search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மின்கம்பத்தில் ஏறும் ஊழியர்களுக்கு நவீன பாதுகாப்பு சாதனம்
    X

    மின்கம்பத்தில் ஏறும் ஊழியர்களுக்கு நவீன பாதுகாப்பு சாதனம்

    • பொதுவாக ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்த பின்புதான் மின்கம்பத்தில் ஏறுவார்கள்.
    • அசாதரண சூழ்நிலையில் வேறு இணைப்புகளில் இருந்து மின் ஒயரில் மின்சாரம் வந்துவிடும்.

    சென்னை:

    மின்கம்பத்தில் ஏறி பழுதுகளை நீக்கும் தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானம் கழக ஊழியர்களின் பணி மகத்தானது. எந்த நேரத்தில் மின் பிரச்சனை ஏற்பட்டாலும், அவர்கள் தான் இடுப்பில் கயிறு கட்டி மின்கம்பத்தில் ஏறி பழுதினை நீக்குவார்கள். அதேபோல் டிரான்ஸ்பார்மர் மற்றும் உயர் அழுத்த மின் கோபுரங்களில் பிரச்சனை என்றாலும் அவர்கள்தான் அதனை சரி செய்வார்கள். இதுபோன்ற பணியின்போது விபத்துகள் ஏற்பட்டு அந்த ஊழியர்கள் தங்கள் உயிரையும் துறக்கின்றனர்.

    இவர்கள் பாதுகாப்புடன் பணியாற்ற வேண்டிய நடவடிக்கைகளை மின்சார வாரியம் எடுத்து வருகிறது. இந்த ஊழியர்களுக்கு ஏற்கனவே ஒயரில் மின்சாரம் பாய்வதை தடுக்கும் எஸ்.ராடு சாதனம் கொடுக்கப்பட்டு உள்ளது. அதாவது இவர்கள் மின்கம்பத்தில் ஏறுவதற்கு முன்னரே இந்த சாதனத்தை மின் ஒயருக்கும், பூமிக்கும் இணைத்து கட்டவேண்டும். அப்போது அந்த மின் ஒயரில் மின்சாரம் வருவது தடுக்கப்படும். அதேபோல் ஹெல்மெட், இடுப்பு கயிறு, மின்சாரம் ஒயரில் செல்கிறதா என்பதனை கண்டறிய டெஸ்டர் போன்ற சாதனங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    இந்த நிலையில் இவர்களது பாதுகாப்பு வசதியை மேலும் மேம்படுத்தும் வகையில் "வோல்டேஜ் டிடெக்டர்" என்ற மின் அழுத்த கண்டுபிடிப்பு கருவி ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த பணி கடந்த 4 மாதங்களுக்கு முன்பே தொடங்கியது. தேர்தல் வந்ததால் இதில் தொய்வு ஏற்பட்டது. தற்போது இந்த கருவி அனைத்து ஊழியர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த கருவியை கையில் கடிகாரம் கட்டுவது போல் கட்டி கொள்ளலாம்.

    பொதுவாக ஊழியர்கள் மின் இணைப்பை துண்டித்த பின்புதான் மின்கம்பத்தில் ஏறுவார்கள். அசாதரண சூழ்நிலையில் வேறு இணைப்புகளில் இருந்து மின் ஒயரில் மின்சாரம் வந்துவிடும். இனி இந்த சாதனத்தை கட்டிக்கொண்டு ஏறினால், 1 அடி தூரத்திலேயே விளக்கு எரிந்து அலாரம் போல் சத்தமிட்டு சிக்னல் கொடுத்துவிடும். உயர் அழுத்த மின்ஒயராக இருந்தால் 1 மீட்டர் தூரத்திலேயே அலாரம் அடித்து விளக்கு எரியும். அதன் மூலம் மின்கம்பத்தில் ஏறும் ஊழியர்கள் சுதாரித்து கொள்வார்கள். இந்த சாதனம் மழைகாலங்களில் பெரும் உதவிகரமாக இருக்கும்.

    இந்த சாதனத்தை சென்னை அண்ணாநகர் மின்சார அலுவலகத்திற்கு உட்பட்ட 93 ஊழியர்களுக்கு நேற்று வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் சென்னை மின் பகிர்மான வட்டம் மேற்கு திட்டம் மேற்பார்வை பொறியாளர் சித்ரா, அண்ணாநகர் கோட்ட செயற்பொறியாளர் அன்பரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×