search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் தேங்கிய தார் உருண்டைகள்: எண்ணெய் கழிவு பரவி கரை ஒதுங்கியதாக மீனவர்கள் தகவல்
    X

    பழவேற்காடு கடற்கரை பகுதிகளில் தேங்கிய தார் உருண்டைகள்: எண்ணெய் கழிவு பரவி கரை ஒதுங்கியதாக மீனவர்கள் தகவல்

    • கடல் சிப்பிகளை சேகரிக்க சென்ற பெண்கள் தார் உருண்டைகள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
    • தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த இடங்களில் தண்ணீரை சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர்.

    சென்னை:

    மிச்சாங் புயல் மழையின் போது எண்ணெய் கழிவுகள் கொசஸ்தலை ஆற்று நீரிலும், மழை வெள்ளத்திலும் கலந்ததால் எண்ணூர், மணலி திருவொற்றியூர் பகுதிகளை சேர்ந்த மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இந்த எண்ணெய் கழிவுகள் எண்ணூரில் இருந்து 26 கி.மீ.தொலைவில் உள்ள பறவைகள் சரணாலயமான பழவேற்காடு ஏரியிலும் பரவியுள்ளன.

    இதனால் பழவேற்காடு ஏரி அருகே உள்ள பல கடற்கரை கிராமங்களில் கடந்த 2 நாட்களாக தார் உருண்டைகள் கரை ஒதுங்கி வருகின்றன. கடற்கரை பகுதியில் கடல் சிப்பிகளை சேகரிக்க சென்ற பெண்கள் தார் உருண்டைகள் கரை ஒதுங்கி இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    பழவேற்காடு அருகேயுள்ள கோரைக் குப்பம், வைரவன் குப்பம், அரங்கக் குப்பம், கூனங் குப்பம், பழைய சாத்தங்குப்பம் மற்றும் பழவேற்காடு மீன் மார்க்கெட் பகுதிகளிலும் தார் உருண்டைகள் காணப்படுகின்றன. இந்த தார் உருண்டைகள் அதிக அளவில் உள்ளன. மேலும் பழவேற்காடு ஏரிப்பகுதியிலும் சில இடங்களில் எண்ணெய் கழிவுகள் மிதந்துள்ளன.

    இதையடுத்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அந்த இடங்களில் தண்ணீரை சோதனைக்காக எடுத்து சென்றுள்ளனர். மேலும் தார் உருண்டைகளையும் சோதனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அதன் முடிவு இன்று வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படு கிறது. மேலும் அதிகாரிகளும் இந்த பகுதிகளை பார்வையிட்டு வருகிறார்கள்.

    மேலும் பழவேற்காடு ஏரியில் உள்ள பறவைகள் கடந்த 10 நாட்களுக்கு முன்பே வடக்கே சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு சென்றுவிட்டன. மேலும் இந்த பகுதியில் சுமார் 2500-க்கும் மேற்பட்ட மீன்கள் செத்து மிதந்துள்ளன.

    இதுகுறித்து மீனவர் சங்கத்தினர் கூறுகையில், 'பழவேற்காடு ஏரிக்கு நீர் வருவதை கண்காணித்து எண்ணெய் பரவாமல் தடுக்க வேண்டும். கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் வரத்து குறைந்து ஏரி தூர்ந்து வருகிறது. எனவே ஏரியை பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

    Next Story
    ×