என் மலர்
தமிழ்நாடு
கொடிவேரி தடுப்பணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி இல்லை: பரிசல் இயக்கவும் தடை
- கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
- கொடிவேரி தடுப்பணை பகுதியில் மழை தண்ணீர் இரு கரைகளிலும் பெருக்கெடுத்து செல்கிறது.
கோபி:
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் பவானி ஆற்றில் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கொடிவேரி தடுப்பணை வழியாக கொட்டி ஆர்ப்பரித்து செல்கிறது.
கொடிவேரி தடுப்பணைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அங்கு கொட்டும் தண்ணீரில் குளித்து செல்கிறார்கள்.
மேலும் விடுமுறை மற்றும் விழா நாட்களில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் வழக்கத்தை விட பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ஈரோடு மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது.
இதே போல் நேற்று இரவு கோபிசெட்டிபாளையம், சத்தியமங்கலம், நம்பியூர், கொடிவேரி மற்றும் பவானிசாகர் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பவானி ஆற்றில் மழை வெள்ளம் இரு கரைகளையும் தொட்டப்படி பெருக்கெடுத்து செல்கிறது.
மேலும் கொடிவேரி தடுப்பணை பகுதியில் மழை தண்ணீர் இரு கரைகளிலும் பெருக்கெடுத்து செல்கிறது. தடுப்பணையில் உபரி நீர் சுமார் 2400 கனஅடி செல்கிறது. மேலும் பொதுமக்கள் குளிக்கும் இடங்களில் தடுப்பணையை தாண்டி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
இதையொட்டி கொடிவேரியில் அதிகளவு தண்ணீர் செல்வதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் கொடிவேரி தடுப்பணையில் குளிப்பதற்கும், ரசிப்பதற்கும் அனுமதி இல்லை. மேலும் அங்கு பரிசல்கள் இயக்கவும் இன்று தடை விதிக்கப்படுவதாகவும் தண்ணீர் குறைந்த பின்பு அனுமதி அளிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் பவானி ஆற்றில் அதிகளவு தண்ணீர் செல்வதால ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது எனவும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
இதனால் தடுப்பணைக்கு செல்லும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டு உள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் கொடிவேரிக்கு பொதுமக்கள் பலர் வந்திருந்தனர். உள்ளே செல்லும் கதவு அடைக்கப்பட்டு இருந்ததால் ஏமாற்றத்துடன் அவர்கள் திரும்பி சென்றனர்.