search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளை
    X

    திருவண்ணாமலை மாவட்டத்தில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து ரூ.75 லட்சம் கொள்ளை

    • 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
    • கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அதிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    திருவண்ணாமலை:

    சென்னை பெரம்பூரில் கடந்த 9-ந்தேதி நள்ளிரவில் நகைக்கடையை உடைத்து 9 கிலோ தங்கநகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கியாஸ் வெல்டிங் மூலமாக நகை கடையின் இரும்பு ஷட்டரை சத்தமில்லாமல் உடைத்த கொள்ளை கும்பல் மிகவும் துணிச்சலாக கை வரிசை காட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டது.

    இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

    வடசென்னை கூடுதல் கமிஷனர் அன்பு மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் கொள்ளை சம்பவத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமலேயே உள்ளது. இதனால் வடசென்னை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

    இந்த பரபரப்பு அடங்கும் முன்னரே திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று நள்ளிரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து 75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    திருவண்ணாமலையில் மாரியம்மன் கோவில் தெரு மற்றும் பகுதியில் தேனிமலையில் எஸ்.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் மாரியம்மன் கோவில் தெரு ஏ.டி.எம். மையத்துக்குள் நேற்று நள்ளிரவு புகுந்த கொள்ளையர்கள் கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்தனர்.

    பின்னர் அதில் இருந்த ரூ.2 லட்சம் பணத்தை கொள்ளையடித்து மூட்டை கட்டினர். இதையடுத்து தேனிமலை பகுதியில் உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு சென்ற கொள்ளை கும்பல் இதே பாணியில் அங்கும் கைவரிசை காட்டியது.

    கியாஸ் வெல்டிங் மூலமாக எந்திரத்தை உடைத்த கொள்ளையர்கள் அதில் இருந்த ரூ.30 லட்சம் பணத்தையும் கொள்ளையடித்தனர். இதன் பின்னர் கொள்ளை கும்பல் வேலூர் நோக்கி பயணத்தை தொடர்ந்தது.

    திருவண்ணாமலையில் இருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள கலசப்பாக்கத்துக்கு கொள்ளையர்கள் சென்றனர். கலசப்பாக்கம் மெயின் ரோட்டில் 'இண்டியா ஒண்' வங்கி ஏ.டி.எம். மையத்தில் புகுந்த கொள்ளையர்கள் எந்திரத்தை உடைத்து ரூ.5 லட்சம் பணத்தை சுருட்டினர்.

    இதன்பிறகு போளூர் சென்ற கொள்ளையர்கள் அங்கு மீண்டும் எஸ்.பி.ஐ. ஏ.டி.எம். மையத்துக்குள் புகுந்து எந்திரத்தை உடைத்தனர். அதிலும் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. போளூர் ஏ.டி.எம். மையத்தில் இருந்து ரூ.20 லட்சம் பணத்தை கொள்ளையடித்த கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

    மொத்தம் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்த கொள்ளையர்கள் ரூ.75 லட்சம் பணத்தை மிகவும் துணிச்சலாக வாரி சுருட்டிக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரேநாள் இரவில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை உடைத்து கொள்ளையர்கள் சாவகாசமாக கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். திருவண்ணாமலை போலீசுக்கு சவால் விடுக்கும் வகையில் மர்ம கொள்ளை கும்பல் கைவரிசை காட்டிவிட்டு தப்பி ஓடி தலைமறைவாகி உள்ளது.

    கொள்ளையர்கள் காரில் வந்து கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி விட்டு அதிலேயே தப்பிச் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.

    திருவண்ணாமலையில் இருந்து வேலூர் வழியாக கொள்ளையர்கள் ஆந்திர மாநிலத்துக்கு சென்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    ஆந்திரா அல்லது வடமாநிலங்களை சேர்ந்த கொள்ளையர்கள் தான் ஏ.டி.எம். கொள்ளையில் ஈடுபட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் கொள்ளை கும்பலை உடனடியாக கூண்டோடு பிடிக்க உத்தரவிட்டார். இதையடுத்து வேலூர் டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆகிய இருவரின் மேற்பார்வையில் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த தனிப்படையினர் கொள்ளையர்களை சல்லடை போட்டு தேடி வருகிறார்கள். கொள்ளைபோன 4 ஏ.டி.எம்.களில் 3 ஏ.டி.எம்.கள் 'ஸ்டேட்பேங்க் ஆப் இந்தியா' வங்கிக்கு சொந்தமானவையாகும். ஒருவங்கி கிராமப்பகுதிகளில் அதிகமாக உள்ள 'இண்டியா ஒன்' ஏ.டி.எம். ஆகும்.

    இந்த 4 ஏ.டி.எம். மையங்களிலும் காவலாளிகள் இல்லை. இது கொள்ளையர்களுக்கு வசதியாக போய் விட்டது. ஏ.டி.எம். மையங்களில் உள்ள கேமரா மற்றும் கேமரா காட்சிகள் பதிவாகும் ஐ.வி.ஆர். பெட்டி ஆகியவற்றை கொள்ளையர்கள் சேதப்படுத்தி உள்ளனர்.

    பின்னர் ஐ.வி.ஆர். பதிவான பெட்டியை தீவைத்து எரித்து தடயங்களை அழித்துள்ளனர். இதனால் கொள்ளையர்கள் எப்படி இருப்பார்கள்? என்பதை கூட போலீசாரால் உடனடியாக கண்டுபிடிக்க முடியவில்லை.

    இருப்பினும் கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை போலீசார் திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களிலும் ஆந்திர எல்லையோர பகுதிகளிலும் முகாமிட்டு விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். இந்த கொள்ளை சம்பவம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலுமே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ஏ.டி.எம். மையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

    Next Story
    ×