என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
10 ஆண்டுகள் ஆகியும் முடிவு இல்லை- வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை, பட்டாபிராமில் பாதியில் நிற்கும் ரெயில்வே மேம்பால பணிகள்
- வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டுகள் அடிக்கடி மூடப்பட்டு வந்தது.
- வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது.
திருவள்ளூர்:
திருவள்ளூர் அருகே செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, பட்டாபிராம் ஆகிய 3 இடங்களில் ரெயில்வே மேம்பால பணி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ மாணவிகள், நோயாளிகள், முதியவர்கள், ஊன முற்றவர்கள், ரெயில் பயணிகள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகி வருகின்றனர்.
சென்னை- அரக்கோணம் ரெயில்வே மார்க்கத்தில், தினந்தோறும் 100-க்கும் மேற்பட்ட மின்சார ரெயில்கள், விரைவு ரெயில்கள், சரக்கு ரெயில்கள் சென்று வருகின்றன.
இதன் காரணமாக திருவள்ளூர் அருகே உள்ள வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கேட்டுகள் அடிக்கடி மூடப்பட்டு வந்தது.
இதனால், வேப்பம்பட்டு பகுதியில் இருந்து பெருமாள்பட்டு, அயத்தூர், சிவன்வாயில் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்லும் பொது மக்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள், ரெயில்கள் மற்றும் பஸ்கள் உள்ளிட்டவை மூலம் குறித்த நேரத்தில் சென்னை மற்றும் திருவள்ளூர், திருத்தணி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பணியிடங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாத நிலை இருந்து வந்தது.
இதைத்தொடர்ந்து வேப்பம்பட்டு, செவ்வாப்பேட்டை ஆகிய ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
அந்த கோரிக்கையை ஏற்று தெற்கு ரெயில்வே நிர்வாகமும், மாநில நெடுஞ்சாலைத் துறையும் இணைந்து சென்னை பெருநகர வளர்ச்சி திட்டத்தின் கீழ், வேப்பம்பட்டு ரெயில் நிலையம் அருகே ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2008-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. ரூ.29.50 கோடி மதிப்பிலான இந்த மேம்பால பணிக்காக ரெயில்வே கேட் பாதை அகற்றப்பட்டு, ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை கடந்த 2009 - 2010-ம் ஆண்டுகளில் ரெயில்வே நிர்வாகம் மேற்கொண்டு முடித்தது.
இதைத்தொடர்ந்து மாநில நெடுஞ்சாலைத் துறைக்கு உட்பட்ட பகுதியில், கடந்த 2011-ம் ஆண்டு மேம்பாலப் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த பணியில் முதல் கட்டமாக ரெயில்வே கேட் பாதையின் ஒரு புறமான பெருமாள்பட்டு பகுதியில் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு மேம்பாலப் பணிகள் நடந்தன.
ரெயில்வே கடவுப் பாதையின் மற்றொரு புறமான வேப்பம்பட்டு, சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை பகுதியில் மேம்பாலத்தின் இரண்டாம் கட்டப் பணிகளை கடந்த 2012-ம் ஆண்டு நெடுஞ்சாலைத் துறை தொடர்ந்தது.
பணிகள் நடைபெற்று வந்த நிலையில் ரெயில்வே மேம்பால பணிக்கு எதிராக வேப்பம்பட்டு பகுதிகளைச் சேர்ந்த 2 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர்.
அந்த வழக்கு விசாரணை அடிப்படையில் கடந்த 2013-ம் ஆண்டு வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பால பணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. இதையடுத்து, மேம்பால பணி நிறுத்தப்பட்டது.
இதற்கிடையே ரெயில்வே மேம்பால பணிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தவர்கள் கடந்த 2014-ம் ஆண்டு வழக்கை வாபஸ் பெற்றனர். மேலும் கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் ரெயில்வே மேம்பால பணிக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கியது.
இடைக்கால தடை நீக்கம் செய்யப்பட்டு சுமார் ஒன்றரை ஆண்டுகளாகியும் வேப்பம்பட்டு ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணியை நெடுஞ்சாலை துறை தொடராமல் உள்ளது.
இப்படி 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ள ரெயில்வே மேம்பாலம் பணி முழுமை பெறாமல் பாதியாக அந்தரத்தில் நிற்கிறது.
