search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பைக் சாகசம் செய்து பாதசாரிகளை பதற வைக்கும் இளைஞர்கள்- நடவடிக்கை எடுப்பார்களா?
    X

    பைக் சாகசம் செய்து பாதசாரிகளை பதற வைக்கும் இளைஞர்கள்- நடவடிக்கை எடுப்பார்களா?

    • சில இளைஞர்கள் செய்யும் சேட்டையால் சரியாக வாகனம் ஓட்டிச் செல்லும் மக்களும் விபத்துக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • இளைஞர்களின் அசாதாரண சாகச பயணம் காண்போரின் ரத்த அழுத்தத்தை எகிற செய்கிறது.

    திருச்சி:

    தமிழகத்தின் தலைநகரான சென்னையில் இரவு நேரங்களில் ஆட்கள் நடமாட்டம் குறைந்த சாலையில் பெற்றோரை நச்சரித்து லட்சங்களை கொட்டி வாங்கும் இருசக்கர வாகனங்களில் இளைஞர்கள் மேற்கொள்ளும் சாகச பயணம் பார்ப்போரை பதற வைப்பது இயல்பாகிவிட்டது.

    ரேஸ் என்ற பெயரில் நடத்தப்படும் இதுபோன்ற ஆபத்தான பயணங்களை தடுக்க போலீசார் கடிவாளம் போட்டாலும், அவர்கள் கண்களை மறைத்து இரவு நேரங்களில் சாலையில் தீப்பொறிகளை பறக்கவிட்டவாறு நடத்தும் சாகசங்களால் பலர் உயிரையும் பறிகொடுத்துள்ளனர்.

    தலைநகரில் மட்டும்தான் இதை செய்ய முடியுமா, நாங்களும் செய்வோம் என்று போட்டி போட்டுக்கொண்டு இரண்டாம் தலைநகர் என்ற அடைமொழியுடன் கூடிய திருச்சியிலும் இந்த கூத்து சமீப காலமாக அரங்கேறி வருகிறது. மத்திய மாவட்டமான மலைக்கோட்டை மாநகர் ஏற்கனவே போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து தினம் ஒரு விபத்து என்று நகர்கிறது.

    இதற்கிடையே இளைஞர்களின் இந்த அசாதாரண சாகச பயணம் காண்போரின் ரத்த அழுத்தத்தை எகிற செய்கிறது. திருச்சி சத்திரம் மற்றும் ஸ்ரீரங்கத்தை இணைக்கும் காவிரி பாலம் சமீபத்தில் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட் டது. தற்போது புது பொலிவுடன் காட்சி தரும் இந்த பாலம் மாநகர மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் ஒரு பகுதியாக உள்ளது. மாலை நேரங்களில் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் குடும்பத்துடன் வந்து இயற்கையை ரசிக்கின்றனர்.

    அதுமட்டுமல்லாமல் 24 மணி நேரமும் அதிக வாகனங்கள் செல்லும் பகுதியாகவும் காவிரி பாலம் விளங்குகிறது. இந்நிலையில் சில இளைஞர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் விலை உயர்ந்த அதிக குதிரைத்திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களில் இந்த காவிரி பாலத்தில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் சாகச பயணம் செய்கின்றனர்.

    பளபளக்கும் சாலையில் டயர்களை தூக்கி ஆக்சிலேட்டரை முறுக்கிக் கொண்டு சில இளைஞர்கள் செய்யும் சேட்டையால் சரியாக வாகனம் ஓட்டிச் செல்லும் மக்களும் விபத்துக்குள் சிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு சாகச பயணம் செய்யும் இளைஞர்கள் அதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்கின்றனர்.

    இதுபோன்ற சாகச பயணங்களை திருச்சி-சென்னை பைபாஸ் கூத்தூர் பாலம் அருகாமையில் உள்ள புதிய அரியலூர்-சிதம்பரம் சாலையிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த திருச்சி மாநகராட்சி பகுதி, சர்ச் ரோடு பகுதிகளிலும் அவர்கள் நடத்தி வருகின்றனர்.

    ஏற்கனவே சாலை விபத்துகளில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் அசம்பாவிதங்கள் ஏற்படும் முன்பு இதனை தடுத்து நிறுத்த வேண்டும். பொறுப்பில்லாமல் இவ்வாறு வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் வகையில் செயல்படும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    Next Story
    ×