search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாட்டையே மீட்டு தந்த எங்களுக்கு ஒரு வீடு தந்தா குறைஞ்சா போவீங்க... வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் போராடிய தியாகியின் பரிதாபம்
    X

    'நாட்டையே மீட்டு தந்த எங்களுக்கு ஒரு வீடு தந்தா குறைஞ்சா போவீங்க...' வேடசந்தூர் தாலுகா அலுவலகத்தில் போராடிய தியாகியின் பரிதாபம்

    • சுதந்திர போராட்ட தியாகி ஆயிற்றே, எதையும் தியாகம் செய்தும், கடைசி வரை நம்பிக்கையுடன் போராடியும் தானே பழக்கம்.
    • ஒரு காலத்தில் இந்த நாட்டை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்க போராடிய தியாகிகளில் கிருஷ்ணசாமியும் ஒருவர்.

    தள்ளாத வயது, ஆனாலும் தளராத நம்பிக்கையில் தேசியக் கொடி, தலையில் காந்தி குல்லாவுடன் அமர்ந்து இருந்தார் கிருஷ்ண சாமி.

    அந்த வழியாக எத்தனையோ பேர் வந்தார்கள். போனார்கள். ஆனால் யாரும் அவரை கண்டு கொள்ளவில்லை. தன்னந் தனிமையில் அவர் நடத்திக் கொண்டிருந்தது உண்ணா விரத போராட்டம்.

    இதுவே ஒரு அரசியல் கட்சியின் உண்ணாவிரத போராட்டமாக இருந்திருந்தால் எவ்வளவு கூட்டம்... படோடபம்... பாதுகாப்புடன் நடந்திருக்கும்! மக்களை கவர்ந்திருக்கும்!

    ஆனால் இவர் சுதந்திர போராட்ட தியாகி ஆயிற்றே, எதையும் தியாகம் செய்தும், கடைசி வரை நம்பிக்கையுடன் போராடியும் தானே பழக்கம்.

    ஒரு காலத்தில் இந்த நாட்டை ஆங்கிலேயர்களிடம் இருந்து மீட்க போராடிய தியாகிகளில் கிருஷ்ணசாமியும் ஒருவர். ஆங்கிலேய சாம்ராஜ்ஜியத்தையே திரும்பி பார்க்க வைத்தது தியாகிகளின் இந்த மாதிரி அகிம்சை போராட்டம்.

    ஆனால் சுதந்திரமாக வாழும் சொந்த நாட்டு மக்களே திரும்பி பார்க் காததை நினைத்து கிருஷ்ணசாமியின் மனம் என்ன பாடு பட்டிருக்கும்?

    அவர் எதுவும் கேட்கவில்லை. இந்த நாட்டுக்காக குடும்பத்தை மறந்து வீதியில் இறங்கி போராடி வெற்றியும் பெற்றோம்.

    சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகிவிட்டது. தனக்கு குடியிருக்க ஒரு வீடு இல்லையே என்பதுதான் தியாகி கிருஷ்ணசாமியின் கவலை.

    சுதந்திரம் பெற்று மகிழ்ந்துவிட்டேன். சாவதற்கு முன் சொந்த நாட்டில் சொந்த வீட்டில் வாழ்ந்துவிட்டேன் என்ற நிம்மதியை அடைய வேண்டும் என்பதுதான் அவரது ஆசை.

    நமக்காக எல்லாவற்றையும் தியாகம் செய்த இந்த தியாகியின் சின்ன ஆசையை கூட இந்த நாட்டால் நிறைவேற்றி கொடுக்க முடியாமல் போனது துரதிருஷ்டம்.

    பல ஆண்டுகளாக மனுக்கள் எழுதி எத்தனையோ அதிகாரிகளையும் சந்தித்துவிட்டாராம். ஆனால் அவரது கோரிக்கை மட்டும் நிறைவேறவில்லை.

    வேடசந்தூர் தாலுகா அலுவலகத்திலும் மனு கொடுக்க வந்திருக்கிறார். வழக்கம்போல் விரட்டியடிப்பு, அலட்சியப்படுத் தலை மட்டுமே சந்தித்து இருக்கிறார்.

    எனவே அந்த வளாகத்திலேயே உண்ணாவிரதம் இருந்து இருக்கிறார். இப்படித்தானே அந்த காலத்தில் அலட்சியமாகவும், பாராமுகமாகவும் இருந்த ஆங்கிலேயர்களை போராடி சாதித்தோம்.

    இன்று சொந்த மக்களிடம் குடியிருக்க ஒரு வீடு கேட்டு போராட்டம். 'நாட்டையே மீட்டு தந்தோமே எங்களுக்கு ஒரு வீடு தந்தா குறைஞ்சா போவீங்க...? என்று பொக்கை வாய் திறந்து அவர் கேட்கும் கேள்வி நெஞ்சில் முள்ளாய் குத்துகிறது.

    நமக்காக போராடியவர் சாகப்போகும் வயதில் தனக்காக போராடுகிறார். அதுவும் ஒரு சின்ன வீட்டுக்காக! நிறைவேற்றி வைப்பார்களா அவரது சின்ன ஆசையை?

    Next Story
    ×