search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வலம்புரி விளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து: புகை மூட்டத்தால் குழந்தைகள், பெரியவர்கள் அவதி
    X

    வலம்புரி விளை குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து: புகை மூட்டத்தால் குழந்தைகள், பெரியவர்கள் அவதி

    • தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.
    • தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் பீச் ரோடு பகுதியில் வலம்புரி விளை குப்பை கிடங்கு உள்ளது. மாநகர பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு கொட்டப்பட்டு வருகிறது. இதனால் குப்பைகள் மலை போல் குவிந்து கிடக்கின்றன.

    நாகர்கோவில் நகரின் மையப்பகுதியில் உள்ள இந்தக் குப்பை கிடங்கை மாற்ற வேண்டும் என்று அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சியினர் பலரும் குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து வருகிறார்கள்.

    ஆனால் இதுவரை குப்பை கிடங்கு மாற்றப்படவில்லை. இந்த குப்பை கிடங்கில் குப்பைகள் மலை போல் தேங்கி கிடப்பதால் அவ்வப்போது தீ விபத்து ஏற்படுவது வாடிக்கையாகிவிட்டது. இன்று அதிகாலையில் வலம்புரி விளை குப்பை கிடங்கில் இருந்து புகை மண்டலம் வந்தது. இதை பார்த்த அங்கு பணியில் இருந்த ஊழியர்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கும், நாகர்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அதற்குள் தீ மளமளவென்று பரவி கொழுந்து விட்டு எரிந்தது. அதனை தீயணைப்பு வீரர்கள் அணைக்க முயன்றனர். ஆனால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை. தீ வேகமாக பரவியதால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    காற்றும் வீசியதால் அந்த பகுதியை சுற்றியுள்ள குடியிருப்புகளை புகை மண்டலம் சூழ்ந்தது. இதனால் அங்கு வசிக்கும் மக்கள் அவதிக்குள்ளானார்கள். நேரம் செல்ல செல்ல புகை அதிகரித்து இருளப்பபுரத்திலிருந்து பீச் ரோடு வரும் சாலை முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.

    அந்த பகுதி வழியாக வாகனங்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு இருந்ததால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள். இந்நிலையில் தக்கலையில் இருந்தும் தீயணைப்பு வாகனம் வரவழைக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தற்பொழுது போராடி வருகிறார்கள். ஜே..சி.பி. எந்திரம் மூலமாக குப்பைகள் கிளறப்பட்டு தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    தீ விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். தீயை கட்டுப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தினார்கள்.

    இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், நாகர்கோவில் மாநகரப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் தொடர்ந்து வலம்புரி விளை குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றமும் வீசுவதால் அந்த பகுதியில் உள்ள மக்கள் மூக்கை பிடித்து கொண்டு வாழ வேண்டிய நிலை உள்ளது. குப்பை கிடங்கை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அனைத்து கட்சியினரும் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    இதனால் இந்த பகுதியைச் சேர்ந்த முதியவர்கள், குழந்தைகள் அனைவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டு வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக குப்பை கிடங்கை மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை. மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கிடங்கை மாற்றாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

    Next Story
    ×