என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தீவிர புயலாக வலுப்பெற்றது மாண்டஸ்: சென்னை, சுற்றுவட்டார பகுதிகளில் மழை
    X

    தீவிர புயலாக வலுப்பெற்றது மாண்டஸ்: சென்னை, சுற்றுவட்டார பகுதிகளில் மழை

    • சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது.
    • மாண்டஸ் புயல் நாளை அதிகாலை வரை தீவிர புயலாக நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது

    சென்னை:

    வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த மாண்டஸ் புயல், மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து வருகிறது. இது தீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டிருந்தது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 65 கிமீ முதல் 85 கிமீ வரை வேகத்தில் பலத்த காற்று வீசும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தமிழகம் மற்றும் புதுவையில் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

    இந்நிலையில், மாண்டஸ் புயல் இன்று இரவு தீவிர புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் உறுதி செய்துள்ளது. தற்போது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 440 கி.மீ. தொலைவிலும், காரைக்காலுக்கு மேற்கு-தென்மேற்கில் 350 கிமீ தொலைவிலும் புயல் நிலை கொண்டுள்ளது. சென்னையை நோக்கி நகர்ந்து வரும் இந்த புயல், நாளை அதிகாலை வரை தீவிர புயலாக நீடிப்பதுடன், அதன்பின்னர் புயலாக படிப்படியாக வலுவிழக்க வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக இன்று இரவு சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.

    கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, அரியலூர், திருவாரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி, நாகை, புதுக்கோட்டை, சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

    இதேபோல் புதுச்சேரி, காரைக்காலிலும் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கல்வித்துறை அமைச்சர் நமச்சிவயம் வெளியிட்டுள்ளார்.

    Next Story
    ×