என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    சேலத்தில் பாம்பு கடித்து இறந்த மனைவியின் நினைவாக புதிய வீடு கட்டி சிலை வைத்த லாரி டிரைவர்
    X

    சேலத்தில் பாம்பு கடித்து இறந்த மனைவியின் நினைவாக புதிய வீடு கட்டி சிலை வைத்த லாரி டிரைவர்

    • தன்னுடைய மனைவி உயிருடன் இருக்கும் பொழுது அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் தாலி ஆகியவற்றை சிலைக்கு அணிவித்துள்ளார்.
    • இறந்த மனைவியின் நினைவாக வீடு கட்டி, சிலை வைத்து அழகுபார்த்த இருசனின் செயல் அப்பகுதியினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    சேலம்:

    சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள ஊற்றுகிணறு, கிளாக்காடு பகுதியை சேர்ந்தவர் இருசன், லாரி டிரைவர். இவரது மனைவி நீலா. இவர்களுக்கு கஸ்தூரி, லோகேஸ்வரி, ரேஷ்மா ஆகிய 3 மகள்கள் உள்ளனர்.

    கஸ்தூரிக்கு திருமணமாகிய நிலையில் மற்ற 2 மகள்களும் தற்பொழுது கல்லூரியில படித்து வருகின்றனர்.

    இருசன் போதிய அடிப்படை வசதி இல்லாத வீட்டில் வசித்து வந்தார். கடந்த ஓராண்டுக்கு முன்பு இரவு நேரத்தில் வீட்டில் இருந்த நீலாவை பாம்பு கடித்தது. சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இதனால் மன உளைச்சலில் இருந்த இருசன் இது போன்ற நிகழ்வு குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் வரக்கூடாது என்பதற்காக உரிய அடிப்படை வசதியுடன் வீட்டை கட்ட வேண்டும் என எண்ணினார். கடந்த ஓராண்டாக அவர் முயற்சி எடுத்து புதிய வீட்டை கட்டினார். தான் கஷ்டப்படும்பொழுது தன்னுடன் இருந்த மனைவியின் நினைவாக அவரது மெழுகு சிலையை தன்னுடைய புது இல்லத்தில் வைக்க எண்ணினார். இதற்காக சென்னையில் சிலை தயாரிக்கும் நிறுவனத்தை தொடர்புகொண்டு ரூ.1 லட்சம் மதிப்பில் சிலிக்கான் மற்றும் பைபர் மூலம் உருவாக்கப்பட்ட தன்னுடைய மனைவியின் முழு உருவசிலையை தன்னுடைய புதிய இல்லத்தில் வரவேற்பு அறையில் வைத்துள்ளார்.

    தன்னுடைய மனைவி உயிருடன் இருக்கும் பொழுது அணிந்திருந்த தங்க நகைகள் மற்றும் தாலி ஆகியவற்றை சிலைக்கு அணிவித்துள்ளார். காதலி நினைவாக தாஜ்மஹால் கட்டிய ஷாஜகான் போல இறந்த மனைவியின் நினைவாக வீடு கட்டி, சிலை வைத்து அழகுபார்த்த இருசனின் செயல் அப்பகுதியினர் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×