search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தலில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு யாருக்கு?- விக்கிரமராஜா
    X

    பாராளுமன்ற தேர்தலில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆதரவு யாருக்கு?- விக்கிரமராஜா

    • மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
    • பல விதமான ஜி.எஸ்.டியாக இல்லமல் ஒரு முனை வரியாக இருக்க வேண்டும்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தூத்துக்குடி மண்டல கூட்டம், கோவில்பட்டி மாவட்ட புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.

    தூத்துக்குடி மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். கோவில்பட்டி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்று பேசினார்.

    இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி வைத்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெறுவதை 3 ஆண்டுக்கு ஒரு முறை என்று மாற்றி தருவதாக திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார். அதன்படி 3 ஆண்டுக்கு ஒரு முறை உரிமம் பெற வேண்டும் என்பதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதனையும் வலியுறுத்தி இருக்கிறோம்.

    வணிக உரிமை பெறுவதற்கு கட்டிட உரிமையாளரும் வரி கட்ட வேண்டும், அதனை இணைக்க வேண்டும் என்பதனை தவிர்த்து உரிமத்தினை தனியாக வழங்க வேண்டும் என்பதனையும் முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்து சென்று தீர்க்க இருக்கிறோம். ஆகவே தான் மே 5-ந் தேதி மதுரையில் நடைபெறும் மாநாடு வணிகர் விடுதலை முழக்க மாநாடாக நடைபெற உள்ளது. மாநாட்டில் தமிழகத்தில் இருந்து பல லட்சம் வணிகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

    உற்பத்தியாளர்கள் தனி விலை நிர்ணயம் செய்வதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும். உற்பத்தியாளர்கள் அனைத்து கடைகளுக்கு ஒரே விலையில் பொருட்களை தர வேண்டும். அந்நிய நாட்டு சக்திகள் ஆன்லைனில் புகுந்து கொண்டு வணிகத்தினை சீரழிப்பதை அரசு கட்டுப்படுத்த வேண்டும். வணிக நிறுவனங்களில் அமலாக்கதுறையினர் சோதனை செய்கின்றனர். அதற்கான ஆவணங்களை காண்பிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகள் பாரபட்சம் இல்லமால் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து ஆய்வு செய்யும் அரசு அதிகாரிகள் பாரபட்சம் இல்லமால் செயல்பட வேண்டும். ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு அரசு தடை விதித்துள்ளது. ஆனால் அதனை அதிகளவு பயன்படுத்துவது கார்ப்பரேட் நிறுவனங்கள் தான். அந்த நிறுவனங்கள் மீது அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

    சிறு வணிக நிறுவனங்களில் பறிமுதல் செய்து அதிகளவு அபராதம் விதிக்கின்றனர். பிளாஸ்டிக்குக்கு பதில் மாற்று எது என்பதனை அரசு உறுதி செய்ய வேண்டும். அதனை முறைப்படுத்த வேண்டும்.

    அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கோரிக்கைகளை வாங்கியுள்ளனர். மத்திய, மாநிலத்தில் ஆளும் கட்சிகள், எதிர்கட்சிகளிடம் எங்களின் கோரிக்கைகளை கொடுத்துள்ளோம். எங்கள் கோரிக்கைகள், மாநாட்டு தீர்மானங்கைள நிறைவேற்றி தருகிறோம் என்று யார் உறுதி அளிக்கிறார்களோ, அது குறித்து ஆலோசனை நடத்தி வரும் பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பதனை தெரிவிப்போம்

    பல விதமான ஜி.எஸ்.டியாக இல்லமல் ஒரு முனை வரியாக இருக்க வேண்டும் என்பதனை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். வணிகர்களுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்கு தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. வணிகர்களை மிரட்டும் ரவுடிகள் மீது புகார் அளித்தால் கைது செய்யப்பட்ட சில நாள்களில் வெளியே வந்து மிரட்டும் சூழ்நிலை உள்ளது.

    தமிழகத்தில் ரவுடிகளை ஒழிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்தால் தான் ரவுடியிசம் ஒழியும். வணிகர்களுக்கு பாதுகாப்பு கிடைக்கும். தவறு செய்யும் வணிகர்களுக்கு அவர்களின் பொருளாதரத்தினை கருத்தில் கொண்டு அபராதம் விதிக்க வேண்டும். தொடர்ந்து தவறும் செய்யும் வியாபாரிகளை நீக்குவது என்று சங்கத்தில் முடிவு செய்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×