search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வடசென்னை மக்களை மிரட்டும் தெரு நாய்கள்
    X

    வடசென்னை மக்களை மிரட்டும் தெரு நாய்கள்

    • அனைத்து தெருக்களிலும் கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றி வருகின்றன.
    • கொடுங்கையூர் குப்பை கிடங்கு தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் கூடாரமாக உள்ளது.

    ராயபுரம்:

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தெரு நாய்களின் தொல்லை சமீபகாலமாக அதிகரித்து உள்ளது. நாய்களை பிடித்து மாநகராட்சி ஊழியர்கள் அவற்றிற்கு தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்தாலும் அதன் எண்ணிக்கை குறையவில்லை. அனைத்து தெருக்களிலும் கூட்டம், கூட்டமாக நாய்கள் சுற்றி வருகின்றன.

    குறிப்பாக ராயபுரம், கொடுங்கையூர், பெரம்பூர், வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட வட சென்னை பகுதிகளில் தெரு நாய்கள் பொதுமக்களை மிரட்டி வருகின்றன. இரவு 7 மணிக்கு மேல் சாலை மற்றும் தெருக்களில் நடந்து செல்பவர்களையும், வாகனங்களில் செல்பவர்களையும் விரட்டி, விரட்டி கடிக்க பாய்கின்றன.

    கொடுங்கையூர் குப்பை கிடங்கு தெருநாய்களுக்கு உணவு அளிக்கும் கூடாரமாக உள்ளது. இதனால் குப்பை கிடங்கை சுற்றி உள்ள இடங்களில் நாய்களின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்து உள்ளன. கொடுங்கையூர், எழில் நகர், ஆர்.ஆர் நகர், கிருஷ்ணமூர்த்தி நகர், புளியந்தோப்பு, பெரம்பூர், ஜமாலியா நகர், ஹைதர்கார்டன், எஸ்.பி.ஐ. ஆபிசர் காலனி மற்றும் பட்டாளம் பகுதிகளில் நாய்கள் அட்டகாசம் தாங்க முடியாத அளவுக்கு காணப்படுகிறது. இரவு நேரத்தில் செல்பவர்களை குறைந்தது 6 நாய்களுக்கு மேல் கூட்டமாக துரத்துகின்றன. இதனால் இரவு நேரத்தில் வெளியே செல்லவும், பணிமுடிந்து வீட்டிற்கு வரவும் பொது மக்கள் அச்சம் அடையும் நிலை உள்ளது.

    இதேபோல் சூளை, டி.கே.முதலி தெரு உள்ளிட்ட பகுதிகளில் இரவு நேரங்களில் மோட்டார் சைக்கிளில் செல்பவர்களை 10 முதல் 20 நாய்கள் வரை படையெடுத்து வந்து மிரட்டுகின்றன.

    சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் ராயபுரம் மண்டலத்தில் 90 சதவீதம் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகரித்து இருப்பது தெரிந்தது. வழக்கமாக 4 ஆண்டுக்கு ஒரு முறை தெருநாய்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தவேண்டும். ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் பல்வேறு காரணங்களால் இந்த கணக்கெடுப்பு கடந்த 2022-ம் ஆண்டுக்கு பின்னர் நடத்தப்படவில்லை. ஆனால் ராயபுரம் மண்டலத்தில் மட்டும் கடந்த ஆண்டு நடத்தப்பட்டது. 2018-ம் ஆண்டு 2100-ஆக இருந்த தெருநாய்களின் எண்ணிக்கை 2023-ம் அண்டு 3900 ஆக உயர்ந்து உள்ளது.


    இதைத்தொடர்ந்து ராயபுரம் மண்டலத்தில் உள்ள தெரு நாய்களை பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    இதுகுறித்து தண்டையார்பேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜ் கூறும்போது, மாநகராட்சியில் தற்போது 80 நாய் பிடிப்பவர்களும், 15 கால்நடை டாக்டர்களும் உள்ளனர். மண்டலம் வாரியாக கணக்கெடுப்பு நடத்தி ஆய்வு செய்து உறுதியான தெருநாய்களின் எண்ணிக்கை பற்றி தெரியாமல் எந்த முடிவுகளையும் எடுக்க முடியாது.

    எனவே தெருநாய்கள் பற்றி விரைவில கணக்கெடுப்பு நடத்த வேண்டும். ராயபுரத்தில் மட்டும் தெரு நாய்கள் கணக்கெடுப்பு நடந்து உள்ளது. ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த கணக்கெடுப்பு மற்ற மண்டலங்களில் நடைபெறவில்லை. கொடுங்கையூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அங்குள்ள குப்பைக் கிடங்கு தெரு விலங்குகளுக்கு உணவளிக்கும் இடமாக மாறி உள்ளது. மாலை மற்றும் இரவு நேரங்களில் தெருக்களில் நடமாடவே அச்சமாக உள்ளது. பெரும்பாலான நாய்கள் தெரு ஓரங்களில் தேங்கி கிடக்கும் கழிவுகளில் உணவு தேடுகின்றன. நாய்களை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுக்க வேண்டும் என்றார்.

    இது தொடர்பாக மாநகராட்சி வடக்கு மண்டல அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த ஜனவரி 1-ந் தேதி முதல் பிப்ரவரி 20-ந் தேதி வரை தெருநாய்கள் தொடர்பாக 5 மண்டலங்களில் மொத்தம் 784 புகார்கள் வந்துள்ளன. 924 நாய்கள் பிடிக்கப்பட்டு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் கருத்தடை செய்யப்பட்டு உள்ளன. புயல் மற்றும் அதைத் தொடர்ந்து நிவாரணப் பணிகள் காரணமாக தெரு நாய்கள் பற்றிய கணக்கெடுப்பு தாமதமானது. விரைவில் தெருநாய்கள் பற்றிய கணக்கெடுப்பு நடைபெறும். பொதுமக்கள் தங்கள் புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம். புகார்கள் மீது இரண்டு நாட்களுக்குள் தீர்வு காணப்படும் என்றார்.

    Next Story
    ×