search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வர கவர்னர் முயற்சிக்கிறார்- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு
    X
    கூட்டத்தில் அமைச்சர் எ.வ. வேலுவிற்கு திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் வீரவாளை செல்வராஜ் எம்.எல்.ஏ., வழங்கிய காட்சி. அருகில் மேயர் தினேஷ் குமார் மற்றும் நிர்வாகிகள் உள்ளனர்.

    தமிழகத்தில் இரட்டை ஆட்சி முறையை கொண்டு வர கவர்னர் முயற்சிக்கிறார்- அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

    • கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை பலதரப்பட்ட மக்களுக்காக தி.மு.க. ஆட்சியில் செய்துள்ளது.
    • பாரதிய ஜனதாவின் சலசலப்பு தமிழகத்தில் எந்த காலத்திலும் எடுபடாது.

    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. அண்ணாகாலனி பகுதி சார்பில் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றது. கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    ஒரு காலத்தில் பெண்கள் படிக்க முடியாத நிலை இருந்தது. அப்போது பெண்கள் படிக்க வேண்டும் என்று சொன்னது திராவிட இயக்கம். முன்பெல்லாம் ஆண்களைவிட பெண்கள் குறைவாக படித்திருப்பார்கள். இப்போது காலம் மாறிவிட்டது. இப்போது ஆண்களை விட பெண்கள் அதிகம் படித்தவர்களாக இருக்கிறார்கள்.

    பெண்கள் தொடர்ந்து உயர் கல்வி படிக்க வேண்டும் என்பதற்காகத்தான் புதுமைப்பெண் திட்டத்தை கொண்டு வந்து மாணவிகளுக்கு மாதம் தோறும் ஆயிரம் உதவித்தொகை வழங்கி வருகிறார் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதனால் பெண்கள் உயர் கல்வி படிக்கும் சதவீதம் அதிகரித்து உள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி.

    கடந்த 10 ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் செய்யாத பல்வேறு திட்டங்களை பலதரப்பட்ட மக்களுக்காக தி.மு.க. ஆட்சியில் செய்துள்ளது. தமிழகத்தில் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த இரட்டை ஆட்சி முறையை கவர்னர் தற்போது கொண்டு வர முயற்சித்து வருகிறார்.

    தி.மு.க. மற்றும் கலைஞரின் உடன்பிறப்புகள் இருக்கும் வரை அதை அனுமதிக்க மாட்டோம். தாய்மொழி தமிழ் மற்றும் வர்த்தகத்திற்கான இணைப்பு மொழியாக ஆங்கிலம் இருக்கும் போது இந்தியை திணிக்க பல்வேறு வகைகளில் கவர்னர் முயற்சிக்கிறார். கவர்னர் மாளிகையில் மாணவர்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பினரை அழைத்து அவரது கருத்துக்களை திணித்து வருகிறார். தமிழக மக்களின் வரிப்பணத்தில் தமிழகத்தின் பண்பாட்டிற்கு எதிரான கருத்தை திணித்து வருவதன் காரணமாகவே தமிழக அரசுக்கும் கவர்னருக்கும் முரண்பாடு இருக்கிறதே தவிர தனிப்பட்ட முறையில் எந்த ஒரு காரணமும் இல்லை.

    பெரியார் முதல் தற்போது உள்ள தி.மு.க. அரசு வரை விரும்புவது சமூகநீதி. ஆனால் கவர்னர் கொண்டு வர முயல்வது மனுதர்மம். பாரதிய ஜனதாவின் சலசலப்பு தமிழகத்தில் எந்த காலத்திலும் எடுபடாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×