search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ்- அமைச்சர் வழங்கினார்
    X

    அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 98 மாணவர்களுக்கு சான்றிதழ்- அமைச்சர் வழங்கினார்

    • புன்செய் நிலங்கள் 20 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது.
    • மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.32 கோடியாகும்.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சமூக நீதி கோட்பாட்டினை செயல்படுத்திடும் வகையில் கோவில்கள் சார்பில் 8 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள், 4 ஓதுவார் பயிற்சிப் பள்ளிகள், 3 வேத ஆகம பாடசாலை, 3 தவில் மற்றும் நாதஸ்வர பயிற்சிப் பள்ளிகள் மற்றும் 2 பிரபந்த விண்ணப்ப பாட சாலை என மொத்தம் 20 பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன.

    2022-2023 ஆண்டில் பழனி, மதுரை, திருச்செந்தூர், திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம் மற்றும் திருவல்லிக்கேணி ஆகிய 6 அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் ஓராண்டு பயிற்சி முடித்த 94 மாணவர்களுக்கும், மதுரை, மீனாட்சி சுந்தரேசுவரர் ஓதுவார் பயிற்சிப் பள்ளியில் மூன்றாண்டு பயிற்சி முடித்த 4 மாணவர்களுக்கும் ஆக மொத்தம் 98 மாணவர்களுக்கு அதற்கான சான்றிதழ்களை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று வழங்கினார்.

    மேலும், 2023 2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி, கோவில்கள் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளில் பயிற்சி முடித்தவர்கள் பணி அனுபவம் பெற்று தங்களை செம்மைப்படுத்தி கொள்ளும் வகையில் மூத்த அர்ச்சகர்களின் கீழ் ஓராண்டிற்கு அனுபவ பயிற்சி பெற மாத ஊக்கத் தொகையாக ரூ.8 ஆயிரம் பயிற்சிப் பெறும் கோவில்களில் இருந்து வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அதன்படி கோவில்களில் பணிபுரியும் மூத்த அர்ச்சகர்களின் கீழ் அனுபவ பயிற்சி பெறுவதற்கு 2007 2008-ம் ஆண்டு அர்ச்சகர் பயிற்சி நிறைவு செய்த 71 மாணவர்களும், 2022-2023-ம் ஆண்டு பயிற்சி நிறைவு செய்த 94 மாணவர்களும் ஆக மொத்தம் 165 மாணவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு அனுபவ பயிற்சி வழங்க அரசாணையில் தெரிவித்துள்ள வழி காட்டுதல்களின்படி செயல்பட சம்மந்தப்பட்ட மண்டல இணை ஆணையர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுறுத்தலின்படி இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்குச் சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி, பிறவி மருந்தீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நகரப்பகுதியில் அமைந்துள்ள 2 ஏக்கர் 72 சென்ட் நிலம் தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பில் இருந்தது. அதே போல மன்னார்குடி வட்டம், கோட்டூர், கொழுந்தீஸ்வரசுவாமி கோவிலுக்கு சொந்தமாக 6 ஏக்கர் 89 சென்ட் பரப்பிலான புன்செய் நிலங்கள் 20 நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்தது. இந்த 2 ஆக்கிரமிப்புகளும் மீட்கப்பட்டு கோவில் வசம் சுவாதீனம் பெறப்பட்டு உள்ளது. அந்நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு எல்லை கற்கள் நட்டு பாதுகாக்கப் பட்டுள்ளன. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.32 கோடியாகும்.

    Next Story
    ×