search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மிடுக்கான சீருடை தயார்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மிடுக்கான சீருடை தயார்

    • கடந்த காலங்களில் பொதுவான அளவீடு மூலம் தைத்ததால் சீருடை பிட்டாக இல்லாமல் இருந்தது.
    • மாணவ-மாணவிகளின் அளவிற்கு ஏற்ப அளவீடு செய்து சீருடை தைக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் உள்ள அரசு மாநகராட்சி, நகராட்சி பள்ளிகளில் ஏழை மாணவ-மாணவிகளுக்கு ஆண்டு தோறும் இலவசமாக சீருடை வழங்கப்படுகிறது. பள்ளி பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், பை, காலணி உள்ளிட்ட கல்வி சார்ந்த உபகரணங்கள் அரசின் சார்பில் வழங்கப்படுகிறது.

    இந்த ஆண்டு ஜூன் 6-ந்தேதி பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவ-மாணவிகளுக்கு முதல் நாளிலேயே பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்கள் வழங்க கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. இதற்கான பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன.

    சென்னையில் அரசு பள்ளிகள் மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். அவர்களுக்கு பள்ளி திறக்கப்படுகின்ற நாளிலேயே பாடப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களும் வழங்க ஏற்பாடு நடந்து வருகின்றன. ஓரிரு நாட்களில் அனைத்து பொருட்களும் சென்றடைய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி மார்ஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    இந்த ஆண்டு மாநகராட்சி பள்ளி குழந்தைகளுக்கு இலவச சீருடை நேர்த்தியாக தைத்து கொடுக்க அரசு முடிவு செய்தது. மாணவ-மாணவிகளின் அளவிற்கு ஏற்ப அளவீடு செய்து சீருடை தைக்கப்பட்டுள்ளது.

    சீருடை தைப்பதற்கு முன்பு ஒவ்வொரு பள்ளி மாணவர்களின் அளவு தனித்தனியாக கணக்கீடு செய்யப்பட்டு தைக்கப்பட்டு உள்ளது. இந்த பணியை சமூக நலத்துறை ஏப்ரல் மாதமே தொடங்கியது.

    6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சர்ட்-பேண்ட், 1 முதல் 5-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரைக்கால் டவுசர்-சர்ட் வழங்கப்படுகிறது.

    மாணவிகளை பொறுத்த வரை 1 முதல் 4-ம் வகுப்பு வரை ஸ்கர்ட் மற்றும் சர்ட்டும், 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாவாடை-சர்ட், 6 முதல் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு கோர்டுடன் சுடிதார் தைக்கப்பட்டு உள்ளது.

    ஒவ்வொரு மாணவ-மாணவிகளும் தனியார் பள்ளியைப் போல மிடுக்காக செல்லும் வகையில் சீருடை அளவு எடுத்து தைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    கடந்த காலங்களில் பொதுவான அளவீடு மூலம் தைத்ததால் சீருடை பிட்டாக இல்லாமல் இருந்தது. ஆனால் இந்த முறை மிக சீரிய முறையில் சீருடை தயார் செய்யப்பட்டு இருப்பதாகவும், பள்ளி திறக்கின்ற நாளில் அவை வழங்கப்படும் என்றும் கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×