search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மீனாட்சி அம்மன் கோவில் யானை நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது- ரங்கராஜன் நரசிம்மனுக்கு அமைச்சர் பதிலடி
    X

    மீனாட்சி அம்மன் கோவில் யானை நன்றாக பராமரிக்கப்பட்டு வருகிறது- ரங்கராஜன் நரசிம்மனுக்கு அமைச்சர் பதிலடி

    • வெளிநாட்டில் இருந்து கால்நடை டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    • கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வதியின் கண் பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    மதுரை:

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான யானை பார்வதி கோவில் வளாகத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த யானைக்கு பார்வை குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு உரிய பல்வேறு சிகிச்சைகளும் கால்நடைத்துறை சார்பில் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே யானையின் ஆரோக்கியம் மற்றும் பராமரிப்பு குறித்து நமது கோவில், நமது பெருமை, நமது உரிமைகள் அறக்கட்டளையின் நிறுவனர் ரங்கராஜன் நரசிம்மன் டுவிட் ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் பராமரிப்பு முறைகள் குறித்தும், குறைகள் இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கு பதில் அளித்துள்ள தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரும், மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ.வுமான பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கூறியிருப்பதாவது:-

    யானை பார்வதிக்கு ஏற்பட்டுள்ள கண் நிலை குணப்படுத்த முடியாதது என்ற நிலை இருந்தபோதிலும், அந்த குறைபாடு தெரியாத அளவுக்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக வெளிநாட்டில் இருந்து கால்நடை டாக்டர்களை அழைத்து வந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது.

    பார்வதியை கவனிக்க கூடுதலாக நிரந்தர உதவியாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு உள்ளார். அன்னை மீனாட்சி அம்மன் மீது உண்மையான அன்பையும், நம்பிக்கையையும் வெளிப்படுத்த யானை பார்வதிக்கு கண்புரை நோய் சிகிச்சை உரிய முறையில் வழங்கப்படுகிறது. இதற்காக கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பார்வதியின் கண் பிரச்சினைக்கு சிகிச்சை அளித்து வருவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

    இதற்கெல்லாம் மேலாக கடந்த ஆண்டு, தாய்லாந்தில் இருந்து கால்நடை மருத்துவர்கள் குழு ஒன்று தாய்லாந்து தூதரக துணையுடன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்கள் யானையின் கண்களை சோதனை செய்தனர். யானையின் கண் நிலை குணப்படுத்த முடியாதது என்றும், ஆனால் மோசமடைவதற்கான சாத்தியக்கூறுகளைக் குறைக்க தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் டாக்டர்கள் குழுவினர் தெரிவித்ததாக அமைச்சர் கூறியுள்ளார்.

    அதேபோல் ரூ.23.5 லட்சம் செலவில் யானை குளித்து மகிழகுளம் கட்டப்பட்டது. 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு யானையின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதி இது என்றார்.

    நான் யானை பார்வதிக்கு உணவளிக்கிறேன் (எனது நலனுக்காக, விளம்பரத்திற்கு மாறாக) மற்றும் நான் வழக்கமாக கோவிலுக்குச் செல்லும் போது அவளுடைய நிலையை பார்த்தும், கேட்டும் தெரிந்துகொள்கிறேன். அவளது பொது உடல்நலம் குறித்த வழக்கமான அறிவிப்புகளையும் நான் அறிகிறேன்.

    எனவே ரங்கராஜன் நரசிம்மன் உண்மைகளை சரிபார்த்து, யானையின் மீது கவனம் அல்லது கவனிப்பு இல்லை என்று குற்றம் சாட்டுவதற்கு முன்பு கடந்த கால முயற்சிகளைப் படிக்கும்படி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×