search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியது சட்டவிரோதமா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
    X

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறியது சட்டவிரோதமா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

    • உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டு இருந்தது.
    • இந்த வழக்கு தொடர்ந்ததில் பா.ஜ.கவின் பங்கு உள்ளது.

    சனாதனம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் தொடர்ந்த கோ வாரண்ட் வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் அளிக்கப்பட்டு இருக்கிறது.

    சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு மற்றும் ஆ. ராசா ஆகியோர் எந்த தகுதியின் அடிப்படையில் பதவியில் நீடிக்கின்றனர் என்று விளக்கம் அளிக்க உத்தரவிடக் கோரி இந்து முன்னணி நிர்வாகிகள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கோ வாரண்டோ வழக்கு தொடரப்பட்டு இருந்தது.

    இந்த வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "சனாதனத்தை ஒழிக்க வேண்டுமெனக் கூறியது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானதா? என்ற கேள்வி எழுப்பினார். தனிப்பட்ட முறையில் பேசினேனே தவிர, அமைச்சர் என்ற முறையில் பேசவில்லை," என்று வாதாடினார்.

    இது குறித்து தொடர்ந்து பேசிய அவர், "சனாதனம் பற்றி அரசியலமைப்பு சட்டத்திலோ, வேறு எந்த சட்டத்திலோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜர் ஆவதில் இருந்தே, இந்த வழக்கு தொடர்ந்ததில் கண்ணுக்கு தெரியாமல் பா.ஜ.கவின் பங்கு உள்ளது," என்று தெரிவித்தார்.

    இதோடு, "இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றவர்கள் மட்டும்தான் தகுதி இழப்பு ஆகிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எந்த வழக்கிலும் தண்டிக்கப்படவில்லை. சனாதனம் குறித்து பேசியது இந்திய தண்டனை சட்டப்படி குற்றம் என்று மனுதாரர்கள் கூறிய போதிலும், எந்தவொரு முதல் தகவல் அறிக்கையையும் அவர்கள் தாக்கல் செய்யவில்லை," என்று தெரிவித்தார்.

    "இந்த விவகாரம் அரசியல் கொள்கை மோதல் தான். இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. ஜாதி மதம் அடிப்படையில் மக்களை பிரித்து வைக்கக்கூடிய சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். இந்த கொள்கை மோதல் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. அரசியல் உள்நோக்கத்தோடு தாக்கல் செய்யப்பட்டு இருக்கும் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்," என்ற வாதங்களை அவர் தொடர்ந்து முன்வைத்தார்.

    வழக்கில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பு வழக்கறிஞரின் வாதம் நிறைவடையாத காரணத்தால் இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 31-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.

    Next Story
    ×