என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

தொடர் விடுமுறையையொட்டி குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கடந்த சில நாட்களாக மாலை நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
- வறட்சியின் பிடியில் இருந்த பகுதிகளில் சற்று வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது.
நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்து வரும் மழையால் அணைகளுக்கு நீர்வரத்து சற்று அதிகரித்து காணப்படுகிறது. பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் 70.70 அடியாக உயர்ந்துள்ளது.
இதேபோல் சேர்வலாறு அணை நீர்மட்டம் 82.51 அடியாக உள்ளது. அணைகளுக்கு வினாடிக்கு 574.98 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 45.35 அடியாக உள்ளது. பாபநாசம் அணை பகுதியில் 1 மில்லிமீட்டர் மழை பெய்தது. மாஞ்சோலை வனப்பகுதியில் லேசான சாரல் மழை பெய்தது.
தென்காசி மாவட்டத்தில் குண்டாறு அணை பகுதியில் பரவலாக பெய்து வரும் மழையின் காரணமாக அந்த அணை நிரம்பி வழிகிறது. இன்று காலை நிலவரப்படி அந்த அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பெய்தது. அணைக்கு வரும் 10 கனஅடி நீர் அப்படியே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் மிகப்பெரிய அணையான 132 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை நீர்மட்டம் 97.75 அடியாக உள்ளது. குற்றாலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த மழை காரணமாக அனைத்து அருவிகளிலும் தண்ணீர் விழுகிறது. இன்று முதல் பள்ளிகளுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் காலையில் இருந்தே அருவிகளில் குடும்பத்துடன் வந்து சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும், காயல்பட்டினத்திலும் சாரல் மழை விட்டுவிட்டு பெய்தது. கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 11 மில்லிமீட்டர் மழை பெய்தது. எட்டயபுரத்தில் 1.2 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.






