என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ராமேசுவரத்தில் குவிந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்: அக்னி தீர்த்த கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம்
- பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.
- ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
காசிக்கு நிகராக கருதப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் பல்வேறு வகையில் சிறப்பு வாய்ந்தது. குறிப்பாக இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்தால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
இதன் காரணமாக அமாவாசை நாட்களில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். வருடத்தின் ஆடி, தை மற்றும் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை சிறப்பானதாக கருதப்படுகிறது.
முன்னோர்களுக்கு மகாளய அமாவாசை தினத்தன்று தர்ப்பணம் செய்வதன் மூலம் அவர்களின் நல்லாசியுடன் சிறந்த வாழ்க்கைத் துணையும், கல்வி கேள்விகளில் சிறந்த குழந்தைகள், வீடு, விளைநிலம், பசுக்கள், தொழில் அபிவிருத்தி, ஆரோக்கியம், தீர்க்காயுள் கிடைக்கும் என்பது ஐதீகம்.
அதன்படி மகாளய அமாவாசைக்காக வெள்ளிக்கிழமை முதலே பஸ், கார் மற்றும் வேன்கள் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமேசுவரத்தில் குவிந்த வண்ணம் இருந்தனர்.
மகாளய அமாவாசை தினமான இன்று அதிகாலை ராமநாதசுவாமி கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பின்னர் ஸ்படிக லிங்க பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இன்று காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். இதன் காரணமாக கடற்கரையை மறைக்கும் அளவிற்கு மக்கள் கூட்டம் இருந்தது.
தொடர்ந்து பல மணிநேரம் காத்திருந்து பக்தர்கள் ராமேசுவரம் கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடியபின் ராமநாதசுவாமி-பர்வத வர்த்தினி அம்பாளை சாமி தரிசனம் செய்தனர். காலை 10 மணி அளவில் அக்னி தீர்த்த கடலில் சுவாமி எழுந்தருளி தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
ராமேசுவரத்தில் முக்கிய இடங்களான பஸ் நிலையம், கோவில், 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி தலைமையில் பாதுகாப்புக்காக ராமேசுவரம் நகர் முழுவதும் 650-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். கடற்கரை கோவில் பகுதிகளில் சி.சி.டி.வி. கேமராக்கள் மூலமும், ரோந்து சென்றும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நகராட்சி மற்றும் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது. ராமேசுவரத்திலிருந்து பக்தர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப சென்னை, மதுரை, கோவை, திருச்சி மற்றும் பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கு இன்றும், நாளையும் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேபோல் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சேதுக்கரை, தேவிபட்டினம் கடற்கரையிலும் ஏராளமானோர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்