search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சனாதன தர்மம் யாருக்கும் எதிரானது இல்லை - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
    X

    சனாதன தர்மம் யாருக்கும் எதிரானது இல்லை - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை

    • மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை நிச்சயம் ஒழித்துக் கட்டுவோம் என்று கூறுகிறார்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு, எந்த கருத்தையும் தெரிவிக்காமல் இருந்த அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு பதவி விலக வலியுறுத்தி பா.ஜ.க. கட்சி சார்பில் சென்னையில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பேசியதாவது..,

    "சனாதன தர்மத்தை ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற கருத்துக்கு இந்துக்கள் மட்டுமின்றி, இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் என பலதரப்பட்டோரும் எதிர்ப்பு தெரிவித்து தங்களது கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அனைத்து மக்களும் இந்த விவகாரத்தில் கண்டனக் குரல் பதிவு செய்துள்ளனர். சனாதனத்தை வேரறுப்போம் என்று கூறப்படும் மாநாட்டில் தமிழகத்தை சேர்ந்த இரு அமைச்சர்கள் கலந்து கொண்டனர்."

    "ஒருவர் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மற்றொருவர் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். இருவரும் பேசத் தொடங்குவதற்கு முன்பே, சனாதனமும், இந்து மதமும் ஒன்றுதான். அது இரண்டும் வேறு வேறு இல்லை என்று திராவிடர் கழகம் தலைவர் வீரமணி பேசுகிறார். இவரைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மத்தை நிச்சயம் வேரறுப்போம், ஒழித்துக் கட்டுவோம் என்று கூறுகிறார்."

    "இருவர் பேசுவதையும், அதே மேடையில் அமர்ந்திருந்த அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பார்த்துக் கொண்டிருந்தார். இவர்களின் பேச்சுக்கு நாடு முழுக்க சாமானிய மக்கள் தொடங்கி, அனைவரும் தங்களின் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். இதன் பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு மற்றும் அமைச்சர்கள் ஒன்றிணைந்து வேடிக்கையான அறிக்கை வெளியிட்டனர்."

    "அதில், சனாதன தர்மம் வேறு, இந்து தர்மம் வேறு. சனாதன தர்மத்தை நாங்கள் கொச்சைப்படுத்தும் போது சில விஷயங்களை மட்டும்தான் கொச்சைப்படுத்தினோம். இதை பா.ஜ.க. கட்சியும் இந்தியாவில் உள்ள தலைவர்களும் எங்களுடைய பேச்சை வெட்டி, ஒட்டி, சித்தரித்து எங்களை குற்றவாளிகளாக சித்தரிப்பதாக கூறியுள்ளனர்."

    "நான்கு நாட்களில் அவர்களது கருத்துக்கு ஏற்பட்ட கண்டனக் குரலை பார்த்து, நாங்கள் அப்படி சொல்லவில்லை, இப்படி சொல்லி இருந்தோம் என்று கூறுகின்றனர். சனாதன தர்மம் எப்போதும், யாருக்கும் எதிரி கிடையாது. இதனால் தான், நாமாக வேறு நாட்டிற்கு போர் தொடுக்காமல் இருக்கிறோம். சனாதன தர்மம் யாருக்கும் எதிரான தர்மம் கிடையாது. இதற்கு ஆதியும் கிடையாது, முடிவும் கிடையாது எல்லா காலத்திலும் நிலைத்து நிற்கக்கூடிய தர்மம்," என்று கூறியுள்ளார்.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சாலையில் அமர்ந்து திடீரென தர்ணாவில் ஈடுபட்டார். இதைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை தலைமை அலுவலகத்தை முற்றுகையிட பா.ஜ.க.-வினர் முயற்சித்தனர்.

    Next Story
    ×