இதேபோல் செவ்வாப்பேட்டை ரெயில்வே மேம்பாலம் அமைக்க கடந்த 2011-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. அந்த ஆண்டே அங்கிருந்த ரெயில்வே கேட் அகற்றப்பட்டு ரெயில்வேக்கு சொந்தமான பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கியது. இந்த பணியை 2 ஆண்டுக்குள் ரெயில்வே நிர்வாகம் முடித்ததாக கூறப்படுகிறது.
ஆனால் மாநில நெடுஞ்சாலைத் துறையால் செவ்வாப்பேட்டை மற்றும் திருவூர் பகுதியை இணைக்கும் வகையில் கடந்த 2015-ம் ஆண்டு சுமார் ரூ.20 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
அப்பணியில் ரெயில்வே பாதையின் ஒரு புறமான திருவூர் பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணி பெருமளவில் முடிந்தது. மற்றொரு புறமான செவ்வாப்பேட்டை ரோடு பகுதியில் மேம்பாலப் பணிக்கு தேவையான நிலத்தின் உரிமையாளர்கள் கையகப்படுத்தப்படும் தங்கள் நிலத்துக்கான இழப்பீடுத் தொகை குறைவாக உள்ளதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.
இதனால் அப்பகுதியில் சுமார் 60 சதவீத பணிகள் முடிந்த நிலையில் மேம்பாலம் அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டன. இந்தநிலையில் கடந்த ஓராண்டுக்கு முன்பு மேம்பால பணிக்கு எதிரான வழக்குகள் முடிவுக்கு வந்தும் நெடுஞ்சாலைத் துறை இன்னும் மேம்பால பணியை தொடங்காமல் உள்ளது.
இதே போல் பட்டாபிராம் வழியாக சென்னை- திருப்பதி நெடுஞ்சாலையின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ள ரெயில் பாதை வழியாக சென்னையில் இருந்து பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் செல்லும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2010-11-ம் ஆண்டு ரூ.33 கோடி செலவில் நான்கு வழிச்சாலை ரெயில்வே மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மாநில நெடுஞ்சாலைத் துறை மற்றும் ரெயில்வே துறை நிதி ஒதுக்கீடு செய்தது.
இதற்கிடையே சென்னை- திருப்பதி நெடுஞ்சாலை 6 வழிச் சாலையாக மாற்றி அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதனால் ரெயில்வே துறை மற்றும் மாநில நெடுஞ்சாலைத் துறை இந்த திட்டத்தை மறுமதிப்பீடு செய்தது. இதன்படி திட்ட மதிப்பீடு ரூ.52.11 கோடியாக உயர்ந்தது. திருத்திய மதிப்பீட்டின்படி கடந்த 2018-ம்ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டன.
தொடங்கப்பட்ட இரண்டு ஆண்டுக்குள் பணிகள் முடிக்க தீர்மானிக்கப்பட்டது. இதற்காக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.
இதன்படி சென்னையில் இருந்து அம்பத்தூர், ஆவடி, பட்டாபிராம் வழியாக திருவள்ளூர், திருத்தணி, திருப்பதிக்கு இயக்கப்படும் வாகனங்கள் தற்போது மாற்றுப் பாதையில் இயக்கப்படுகின்றன. பட்டாபிராம் காவல் நிலையம் அருகே தண்டுரை, அன்னம்பேடு வழியாக மீஞ்சூர்-வண்டலூர் வெளிவட்டச் சாலை வழியாக சென்று அங்கிருந்து நெமிலிச்சேரி ரவுண்டானாவை கடந்து சென்னை- திருத்தணி நெடுஞ்சாலையில் செல்ல வேண்டும்.
இதனால் வாகனங்கள் சுமார் 10 கி.மீ. தூரம் வரை மாற்றுப் பாதையில் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
வாகனங்கள் சுற்றிச் செல்வதால் எரிபொருள் மற்றும் பயண நேரமும் அதிகரிக்கிறது. ஆண்டுகள் உருண்டோடினாலும் மேம்பால பணி இன்னும் முடியாமல் நீண்டு கொண்டே செல்கிறது.
எனவே ஆமை வேகத்தில் நடைபெற்று வரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்