search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    2 ஆண்டுக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21-ந் தேதி தொடக்கம்
    X

    2 ஆண்டுக்கு பிறகு பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு 21-ந் தேதி தொடக்கம்

    • மாநில பாடத்திட்டத்தில் படிக்க கூடிய மாணவர்களுக்கு 4 மாதம் கற்பித்தல் பணி நடந்து உள்ளது.
    • காலாண்டு தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    சென்னை:

    கொரோனா தொற்று பரவலால் 2 வருடம் பள்ளிகள் முழுமையாக நடைபெறாததால் பாடங்களை நடத்த முடியவில்லை. பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டாலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்பு நடத்துவதில் பல்வேறு சிரமம் ஏற்பட்டது.

    1 முதல் 9-ம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி அளிக்கப்பட்டனர். 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு பாடங்கள் குறைக்கப்பட்டு பொதுத்தேர்வு நடத்தப்பட்டன.

    இந்த ஆண்டு பள்ளிகள் ஜூன் மாதம் திறக்கப்பட்டு தொடர்ச்சியாக வகுப்புகள் நடைப்பெற்று வருகின்றன. அனைத்து வகுப்புகளும் வழக்கம்போல் நடந்து வருகிறது. தொடக்கத்தில் சற்று தொய்வு ஏற்பட்ட போதும் பின்னர் பாடத்திட்டங்கள் முழு வீச்சில் நடத்த தொடங்கினார்கள்.

    மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்கள் மட்டுமின்றி சி.பி.எஸ்.இ. பள்ளியிலும் விடுமுறை விடாமல் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்த நிலையில் காலாண்டு தேர்வு 2 வருடத்திற்கு பிறகு நடப்பாண்டில் நடத்த கல்வித்துறை முடிவு செய்து அதற்கான அட்டவணை தயாரித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பியுள்ளது.

    6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வருகிற 21-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறுகிறது. தேர்வு அட்டவணையில் குறிப்பிட்ட நாட்களில் தேர்வினை நடத்தி முடிக்க தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

    மாநில பாடத்திட்டத்தில் படிக்க கூடிய மாணவர்களுக்கு 4 மாதம் கற்பித்தல் பணி நடந்து உள்ளது. காலாண்டு தேர்வை அனைத்து மாணவர்களும் எழுதுவதை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

    சென்னையில் அரசு, உதவி பெறும் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் "ஆப்சென்ட்" ஆகாமல் தேர்வு எழுத ஆசிரியர்கள் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும்.

    வகுப்புக்கு வராமல் உள்ள மாணவர்களை கண்டுபிடித்து அவர்களை தேர்வு எழுத அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மாணவர்கள் பள்ளிக்கு வருவதற்கு பெற்றோர் உதவிட வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

    காலாண்டு தேர்வை மாணவர்கள் சிறப்பாக எழுத ஆசிரியர்கள் கற்றல் கற்பித்தல் பணியை விரைவாக முடித்து திருப்புதல் செய்ய வேண்டும் என கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

    Next Story
    ×