search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கும்பாபிஷேக  புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலரை விரைவில் இந்து அறநிலையத்துறை வெளியிடும்: அமைச்சர்
    X

    கும்பாபிஷேக புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலரை விரைவில் இந்து அறநிலையத்துறை வெளியிடும்: அமைச்சர்

    • 1,030 கோவில்கள் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்ற புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலரை விரைவில் இந்து சமய அறநிலையத்துறை வெளியிடும்.
    • ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    சென்னை மேற்கு மாம்பலத்தில் புகழ்பெற்ற காசி விசுவநாதர் கோவிலில் இன்று காலை 7.15 மணியளவில் ராஜ கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களின் மீதும் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர். அவர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

    இந்நிகழ்வில் கலந்து கொண்ட இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்ட ஆதீனங்களுக்கும், உபயதாரர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கினார்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்ற பின், தொன்மை வாய்ந்த கோவில்களை புனரமைத்து திருப்பணிகள் மேற்கொள்ளவும், ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் முடிந்த பிறகு குடமுழுக்கு நடைபெற வேண்டிய கோவில்களுக்கு உடனடியாக திருப்பணிகள் செய்து குடமுழுக்கு நடத்திடவும் நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.

    அந்த வகையில் குடமுழுக்கு 400 ஆண்டுகளுக்கு பிறகு திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலுக்கும், 300 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சிபுரம் மாவட்டம், சாத்தனஞ்சேரி, கரிய மாணிக்க வரதராஜ பெருமாள் கோவிலுக்கும், 150 ஆண்டுகளுக்கு பிறகு ராணிப்பேட்டை மாவட்டம், தக்கோலம், கங்காதீஸ்வரர் கோவிலுக்கும், 100 ஆண்டுகளுக்கு பிறகு எண்ணற்ற கோவில்களுக்கும் இந்த ஆட்சியில் தான் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்றுள்ளது.

    கிராமப்புற கோவில்கள் மற்றும் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு திருப்பணிகள் மேற்கொள்ள ஆண்டு தோறும் தலா 1,000 என்ற எண்ணிக்கை 1,250 ஆகவும், நிதியுதவி தலா ரூ.1 லட்சம் என்பது ரூ.2 லட்சமாக உயர்த்தப்பட்டு இதுவரை 2,500 கிராமப்புற கோவில்களுக்கும் 2,500 ஆதி திராவிடர்கள் பழங்குடியினர் வசிக்கின்ற பகுதியில் இருக்கின்ற கோவில்களுக்கு ரூ.100 கோடி நிதியுதவியாக வழங்கப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 1,000 ஆண்டுகள் முற்பட்ட தொன்மையான கோவில்களை புனரமைத்து திருப்பணி மேற்கொள்ள 2022 2023-ம் நிதியாண்டில் ரூ.100 கோடியும், 2023-24-ம் நிதியாண்டிற்கு ரூ.100 கோடியும் அரசு மானியமாக வழங்கியுள்ளார்கள். அதன்படி 2022 2023-ம் நிதியாண்டில் ரூ.140 கோடி மதிப்பீட்டில் 113 தொன்மையான கோவில்களும், 2023-24-ம் நிதியாண்டில் ரூ.150 கோடி மதிப்பீட்டில் 84 கோவில்களும் அரசு மானியம், கோவில் நிதி மற்றும் உபயதாரர்கள் பங்களிப்புடன் புனரமைத்து பாதுகாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் பயன்பெற்று வந்த கோவில்களின் வைப்பு நிதி ரூ.ஒரு லட்சத்தை 2 லட்சமாக உயர்த்தி அதற்கான நிதியுதவி ரூ.129.50 கோடியை ஒரே தவணையில் வழங்கியவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

    மேலும், ஒரு கால பூஜை திட்டத்தில் 2022-2023-ம் நிதியாண்டில் 2,000 கோவில்களை இணைத்திட ரூ.40 கோடி வழங்கியதோடு, 2023-2024-ம் நிதியாண்டில் 2,000 கோவில்களை இணைக்க அரசு நிதியாக ரூ.30 கோடியும், இந்து சமய அறநிலையத்துறை பொது நல நிதியாக ரூ.10 கோடியும் வழங்க உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் 15,000 கோவில்கள் பயன்பெற்று வருகின்றன.

    ஒரு கால பூஜை திட்டத்தில் கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதாந்திர ஊக்கத் தொகையாக ரூ.1,000 வழங்கப்பட்டு வருகிறது.

    முதலமைச்சர் மு.கஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற நாள் முதல் இன்று வரை 1,030 கோவில்களுக்கு குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா மகிழ்ச்சியோடு நிறைவடைந்துள்ளது. வெகு விரைவில் 1,030 கோவில்கள் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா நடைபெற்ற புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு மலரை விரைவில் இந்து சமய அறநிலையத்துறை வெளியிடும்.

    இவ்வாறு அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

    Next Story
    ×