search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கரீப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இனிமேல் ஆர்.ஏ.சி. வசதி இருக்காது- ரெயில்வே வாரியம் அறிவிப்பு
    X

    கரீப் ரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் இனிமேல் ஆர்.ஏ.சி. வசதி இருக்காது- ரெயில்வே வாரியம் அறிவிப்பு

    • பக்கவாட்டு படுக்கையால் பயணிகள் கீழ்பக்க பெர்த்தில் அமர முடியவில்லை என்ற புகாரையடுத்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • முன்கூட்டியே டிக்கெட் எடுத்தவர்கள் மட்டும் இதில் பயணிக்க முடியும்.

    சென்னை:

    நாட்டில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட மக்களின் ரெயில் போக்குவரத்து வசதிக்காக 'கரீப் ரத்' என்னும் 'ஏழைகள் ரதம்' ரெயில் கடந்த 2006-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

    பல்வேறு வழித்தடங்களில் 48 ரெயில்கள் இயக்கப்பட்ட நிலையில் சில காரணங்களால் இந்த ரெயில்கள் எண்ணிக்கை 2 ஆண்டுகளுக்கு முன்பு குறைக்கப்பட்டது.

    தற்போது சென்னை சென்ட்ரல்-ஹஸ்ரத் நிஜாமுதீன் வழித்தடத்தில் வாராந்திர ரெயில் உள்பட நாடு முழுவதும் 26 ஜோடி ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இந்த ரெயில்களின் அனைத்து பெட்டிகளிலும் குறைந்த கட்டணத்தில் ஏ.சி. வசதி இருக்கும்.

    இந்நிலையில் இந்த எக்ஸ்பிரஸ்களில் இனிமேல் ஆர்.ஏ.சி. வசதியை ரத்து செய்ய ரெயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது. அதாவது பயணிகளுக்கு பெர்த் (படுக்கை வசதி) மட்டுமே ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பக்கவாட்டு படுக்கையால் பயணிகள் கீழ்பக்க பெர்த்தில் அமர முடியவில்லை என்ற புகாரையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்கூட்டியே டிக்கெட் எடுத்தவர்கள் மட்டும் இதில் பயணிக்க முடியும்.

    இதுகுறித்து சென்னை கோட்ட ரெயில் பயணிகள் ஆலோசனை குழுவின் முன்னாள் உறுப்பினர் ரகுநாதன் கூறுகையில், 'கரீப் ரத்' எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஆர்.ஏ.சி. டிக்கெட் மட்டுமின்றி பக்கவாட்டில் உள்ள நடுப்பகுதிகளையும் அகற்ற வேண்டும். சேர்-கார் வசதியுடன் கூடிய மேலும் இதுபோன்ற ரெயில்களை தமிழகத்தில் அறிமுகப்படுத்த வேண்டும்.

    இந்த ரெயில்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையங்களில் மட்டுமே நிற்கின்றன. மேலும் அவற்றின் பயண நேரம் மற்ற அதிவிரைவு ரெயில்களை விட குறைவாக உள்ளது.

    ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரெயில்களுக்கு வழங்கப்படும் அதே முன்னுரிமை இந்த ரெயில்களுக்கும் வழங்கப்படுகிறது. மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க அனுமதிக்கப்படுகிறது. எனினும் பயணிகளுக்கு பெட்ஷீட்களோ, உணவுகளோ வழங்கப்படவில்லை என்றார்.

    Next Story
    ×