search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பு- ரெயில்வே போலீசார்
    X

    முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சிக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிப்பு- ரெயில்வே போலீசார்

    • ரெயில்வே சிக்னல் ஒயர் தீப்பிடித்து எரிந்து கருகியதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்னல் ஒயரை சரி செய்தனர்.

    ஈரோடு:

    திருச்சியில் இருந்து ஈரோடு வழியாக கேரளா மாநிலம் பாலக்காடு வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம்போல் திருச்சியில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை ஈரோடு சோலார் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பாளையம் வழியாக ரெயில்வே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அப்பகுதியில் இருந்த சிக்னல் கோளாறு ஏற்பட்டிருந்ததால் ரெயிலின் டிரைவர் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என கருதி ரெயிலை அதே இடத்தில் நிறுத்தினார். தொடா்ந்து எந்தவித சிக்னலும் இல்லாததால் ரெயில் புறப்படுவதற்கு தாமதம் ஆனது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சி நிர்வாகம் ரெயில் பாதை அருகே குப்பைகள் அப்புறப்படுத்தும் போது, ரெயில்வே சிக்னல் ஒயர் தீப்பிடித்து எரிந்து கருகியதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடா்ந்து ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்னல் ஒயரை சரி செய்தனர். முன்னதாக எவ்வித பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்தபின் திருச்சி-பாலக்காடு ரெயில் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக சென்றது. இச்சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சிக்னல் கோளாறுக்கு காரணமான முத்துக்கவுண்டன் பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×