search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Sattur Ramachandran - Thangam Thennarasu
    X

    சாத்தூர் ராமச்சந்திரன் - தங்கம் தென்னரசு

    அமைச்சர்களுக்கு எதிரான சொத்துகுவிப்பு வழக்கு- மீண்டும் விசாரிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவு

    • கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த 2 வழக்குகளையும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
    • அமைச்சர் தங்கம் தென்னரசு செப்டம்பர் 11-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

    சென்னை:

    தற்போது தமிழ்நாடு நிதி மற்றும் மனித வளம் மேம்பாட்டுத்துறை அமைச்சராக பதவி வகிப்பவர் தங்கம் தென்னரசு. இவர், கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சி காலத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக ரூ.76.40 லட்சம் அளவுக்கு சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக தங்கம் தென்னரசு, அவருடைய மனைவி மணிமேகலை ஆகியோர் மீது விருதுநகர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.இந்த வழக்கை விசாரித்த ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை செசன்சு கோர்ட்டு, வழக்கில் இருந்து இருவரையும் விடுவித்து கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் தீர்ப்பளித்தது.

    இதேபோல தற்போது வருவாய்த்துறை அமைச்சராக பதவி வகிக்கும் சாத்தூர் ராமச்சந்திரன், கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க., ஆட்சிகாலத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரூ.44.56 லட்சம் அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவிப்பில் ஈடுபட்டதாக சாத்தூர் ராமச்சந்திரன், அவருடைய மனைவி ஆதிலட்சுமி பி.விசாலாட்சி மற்றும் அவருடைய நண்பர் கே.எஸ்.பி.சண்முகமூர்த்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கிலும் ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை செசன்சு கோர்ட்டு, சாத்தூர் ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் விடுவித்து கடந்த 2022-ம் ஆண்டு தீர்ப்பளித்தது.

    ஸ்ரீவில்லிபுத்தூர் முதன்மை செசன்சு கோர்ட்டு, இரு அமைச்சர்களையும் விடுவித்து பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து தாமாக முன்வந்து வழக்கை சென்னை ஐகோர்ட்டு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரணைக்கு எடுத்தார். இதுதொடர்பாக இரு அமைச்சர்கள் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.

    இதன்படி கடந்த மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை இந்த 2 வழக்குகளையும் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டு இருந்தார்.

    இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி இன்று பிறப்பிக்க உள்ளதாக ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.

    இந்தநிலையில், சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு விடுவிக்கப்பட்டது செல்லாது என்று சென்னை ஐகோர்ட் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தீர்ப்பு அளித்துள்ளார்.

    அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு மீதான சொத்து குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நீதிபதி, அமைச்சர் தங்கம் தென்னரசு செப்டம்பர் 11-ந்தேதி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

    அமைச்சர்கள் இருவரையும் விடுவித்து கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து ஆணை பிறப்பித்துள்ள சென்னை ஐகோர்ட், சொத்து குவிப்பு வழக்கில் குற்றச்சாட்டை பதிவு செய்து சாட்சி விசாரணையை தொடங்க ஸ்ரீவில்லிபுத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் தினசரி விசாரணை நடத்தவும் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

    Next Story
    ×