search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் பலி
    X

    தனியார் தொழிற்சாலை பேருந்து மோதி பாதயாத்திரை சென்ற பெண் பக்தர் பலி

    • தனியார் பஞ்சாலைக்கு சொந்தமான பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது.
    • விபத்து நடந்து பெண் பக்தர் இறந்து கிடந்தும் போலீசார் நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த மற்ற பக்தர்கள் தேசியநெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    மணப்பாறை:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பழனிக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.

    இதில் ஒரு குழுவினர் இன்று காலை திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மணப்பாறையை அடுத்த ஆசாத் ரோடு அருகே உள்ள ஒரு தனியார் ஓட்டல் அருகே சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது பின்னால் வந்த தனியார் பஞ்சாலைக்கு சொந்தமான பேருந்து திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. மேலும் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது மோதியது. இதில் கும்பகோணம் துக்காம்பாளையம் பகுதியை சேர்ந்த உமாராணி (வயது 60) தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    மேலும் மாதேஸ்வரி (65), சிவகாமி (55), மூக்காயி (65) உள்ளிட்ட 3 பேர் படுகாயமடைந்தனர். அவர்களை உடன் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மணப்பாறை மற்றும் திருச்சி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே விபத்து நடந்து பெண் பக்தர் இறந்து கிடந்தும் போலீசார் நீண்ட நேரமாகியும் வரவில்லை என்று கூறி ஆத்திரமடைந்த மற்ற பக்தர்கள் தேசியநெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

    மேலும் அவர்கள் ஆத்திரம் அடைந்து விபத்தை ஏற்படுத்திய தனியார் ஆலையின் பேருந்து கண்ணாடியை அடித்து நொறுக்கினர். பின்னர் சம்பவம் பற்றி தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தைக்கு பின் பக்தர்கள் மறியலை கைவிட்டனர்.

    பின்னர் இறந்தவரின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து மற்றும் சாலை மறியலால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Next Story
    ×