search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நீட் தேர்வு விலக்கு பெறும் வரை தி.மு.க. ஓயாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
    X

    நீட் தேர்வு விலக்கு பெறும் வரை தி.மு.க. ஓயாது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

    • நீட் தேர்வால் ஏழை, எளிய மாணவர்கள் மருத்துவராகும் கனவு பறிக்கப்படுகிறது.
    • ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் நீட் தேர்வுக்கு எதிராகவே திமுக இருந்து வருகிறது.

    சென்னை:

    சென்னை அண்ணாநகர் தெற்கு பகுதி செயலாளரும், மாநகராட்சி ஆளும் கட்சித் தலைவருமான ராமலிங்கம் இல்லத் திருமணம் விஜய் ஸ்ரீ மஹாலில் இன்று காலை நடைபெற்றது.

    மணமக்கள் ஹேமலதா-ராஜராஜன் திருமணத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இன்றைக்கு ஒரு பாசிச ஆட்சி, மத்தியிலே ஆண்டு கொண்டிருக்கிற மோடி ஆட்சியை எதிர்க்கிற துணிச்சல் இன்று தி.மு.க.வுக்கு இருக்கிறது என்றால் ராமலிங்கம் போன்ற தொண்டர்கள் இயக்கத்தில் உழைத்துக் கொண்டிருக்கும் காரணம் தான். இன்று தி.மு.க.வின் உண்ணாவிரத அறப்போராட்டம் தமிழ்நாடு முழுவதும் நடந்து கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். பல பேர் அங்கு போக முடியவில்லையே என்று வருத்தத்தோடு இருப்பதை நான் உணராமல் இல்லை.

    ஆளும் கட்சியாக இருக்கும் போது இந்த அறப்போராட்டம் நடத்த வேண்டிய அவசியம் எதனால் ஏற்பட்டது என்பதை நீங்கள் உணர்ந்து பார்க்க வேண்டும்.

    இங்கு மணமக்கள் இருவரும் டாக்டர்கள். நீட் தேர்வு எழுதி பாஸ் செய்து வந்து உட்காரவில்லை. அப்போதெல்லாம் நீட் கிடையாது. அதனால் ஏழை-எளிய நடுத்தர குடும்பத்தில் பிறந்து இருக்க கூடியவர்கள், தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெறக் கூடிய மதிப்பெண்களை பெற்று டாக்டருக்கு படிக்கும் வாய்ப்பு இருந்தது.

    இப்போது நீட் எழுதி தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவர்களாக வர முடியும் என்ற நிலை இன்று வந்துள்ளது. அதனால் தான் தொடர்ந்து ஏற்கனவே இந்த நீட்டை கொண்டு வந்திருந்தாலும், அதை அன்றைக்கு நாம் கடுமையாக எதிர்த்தோம். ஆனாலும் அதை நிறைவேற்ற முடியாத நிலை இருந்தது.

    அதற்கு பிறகு மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி வந்த பிறகு அதை கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டார்கள்.

    அப்போது கூட சட்டமன்றத்தில் நாம் தீர்மானம் போட்டு அனுப்பினோம். எதிர்க்கட்சியாக இருக்கும் போது கூட அதற்கு அழுத்தம் கொடுத்து அதை ஆதரித்து அந்த தீர்மானத்தை நிறைவேற்றி, மசோதாவை கவர்னருக்கு அனுப்பி அதன் பிறகு அது டெல்லிக்கு ஜனாதிபதிக்கு செல்கிறது.

    ஆனால் ஜனாதிபதிக்கு சென்ற அந்த மசோதா ஆளும் கட்சியாக அ.தி.மு.க. இருந்த போது அது திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது.

    திருப்பி அனுப்பிய செய்தியை கூட ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. அதை வெளியில் சொல்லவில்லை. சட்டமன்றம் நடந்து கொண்டிருந்த போது கூட சொல்லவில்லை. ஆனால் அதை நீதிமன்றம் மூலம் நாம் தெரிந்து கொண்டு உடனடியாக அந்த பிரச்சனையை எழுப்பினோம்.

    அது ஓராண்டு காலமாக சொல்லாமல் இருந்த காரணத்தால் அது செல்லுபடியாகாத நிலைக்கு போய் விட்டது. அதனால்தான் தேர்தல் நேரத்தில் நாங்கள் சொன்னோம்.

    தி.மு.க. ஆட்சிக்கு வருகிற போது நிச்சயமாக இதை நிறைவேற்றுகிற முயற்சியில் ஈடுபடுவோம் என்று கூறினோம். நீட் நுழைவுத் தேர்வை எதிர்ப்போம். அதை ரத்து செய்வதற்கான எல்லா முயற்சியிலும் ஈடுபடுவோம் என்று தெளிவாக எடுத்து சொன்னோம்.

    அதற்கு பிறகு தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்தோம். சட்டமன்றத்திலே மீண்டும் அந்த மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றினோம்.

    எல்லா கட்சியும் ஆதரித்தது. இன்று எதிர்க்கட்சியாக இருக்கக் கூடிய அ.தி.மு.க.வும் ஆதரித்தது. இந்த மசோதாவை அனுப்பி வைத்தோம். கவர்னரிடம் இருந்தது.

    அதற்கு பிறகு அதை அவர் அனுப்பவில்லை. நாம் போராட்டம் நடத்திய பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    அதற்கு பிறகு இன்றுள்ள கவர்னரிடமும் அனுப்பி வைத்தோம். அதை அவர் டெல்லிக்கு அனுப்பாமல் இங்கேயே வைத்திருந்தார். பின்னர் பல்வேறு நிகழ்வுக்கு பிறகு டெல்லிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இன்னும் அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. ஆனாலும் நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதற்காக பல்வேறு கட்டப் போராட்டங்களும் நடந்து வருகிறது. எனவே, நீட் தேர்வில் விலக்கு பெறும் வரை தி.மு.க. ஓயாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    திருமண விழாவில் அமைச்சர் துரைமுருகன், மாவட்டக் கழக செயலாளர் நே.சிற்றரசு மற்றும் கழக நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர்.

    Next Story
    ×