search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முதலாம் ஆண்டு மாணவரை மொட்டையடித்து நிர்வாணப்படுத்தி ராகிங்: சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது
    X

    முதலாம் ஆண்டு மாணவரை மொட்டையடித்து நிர்வாணப்படுத்தி "ராகிங்": சீனியர் மாணவர்கள் 7 பேர் கைது

    • போலீசார் விசாரணையில், முதலாம் ஆண்டு மாணவரை, 2-ம் ஆண்டு மாணவர்கள் தாக்கியது உறுதியானது.
    • போலீசார் மாணவரை தாக்கி மொட்டையடித்து ராகிங் செய்து மிரட்டிய 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேரை கைது செய்தனர்.

    கோவை:

    கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அதிகளவில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த மாணவர்களுக்காக கல்லூரி வளாகத்தில் விடுதி ஒன்றும் செயல்பட்டு வருகிறது.

    இந்த கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த 18 வயது மாணவர். இவர் விடுதியில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்தார்.

    சம்பவத்தன்று கல்லூரி முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். இரவில் இவரது அறைக்கு அதே கல்லூரியில் படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர்கள் வந்துள்ளனர்.

    அவர்கள், மாணவரை தங்கள் அறைக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் அவர் வர மறுத்தார். இருந்தபோதிலும் சக மாணவர்கள், அவரை வலுக்கட்டாயமாக தங்கள் அறைக்கு இழுத்து சென்றனர்.

    பின்னர் அறைக்குள் பிடித்து தள்ளிவிட்டு அறையை அடைத்தனர். தொடர்ந்து 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேரும் சேர்ந்து, முதலாம் ஆண்டு மாணவரிடம், எங்களுக்கு மது குடிக்க பணம் வேண்டும். நீ பணம் வைத்திருக்கிறாய். உடனே பணத்தை தா என்றனர்.

    அவர் அதற்கு என்னிடம் பணம் இல்லை என கூறியதுடன், நான் எதற்கு தர வேண்டும் என கேள்வி எழுப்பினார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த 2-ம் ஆண்டு மாணவர்கள், முதலாம் ஆண்டு மாணவரை சரமாரியாக தாக்கினர். மேலும் அங்கிருந்த கத்தியை எடுத்து வாலிபருக்கு மொட்டையடித்து, அவரது உடைகளை களைந்து நிர்வாணப்படுத்தினர்.

    பின்னர் அதனை தங்களது செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து கொண்டனர். தொடர்ந்து அதிகாலை வரை தங்கள் அறையில் அடைத்து வைத்து மாணவரை தகாத வார்த்தைகளால் பேசியும், தாக்கியும் உள்ளனர்.

    அதிகாலைக்கு பிறகு அறையை திறந்து விட்டு, இங்கு நடந்தவற்றை வெளியில் சொல்லக்கூடாது. அப்படி கூறினால் உன்னை கொன்றுவிடுவோம் என மிரட்டலும் விடுத்தனர்.

    அவர்களிடம் இருந்து தப்பித்தால் போதும் என மாணவர் அங்கிருந்து தனது அறைக்கு ஓடி வந்தார். பின்னர் தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் போனில் கூறி அழுதார்.

    இதை கேட்டதும் அதிர்ச்சியான அவர்கள், உடனடியாக கல்லூரிக்கு விரைந்து வந்தனர். தங்கள் மகன் மொட்டை தலையுடன், காயத்துடன் இருப்பதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் மற்றும் பீளமேடு போலீசில் புகார் கொடுத்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில், முதலாம் ஆண்டு மாணவரை, 2-ம் ஆண்டு மாணவர்கள் தாக்கியது உறுதியானது. இதையடுத்து போலீசார் மாணவரை தாக்கி மொட்டையடித்து ராகிங் செய்து மிரட்டிய 2-ம் ஆண்டு மாணவர்கள் 7 பேரை கைது செய்தனர்.

    மேலும் அவர்கள் மீது ராக்கிங் சட்ட பிரிவுகள் உட்பட சட்ட விரோதமாக கூடுதல், ஆபாசமாக பேசுதல், காயம் ஏற்படுத்துதல், ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், கொலை மிரட்டல் ஆகிய 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

    கோவையில் கல்லூரிகளில் ராகிங் என்பது பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில், 7 மாணவர்கள் சேர்ந்து முதலாம் ஆண்டு மாணவரை ராகிங் செய்து தாக்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×