search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சைவம், வைணவம் என இந்து சமய அறநிலையத்துறையை இரண்டாக பிரிக்க வேண்டும்- திருமாவளவன்
    X

    சைவம், வைணவம் என இந்து சமய அறநிலையத்துறையை இரண்டாக பிரிக்க வேண்டும்- திருமாவளவன்

    • பாஞ்சாங்குளத்தில் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறியதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
    • குறிஞ்சாகுளம் நிலத்தகராறு தொடர்பாக 140 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை காவல்துறை திரும்பப் பெற வேண்டும்.

    சங்கரன்கோவில்:

    தென்காசி மாவட்டத்தில் பாஞ்சாங்குளம் மற்றும் குறிஞ்சாகுளத்தில் சாதிய பாகுபாடு தொடர்வதாக கூறி அதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் சங்கரன்கோவில் டவுன் வடக்கு ரதவீதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதில் மாவட்ட செயலாளர்கள் டேனியல் சிங், சதுரகிரி, முருகன், சுரேஷ், சுந்தர் தமிழப்பன், இக்பால் கதிரேசன், திருமாவேந்தன், ஜெயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்காசி மாவட்ட செயலாளர் குழந்தை வள்ளுவன் வரவேற்றார்.

    ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பாஞ்சாங்குளத்தில் ஊர் கட்டுப்பாடு விதித்திருப்பதாக கூறியதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிஞ்சாகுளம் நிலத்தகராறு தொடர்பாக 140 பேர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை காவல்துறை திரும்பப் பெற வேண்டும். அதற்காகத்தான் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    இந்தியாவிலேயே அதிகமாக சாதிய வன்கொடுமை கொண்ட மாநிலங்களில் ஒன்றாக தமிழகம் இருப்பது புள்ளி விவரங்களில் தெரிய வருகிறது. இது போலீஸ் நிலையங்களில் பதிவான வழக்குகளின் அடிப்படையில் எடுக்கப்பட்ட புள்ளி விவரம். பதிவாகாத வழக்குகள் ஏராளமாக உள்ளன. இது தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய தலை குனிவு. இதனை முதல்-அமைச்சரின் கவனத்திற்கு மீண்டும் நாங்கள் எடுத்து சொல்வோம்.

    அகில இந்தியாவில் ஆர்.எஸ்.எஸ்-க்கு எதிரான அரசியல் இப்போது தலை தூக்கி இருக்கிறது. தமிழகத்தில் அது வலுவாக இருக்கிறது. ஆனால் தமிழக ஆளுநர் சிறுபான்மை மக்களின் மீது வெறுப்பை விதைக்கிறார்.

    கிறிஸ்தவர்களை திட்டமிட்டு திருக்குறளை தவறாக மொழி பெயர்த்து விட்டார் என சொல்லுவது என்பது அபத்தத்திலும் அபத்தம். கிறிஸ்தவ சமுதாயத்தின் மீதான வெறுப்பை அவர் வெளிப்படுத்துகிறார்.

    இந்து சமய அறநிலையத்துறையை சைவ சமய அறநிலையத்துறை என்றும், வைணவ சமய அறநிலையத்துறை என்றும் இரண்டாகப் பிரிக்க வேண்டும். அவை தனித்தனியே இயங்குவதற்கான அனைத்து கட்டமைப்பு வசதிகளையும் தமிழக அரசு செய்ய வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×