search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாட்டில் எம்.பி. தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க காங்கிரஸ் திட்டம்
    X

    தமிழ்நாட்டில் எம்.பி. தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க காங்கிரஸ் திட்டம்

    • தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது.
    • கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதையொட்டி டெல்லி காங்கிரஸ் தலைமை அனைத்து மாநில காங்கிரஸ் நிர்வாகிகளையும் அழைத்து ஆலோசனை நடத்தி வருகிறது.

    தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை நாளை (4-ந்தேதி) டெல்லிக்கு அழைத்து இருந்தனர். அதன்படி காங்கிரஸ் நிர்வாகிகள் இன்று டெல்லி செல்கிறார்கள்.

    நாளை மாலை 4 மணிக்கு டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வ பெருந்தகை, 8 எம்.பி.க்கள், முன்னாள் மாநில தலைவர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    கூட்டத்தில் அமைப்பு ரீதியாக கட்சியை வலுப்படுத்துதல், கூட்டணி விவகாரம், தேர்தலை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிக்கப்படுகிறது.

    தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. கூட்டணி கடந்த தேர்தலில் அமோக வெற்றி பெற்றது. அதே போல் இந்த தேர்தலில் வெற்றி பெறவும், வேற்றுமைகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக உழைக்க டெல்லி மேலிடம் அறிவுரைகள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதிகளையும் இந்த தேர்தலிலும் தி.மு.க.விடம் கேட்டுப்பெற வேண்டும் என்று வற்புறுத்த திட்டமிட்டு உள்ளார்கள். இதற்கிடையில் ஒன்றிரண்டு முறை எம்.பி.யாக இருப்பவர்களுக்கு பதில் புது முகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று ராகுல் விரும்புவதாக கூறப்படுகிறது.

    எனவே நாளை நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் அதுபற்றியும் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எல்லா தொகுதிகளிலும் தகுதியான வேட்பாளர்களின் பட்டியலை தயாரிக்கும்படி கேட்டுக்கொள்வார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×