search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்லைன் மூலம் மேலும் 42 சேவைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள புதிய வசதி
    X

    ஆன்லைன் மூலம் மேலும் 42 சேவைகளை பொதுமக்கள் பெற்றுக்கொள்ள புதிய வசதி

    • 42 சேவைகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல் பொதுமக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது முன் மொழியப்பட்டுள்ள 42 சேவைகளில் 22 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உரிமம் தொடர்பானவை ஆகும்.

    சென்னை:

    தமிழக போக்குவரத்து துறை தனது டிஜிட்டல் சேவையை மென்மேலும் விரிவுபடுத்தி வருகிறது. அது மட்டுமல்லாமல் மோட்டார் வாகன சட்டம் மற்றும் நிர்வாகம் தொடர்பான மானிய கோரிக்கைக்கு கடந்த மார்ச் 23-ந்தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பதிலளித்து பேசினார்.

    அப்போது அவர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு மக்கள் செல்லாமல் ஆன்லைன் வாயிலாக தங்களது தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள மேலும் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட உள்ளதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து இப்போது வட்டாரப் போக்குவரத்து அலுவலக சேவைகளில் புதிய மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

    அதன்படி 42 சேவைகள் வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு செல்லாமல் பொதுமக்கள் தங்களது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது முன் மொழியப்பட்டுள்ள 42 சேவைகளில் 22 ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்கள் உரிமம் தொடர்பானவை ஆகும். மீதமுள்ளவை மோட்டார் வாகனங்கள் மற்றும் அனுமதி பத்திரங்கள் தொடர்பானவை ஆகும்.

    ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு சான்றிதழ்களில் பெயர், முகவரி போன்றவற்றை மாற்றவும், நகல் எல்.எல்.ஆர். உரிமங்கள் பெற்றிடவும், மோட்டார் வாகனங்களின் தற்காலிக பதிவு பெறவும், வாகன பதிவுக்கு தடையில்லா சான்றிதழ் பெறவும், மொபைல் எண்ணை புதுப்பிக்கவும், வாகனங்களை மற்ற இடங்களுக்கு மாற்றும்போது நகல் மோட்டார் வாகன ஆவணங்கள் அல்லது தடையில்லா சான்றிதழ் பெறுவதற்கும் இனிமேல் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களை நாட வேண்டிய அவசியம் இல்லை.

    மேலும் மோட்டார் வாகனங்களின் தற்காலிக பதிவுக்கான விண்ணப்பம் நகல், பதிவு சான்றிதலுக்கான விண்ணப்பம், ஆர்.சி.க்கு என்.ஓ.சி. வழங்குதல், ஆர்.சி.யில் முகவரி மாற்றம், புதிய அனுமதி வழங்கல், நகல் அனுமதி மற்றும் பரிமாற்றம் ஆகியவை ஆன்லைனில் செய்து கொள்ளலாம்.

    இது தரகர்கள் அல்லது முகவர்களின் செல்வாக்கை குறைப்பதோடு லஞ்சத்தையும் குறைக்கும் என போக்குவரத்து ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்த புதிய திருத்தம் தமிழக முழுவதும் இந்த வாரம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×