என் மலர்
தமிழ்நாடு
நாய்க்குட்டியை தூக்கி சென்று கொஞ்சி விளையாடும் குரங்கு- சமூக வலைதளங்களில் வைரல் வீடியோ
- அதிசய நிகழ்ச்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது.
- நாயுடன் குரங்கு விளையாடுவதை காண சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர்.
கடலூர்:
கடலூர் அடுத்த குடிகாடு பகுதியில் ஒரு வீட்டில் நாய்க்குட்டி வளர்த்து வருகின்றனர். அந்த நாய்க்குட்டியை, பார்ப்பதற்கு ஒரு குரங்கு தினமும் குடிகாடு கிராமத்திற்கு வருகிறது.
பின்னர் சாலையில் சுற்றித்திரியும் அந்த நாய்க்குட்டியை குரங்கு லாவமாக தூக்கிக்கொண்டு அதே பகுதியில் உள்ள உயரமான கட்டிடத்திற்கு பாதுகாப்பாக கொண்டு செல்கிறது. பின்னர் அந்த நாய்க்குட்டியுடன் குரங்கு ஆனந்தமாக விளையாடி மகிழ்கிறது.
இது மட்டுமின்றி குரங்கு தனது குட்டி குரங்குகளுக்கு எப்படி பேன் பார்க்குமோ அதேபோல் அந்த குட்டி நாய்க்கும் பேன் பார்ப்பது போல் பாவனை செய்கிறது. மேலும் உயரமான கட்டிடத்தில் நாய்க்குட்டி விளையாடுவது மட்டுமின்றி குரங்குடன் எந்தவித சண்டையும் போடாமல் ஆனந்தமாக இருப்பதை அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஆனந்தமாகவும், வியப்புடனும் பார்த்து வருகின்றனர்.
தினமும் அந்த வீட்டு பகுதிக்கு வரும் குரங்கு, நாய்க்குட்டியை தூக்கிக்கொண்டு தனக்கு பிடித்தமான இடத்தில் வைத்துக்கொண்டு ஆனந்தமாக விளையாடி மகிழ்கிறது.
பெரும்பாலும் குரங்குகள் மற்ற பிராணிகளுடன் விளையாடுவதை விரும்பாமல் மரங்களை விட்டு மரங்கள் தாவியும் தனக்கான உலகத்தில் யாரையும் அண்டவிடாமல் பாதுகாப்பாக இருந்து வரும் நிலையில், குரங்கு ஒன்று நாய்க்குட்டியை தினமும் தூக்கி சென்று விளையாடி விட்டு மீண்டும் அதே பகுதியில் இறக்கி விட்டு செல்வது அந்த பகுதி பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது இந்த அதிசய நிகழ்ச்சி வீடியோவாக சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி வருகின்றது. நாயுடன் குரங்கு விளையாடுவதை காண சுற்றுவட்டார கிராம பொதுமக்கள் ஆவலுடன் பார்த்து செல்கின்றனர். தங்களது செல்போன்களிலும் படம் பிடித்து கொள்கின்றனர்.