search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Vijay
    X

    ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுடன் விஜய் தீவிர ஆலோசனை

    • படம் திரைக்கு வந்ததும் மாநாடு பற்றிய தகவல்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
    • பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள வசதியாக இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கிய நடிகர் விஜய் 2026 சட்டமன்ற தேர்தலை இலக்காக கொண்டு தீவிர களப் பணியில் இறங்கி வருகிறார்.

    அந்த வகையில் மாவட்டம் தோறும் ஆலோசனை கூட்டங்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் போன்றவை கட்சி சார்பில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

    கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் விஜய் வழி காட்டுதலின் பேரில் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நேரடியாக சந்தித்து கட்சி வளர்ச்சி பற்றி ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.

    மேலும் மக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்க தொடங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்துக்கு எதிராக தமிழக அரசின் நிர்வாகத்தின் அலட்சியமே இதற்கு காரணம் என அறிக்கை விட்டு விஜய் பரபரப்பை ஏற்படுத்தினார்.

    மேலும் சமீபத்தில் நடந்த எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய் பேசும்போது, நீட்டுக்கு எதிராக பேசியதோடு தமிழகத்துக்கு தற்போது நல்ல தலைவர்கள் தேவை எனவும் பேசி அதிரடி காட்டினார்.

    சமீபகாலமாக விஜய் அரசியல் நடவடிக்கை நாளுக்கு நாள் வேகம் எடுத்து வருகிறது. தமிழகம் முழுவதும் நிர்வாகிகள் கூட்டத்தை பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் நடத்தி கட்சி சார்பில் விரைவில் நடைபெற இருக்கும் மாநாட்டுக்கான பணிகள் பற்றியும், பதவிகள் வழங்கப்படுவது குறித்தும் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    அந்த வகையில் சில தினங்களுக்கு முன்பு சேலத்தில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் புஸ்சி ஆனந்த் பங்கேற்றார். மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் பற்றி அறிவிக்க வேண்டும் என்பதால் பலரிடம் நடிகர் விஜய் தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகிறார். விஜய் ஓய்வுபெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள், அரசியல் விமர்சகர்கள் என பல்வேறு தரப்பினாரிடம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

    இதைத் தொடர்ந்து கட்சியின் கொள்கைகளுக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு திருச்சியில் நடைபெறுவதாக இருந்த நிலையில் சேலத்தில் நடத்தலாமா? என நினைத்து அங்கு சில இடங்களை புஸ்சி ஆனந்த் பார்வையிட்டார்.

    மாநாட்டுக்காக தேர்வு செய்யப்பட்ட இடம் மற்றும் எவ்வளவு தொண்டர்கள் பங்கேற்கலாம் என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு கட்சி தலைவர் விஜயிடம் விரைவில் வழங்கப்பட இருக்கிறது. இதைத் தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தை விஜய் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்.

    விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் 'தி கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து வருகிற செப்டம்பர் மாதம் 5-ந்தேதி திரைக்கு வர இருக்கிறது.

    படம் திரைக்கு வந்ததும் மாநாடு பற்றிய தகவல்கள் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

    மாநாட்டில் தமிழகம் மட்டுமின்றி, கேரளா, புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா என பல லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொள்ள வசதியாக இடம் தேர்வு செய்யப்பட உள்ளது.

    இந்த நிலையில் விரைவில் 'தி கோட்' படத்தின் பாடல் வெளியீடு விழா நடைபெற இருக்கிறது. விழாவில் விஜயின் அரசியல் கலந்த அனல் பறக்கும் பேச்சை கேட்க தொண்டர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

    மாநாடு நடத்துவது பற்றி நிர்வாகிகள், தொண்டர்களிடம் கருத்துக்களை கேட்டதில் எல்லோருக்கும் மையப் பகுதியாக திருச்சி இருப்பதால் அங்கு மாநாடு நடத்தினால் சரியாக இருக்கும் என வலியுறுத்தி வருகின்றனர்.

    வரலாற்று சிறப்புமிக்க அரசியல் மாநாடாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால் தொண்டர்களின் கருத்துக்களையும் கேட்டு பரிசீலனை செய்து வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தமிழக அரசியலில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×