search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தோட்ட வேலைக்கு சென்ற விவசாயிகளை கரடி கடித்து குதறியது- வனத்துறையினர் முகாமிட்டு தேடுதல் வேட்டை
    X

    கரடி தாக்கியதில் காயமடைந்த விவசாயிகள்.

    தோட்ட வேலைக்கு சென்ற விவசாயிகளை கரடி கடித்து குதறியது- வனத்துறையினர் முகாமிட்டு தேடுதல் வேட்டை

    • சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.
    • பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    கொல்லிமலை:

    நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை வாழவந்திநாடு பஞ்சாயத்து பகுதியில் காபி, அன்னாசி பழம், வாழை, மிளகு உள்ளிட்டவை சாகுபடி செய்யப்படுகிறது. மேலும் இப்பகுதி அடர்ந்த வனப்பகுதியாக காணப்படுகிறது. இங்கு குரங்குகள், முயல்கள், நரிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.

    இந்நிலையில் வாழவந்திநாடு பஞ்சாயத்து கரையன்காடுபட்டி கிராமத்தை சேர்ந்தவர்கள் பழனிசாமி (51), காளி (70). இவர்கள் இருவரும் விவசாய தொழில் செய்து வருகின்றனர்.

    வழக்கம்போல் இருவரும் இன்று காலை 6 மணி அளவில் அப்பகுதியில் உள்ள அடர்ந்த காடுகள் வழியாக தோட்ட வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தனர்.

    காளியம்மன் கோவில் அருகே சென்றபோது மறைந்திருந்த கரடி, அவர்கள் மீது பாய்ந்து தாக்கியது. முகம், கை, கால் , கழுத்து, உடல் உள்ளிட்ட பகுதிகளில் குடித்து குதறியது. இதனால் நிலைகுலைந்த இருவரும் படுகாயங்களுடன் அலறினர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்ததும் கரடி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டது.

    இதையடுத்து பொதுமக்கள் படுகாயம் அடைந்த பழனிசாமி, காளி ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக செம்மேடு பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது பற்றி வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வனத்துறையினர், தீயணைப்பு துறையினர், போலீசார் சம்பவம் நடந்த வனப்பகுதியில் கரடியை பிடிப்பதற்கு முகாமிட்டு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    ஏற்கனவே இந்த பகுதியில் கரடி நடமாட்டம் இருக்கிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தோட்ட வேலைக்கு சென்ற 2 பேரை கரடி கடித்து குதறிய சம்பவத்தால் வாழவந்திநாடு கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    Next Story
    ×