search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொறியியல் தர வரிசையில் 102 பேர் 200-க்கு 200: திருச்செந்தூர் மாணவி நேத்ரா முதலிடம்
    X

    நேத்ரா- ஹரிணிகா

    பொறியியல் தர வரிசையில் 102 பேர் 200-க்கு 200: திருச்செந்தூர் மாணவி நேத்ரா முதலிடம்

    • பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
    • கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

    சென்னை:

    அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் சுமார்1.5 லட்சம் இடங்கள் உள்ளன. அவை ஆண்டு தோறும் பொது கலந்தாய்வு மூலம் ஒற்றை சாளர முறையில் நிரப்பப்பட்டு வருகின்றன.

    அதன்படி நடப்பு ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில் நுட்ப கல்வி இயக்குனரகம் மூலம் இணைய வழியில் நடத்தப்படுகிறது. இதற்கான இணைய தள விண்ணப்ப பதிவு கடந்த மே 5-ந்தேதி முதல் ஜூன் 9-ந்தேதி வரை நடைபெற்றது.

    தமிழகம் முழுவதும் மொத்தம் 2,29,175 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர். 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்று அரசு ஒதுக்கீட்டான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31,445 மாணவ-மாணவிகள் விண்ணப்பித்து இருந்தனர்.

    அவர்களுக்கான ரேண்டம் எண்கள் கடந்த 6-ந்தேதி ஒதுக்கப்பட்டன.

    அதை தொடர்ந்து மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணிகள் இணைய வழியில் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியானது.

    சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தில் பொறியியல் படிப்புக்கான தரவரிசை பட்டியலை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்த 1,87,847 மாணவர்களுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

    அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் 31 ஆயிரத்து 445 மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள். அதில் ஆவணங்களின் அடிப்படையில் 28,425 மாணவர்களுக்கு தரவரிசை எண் வழங்கப்பட்டது.

    இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டை விட 5,842 அதிகம். இது 25.86 சதவீதம் அதிகம் ஆகும். இது தமிழக முதலமைச்சர் அறிவித்த புதுமைப் பெண் திட்டத்திற்கான வெற்றி ஆகும்.

    புதுமைப் பெண் திட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து பொறியியலில் சேர்ந்த 13,284 பேர் பயன் அடைகின்றனர்.

    நீட் தேர்வு முடிவுகள் வந்து விட்டாலும், மருத்துவ மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடக்காததால், என்ஜினீயரிங் கலந்தாய்வு தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது.

    மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான முதல் கலந்தாய்வு நடத்தியதும், பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். அதை பொறுத்து கலந்தாய்வு தேதியை அறிவிப்போம். பொறியியல் படிப்புக்கான தரவரிசையில் 102 பேர் 200-க்கு 200 கட்ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதில் 100 பேர் மாநில பாடத்திட்டத்தில் படித்தவர்கள். இதில் நேத்ரா என்ற மாணவி முதலிடத்தை பெற்றுள்ளார்.

    இவர் தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அடுத்த சிறுத்தொண்டநல்லூர் என்ற ஊரை சேர்ந்தவர் ஆவார். அவர் திருச்செந்தூரில் உள்ள காஞ்சி ஸ்ரீசங்கரா அகாடமி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியில் படித்தவர்.

    தர்மபுரியை சேர்ந்த ஹரிணிகா என்ற மாணவி 2-வது இடத்தை பிடித்துள்ளார். திருச்சியை சேர்ந்த ரோஷினி பானு என்ற மாணவி 3-வது இடத்தை பெற்றுள்ளார். முதல் 3 இடங்களை பெற்றவர்கள் மாணவிகள் ஆவர்.

    அரசுப் பள்ளியில் படித்தவர்களில் சைதாப்பேட்டையை சேர்ந்த மகா லட்சுமி என்ற மாணவி முதல் இடத்தை பிடித்துள்ளார். நாகப்பட்டினத்தை சேர்ந்த நிவேதிதா 2-வது இடத்தை பெற்றுள்ளார். கோவையை சேர்ந்த சரவணகுமார் என்ற மாணவர் 3-வது இடத்தை பெற்றுள்ளார்.

    மாணவர்கள் விண்ணப்பித்து தரவரிசை பட்டியலில் தங்களது பெயர் விடுபட்டு இருந்தாலோ அல்லது வேறு குறைகள் இருந்தாலோ இன்று முதல் 5 நாட்களுக்குள் அருகில் உள்ள தமிழ்நாடு பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்தை அணுகலாம்

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூடுதல் விவரங்களுக்கு www.tneaonline.org என்ற இணைய தளத்தை தொடர்பு கொள்ளலாம் என்று தொழில் நுட்பக் கல்வி இயக்குனரகம் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×