களுக்கு தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்ப அலை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும், சில மாவட்டங்களில் கோடை மழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    அதன்படி காலநிலை இருந்தாலும், கடந்த 8-ந்தேதியில் இருந்து 24-ந்தேதி வரை கத்திரி வெயில் காலத்தில் தமிழகத்தில் பல இடங்களில் கோடை மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் அளவு குறைந்து காணப்பட்டது. கடந்த 4-ந் தேதி சென்னை மீனம்பாக்கம், கரூர், வேலூர் உள்பட 15 இடங்கள், கடந்த 7-ந்தேதி திருச்சி, மதுரை உள்பட 11 இடங்கள், 8-ந்தேதி கரூர், நாமக்கல் உள்பட 9 இடங்களில் வெயில் சதம் அடித்தது.

    தொடர்ந்து 24-ந்தேதி வரை பரவலாக மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் இல்லாமல் இருந்தது. இதற்கிடையில் கடந்த 22-ந்தேதி வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. இதனால் கத்திரி வெயிலால் ஏற்படும் வெப்பத்தின் தாக்கம் முற்றிலும் இல்லாமல் இருந்தது. இந்தநிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) கத்திரி வெயில் நிறைவடைகிறது. இது பொதுமக்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக உள்ளது. இருப்பினும், அக்னி நட்சத்திரம் இன்று முடிவடைந்தாலும் மேலும் சில நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனாலேயே பள்ளிகள் ஜூன் 6-ந்தேதிக்கு திறக்கப்படுகிறது என்று அதிகாரிகள் கூறினர்.

    Next Story
    ×