search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்
    X

    சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் இணைத்தார் சரத்குமார்

    • மக்களுக்காக எடுக்கப்பட்ட முடிவு இது.
    • மக்கள் பணிக்கான தொடக்கமாகவும் இது அமைந்துள்ளது.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பாக சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்.

    இந்த நிலையில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் சென்னை தியாகராய நகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. கட்சி தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டது.

    இந்தக் கூட்டத்தில் பா.ஜனதாவுடன் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பது குறித்து முடிவு செய்து நிர்வாகிகளிடம் கருத்து கேட்டார்.

    அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் பாரதிய ஜனதாவுடன் இணைக்கலாம் என்று கருத்து தெரிவித்தனர். பெரும்பாலான நிர்வாகிகளின் முடிவை ஏற்று கட்சியை பா.ஜனதாவுடன் இணைப்பதற்கு சரத்குமார் முடிவு செய்தார்.

    இதுபற்றி பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, பொறுப்பாளர் அரவிந்த் மேனன், துணைத் தலைவர் சக்கரவர்த்தி, மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன், கரு.நாகராஜன், சரத்குமார் கட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு இணைப்பு விழா நடந்தது.

    பா.ஜ.க. நிர்வாகிகள் முன்னிலையில் சரத்குமார் சமத்துவ மக்கள் கட்சியை பா.ஜனதாவில் இணைப்பதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்து வரவேற்றனர்.

    பா.ஜனதாவுடன் கட்சியை இணைத்த சரத்குமாருக்கு நிர்வாகிகள் ஒவ்வொருவரும் சால்வை அணிவித்தனர்.

    பா.ஜ.க.வுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தது குறித்து சரத்குமார் கூறியதாவது-

    பெருந்தலைவர் காமராஜரை போல பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார். நாட்டின் வளர்ச்சிக்காகவும் இளைஞர்களின் நலன் கருதியும் சமத்துவ மக்கள் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இன்று இணைத்துள்ளேன். இது மக்கள் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவாகும்.

    பாரதிய ஜனதாவில் சமத்துவ மக்கள் கட்சியை இணைப்பது தொடர்பாக உங்களது கருத்துக்களையும் பெற்றுள்ளேன். உங்களது விருப்பம் மற்றும் மக்கள் நலன் கருதியே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதனால் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை முன்னிலையில் கட்சியை இணைத்துள்ளோம்.

    இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவாகும். மக்கள் பணிக்கான தொடக்கமாகவும் இது அமைந்துள்ளது.

    இவ்வாறு சரத்குமார் பேசினார்.

    சரத்குமார் கடந்த 2007-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்கி நடத்தி வந்தார். கடந்த 17 ஆண்டுகளாக சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த அவர் பாரதிய ஜனதாவுடன் கட்சியை இணைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×