என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பொதுமக்கள் தங்கள் வசதிப்படி ரேசன் கடைக்கு சென்று கைவிரல் ரேகை பதிவு செய்யலாம்
- ரேசன் அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும்.
- பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு விளக்கம்.
சென்னை:
தமிழகத்தில் தற்போது 2.23 கோடி ரேசன் அட்டை தாரர்கள் உள்ளனர். இவர்களுக்கு 34 ஆயிரத்து 793 ரேசன் கடைகள் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடியே 51 ஆயிரத்து 954 பேர் பயன் பெறுகின்றனர். இவர்களில் 6 கோடியே 96 லட்சத்து 47 ஆயிரத்து 407 பேர் தங்களது ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். மொத்தம் உள்ள குடும்ப அட்டைகளில் தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வரும் அந்தி யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 18.61 லட்சம் குடும்ப அட்டைகளும் முன்னுரிமை பெற்ற 95.67 லட்சம் குடும்ப அட்டைகளும் உள்ளன. 'ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை' திட்டம் தமிழ்நாட் டில் செயல்படுத்தப்பட்டு வருவதால், உணவுப் பொருள் வழங்கல் திட்டம் கணினி மயமாக்கப்பட்டு உள்ளது.
ரேசன் பொருட்களும் கைரேகை பதிவு மூலம் வழங்கப்படுவதால் யார் வேண்டுமானாலும் எந்த ரேஷன் கடையிலும் பொருட்கள் வாங்கலாம் என்ற நிலை உள்ளது.
இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு ரேசன் அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது கை விரல் ரேகையை ரேசன் கடையில் பதிவு செய்ய வேண்டும் என்று கடைக்காரர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இதில் சிலர் மட்டும்தான் கைவிரல் ரேகையை பதிவு செய்தனர். இன்னும் ஏராளமானோர் கைவிரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர்.
இந்த நிலையில் தற்போது ரேஷன் அட்டையில் உள்ள அனைவரும் கட்டாயம் தங்களது விரல் ரேகையை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த மாதம் ரேசன் பொருளை முழுமையாக தர மாட்டோம். குறைத்து விடுவோம் என்று கராராக இப்போது கூறி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி விரல் ரேகை வைக்காத உறுப்பினரின் பெயரை ரேசன் அட்டையில் இருந்து எடுத்து விடுவோம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
இதனால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். வீட்டில் உள்ள வயதானவர்களை எப்படி ரேசன் கடைக்கு அழைத்து செல்வது, ஆஸ்பத்திரியில் இருப்பவர்களை ஆம்புலன்சில் கொண்டு வந்தா விரல் ரேகையை பதிவு செய்ய முடியும் என்று ரேசன் கடைக்காரர்களிடம் வாக்குவாதம் செய்து வந்தனர்.
பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ள இந்த உத்தரவு குறித்து தமிழக அரசு இப்போது விளக்கம் அளித்து உள்ளது.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் ஹர் சஹாய் மீனா அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரி பார்ப்பு தொடர்பாக மாவட்டங்களுக்கு ஏற்கனவே அறிவுரைகள் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த சமயத்தில் நியாய விலைக் கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை முடிக்க பின்வரும் அறிவுரைகள் வழங்கப்படுகிறது.
* நியாய விலை கடைகளில் இன்றியமையாப் பண்டங்கள் பெறும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்களது கைவிரல் ரேகை வைக்கப்படும் போது ஆவணங்கள் ஏதும் கோரக் கூடாது.
* குடும்ப அட்டைதாரரின் குடும்ப உறுப்பினர்கள் கைவிரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ளப்படவில்லை எனில், அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என்றோ, இன்றியமையாப் பண்டங்கள் வழங்கப்படாது என்றோ தவறான தகவல்களை வழங்கப்படக் கூடாது.
* குடும்ப அட்டைதாரர்களின் வசதியின்படி, நியாய விலை கடைக்கு வருகை தந்து கை விரல் ரேகை பதிவு செய்து கொள்ளலாம். மாறாக, அவர்களை கட்டாயப்படுத்தி நியாயவிலை கடைக்கு வர வழைத்து சிரமங்களை ஏற்படுத்தக் கூடாது.
நியாய விலை கடையில் விற்பனை முடிந்த பிறகு குடும்ப அட்டைதாரர்களது வீடுகளுக்கு சென்று பயனாளிகளின் கை விரல் ரேகை வைக்கும் பணியினை முடிக்கலாம்.
மேற்கூறியவாறு, அறிவுரைகளை பின்பற்றி கை விரல் ரேகை சரிபார்ப்பு பணியினை, பயனாளிகளுக்கு எவ்வித இடையூறுகள் இல்லாமலும், குழப்பங்கள் ஏதும் இல்லாமலும் முடிக்கப்பட நியாய விலை கடை பணியாளர்களை அறிவுறுத்துமாறும் அப்பணியினை மேற்பார்வையிட சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்து மாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
இந்த உத்தரவின் நகல் ரேசன் கடைகளின் உயர் அதிகாரிகளுக்கும் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்