search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சின்ன வெங்காயம் விலை திடீர் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
    X

    சின்ன வெங்காயம் விலை திடீர் வீழ்ச்சி: விவசாயிகள் கவலை

    • கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன வெங்காய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    கோவை:

    தமிழகத்தில் திண்டுக்கல், திருப்பூர், பெரம்பலூர், திருச்சி, மதுரை மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

    கோவை மாவட்டத்தில் தொண்டாமுத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது.

    கோவையில் உள்ள காய்கறி மார்க்கெட்டுகளுக்கு உள்ளூர் வரத்துடன் மைசூர் உள்ளிட்ட கர்நாடக மாநில பகுதிகளில் இருந்தும் வரத்து இருக்கும். கோவைக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 400 டன்கள் பெரிய வெங்காயமும், சுமார் 100 டன்கள் சின்ன வெங்காயமும் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    கடந்த ஜூன், ஜூலை மாதங்களில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்தபோது அதனுடன் சேர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் கடுமையாக உயர்ந்தது. ஒரு கிலோ சின்ன வெங்காயம் ரூ.200 வரை விற்பனையானது. கடந்த டிசம்பர் முதல் வாரம் வரையிலும் கூட கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்ட சின்ன வெங்காயத்தின் விலையில் கடந்த சில நாட்களாக தொடர் சரிவு ஏற்பட்டுள்ளது.

    கடந்த 4 நாட்களுக்கு முன்பு ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த சின்ன வெங்காயம் தற்போது ரூ.35-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் சின்னவெங்காயத்தின் விலை ஒரு கிலோ குறைந்தபட்சம் ரூ.35-க்கும், அதிகபட்சம் ரூ.38-க்கும் விற்பனையானது. அதேபோல் சரிவை சந்தித்து வரும் பெரிய வெங்காயமும் குறைந்தபட்சம் ரூ.25-க்கும், அதிகபட்சம் ரூ.29-க்கும் விற்பனையானது.

    கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் கிலோ ரூ.30 முதல் ரூ.40 வரை விற்பனையானது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து வரத்து அதிகரித்து இருப்பதால் வெங்காயத்தின் விலையில் சரிவு ஏற்பட்டு வருவதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். சின்ன வெங்காயத்தின் விலை சரிவால் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த சின்ன வெங்காய விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு.பழனிச்சாமி கூறியதாவது:-

    சில மாதங்களுக்கு முன்பு சின்ன வெங்காயத்தின் விலை உச்சத்தில் இருந்ததால் பல விவசாயிகள் ஆர்வத்துடன் சின்ன வெங்காயம் பயிரிட்டனர். ஆனால் வடகிழக்கு பருவமழை முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மாநிலத்தின் பல பகுதியில் இருந்தும், கர்நாடகத்தில் இருந்தும் சின்ன வெங்காயத்தின் வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்தின் விலை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. உள்நாட்டில் விலை உயர்வை தடுக்க மத்திய அரசு மார்ச் 2024 வரை வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக உள்நாட்டில் காய்கறிகளின் விலை சரிவடைய தொடங்கி உள்ளது.

    நீண்ட காலம் சேமித்து வைக்க முடியாத வேளாண் விளை பொருட்களை எந்த வழியிலாவது விற்பனை செய்ய வேண்டி உள்ளது. எனவே மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கான தடையை விலக்கிக் கொண்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க முன் வரவேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×