search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ராகுல்காந்தி யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார்
    X

    ராகுல்காந்தி யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் மும்பை புறப்பட்டார்

    • யாத்திரையில் ராகுல் காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.
    • மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    அகில இந்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கடந்த 2022-ம் ஆண்டு பாரத ஒற்றுமை யாத்திரையை செப்டம்பரில் கன்னியாகுமரியில் தொடங்கினார். இந்த யாத்திரையை 2023-ம் ஆண்டு ஜனவரியில் ஸ்ரீநகரில் நிறைவு செய்தார்.

    அதன் பிறகு 'பாரத ஒற்றுமை நீதி யாத்திரை' என்ற பெயரில் 2-வது கட்ட யாத்திரையை கடந்த ஜனவரி 14-ந்தேதி மணிப்பூரில் தொடங்கி மும்பை தாராவி வழியாக சென்று அம்பேத்கர் சமாதியான சைத்ய பூமியில் நிறைவு செய்தார். இந்த யாத்திரையில் ராகுல்காந்தியுடன் பிரியங்கா காந்தியும் கலந்து கொண்டார்.

    இன்று காலையில் ராகுல் காந்தி மும்பையில் நியாய சங்கல்ப் பாதயாத்ரா என்ற பெயரில் மணிபவன் முதல் ஆகஸ்டுகிராந்தி மைதானம் வரை நடைபயணம் மேற்கொண்டார்.


    இதைத் தொடர்ந்து இன்று மாலை 5 மணியளவில் மும்பை சிவாஜி பார்க் மைதானத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

    இந்தியா கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்தப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் விமானம் மூலம் மும்பை புறப்பட்டுச் சென்றுள்ளார்.


    இதே போல் சமாஜ்வாடி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராஷ்டீரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவ், தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்-மந்திரி சம்பாய் சோரன் ஆகியோரும் மும்பை சென்றுள்ளனர்.

    காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார், கட்சித் தலைவர் சரத்பவார் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்.

    இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசிய பிறகு இன்று இரவே சென்னை திரும்புகிறார்.

    Next Story
    ×