என் மலர்
தமிழ்நாடு
வாலிபரின் புகைப்படத்தை இணைத்து போஸ்டர் ஒட்டிய பெண்: பல வாலிபர்களை வலையில் வீழ்த்தியது அம்பலம்
- தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு ஊர் பொதுமக்கள் நியாயம் வழங்கவேண்டும்.
- வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்துவது போல பழகி பணம் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகில் உள்ள கொங்கபட்டியை சேர்ந்தவர் குருவைய்யா. பூ வியாபாரி. இவரது மகன் ரோஷன்(27). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகில் உள்ள கோவில் பாளையம் கிராமத்தை சேர்ந்த அந்தோணி மகள் உஷா(31) என்பவருடன் பேஸ்புக்கில் பழகி வந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் உஷாவுடன் பேசுவதை ரோஷன் நிறுத்திவிட்டார். ஆனால் அதன்பிறகும் ரோஷனின் செல்போனுக்கு தொடர்ந்து உஷா போன் செய்து வரவே அவரது நம்பரை பிளாக் செய்துவிட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த உஷா பேஸ்புக்கில் இருந்த ரோஷனின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து அதனை தன்னுடன் சேர்ந்து இருப்பது போல போஸ்டர் தயாரித்தார். தன்னை காதலித்து ஏமாற்றிவிட்டதாகவும், இதற்கு ஊர் பொதுமக்கள் நியாயம் வழங்கவேண்டும் என நிலக்கோட்டை பூ மார்க்கெட் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போஸ்டர் ஒட்டினார்.
மேலும் குருவைய்யா பூ மார்க்கெட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது உஷா மற்றும் கொங்கபட்டியை சேர்ந்த சவுந்திரராஜன்(55), சிவஞானம்(45), திருப்பூர் கூத்தம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு மனைவி கிருஷ்ணவேணி(40) ஆகிய 4 பேரும் வழிமறித்து ரூ.5லட்சம் பணம் கொடுக்காவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர்.
இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் நிலையத்தில் குருவைய்யா புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரசாத் ஆகியோர் வழக்குபதிவு செய்து பணம் கேட்டு மிரட்டிய உஷா என்ற கமலேஸ்வரி(31), சிவஞானம்(45), கிருஷ்ணவேணி(40) ஆகிய 3 பேரையும் கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் நல்லகண்ணன் உத்தரவிட்டார்.
போலீசார் விசாரணையில் உஷா என்ற கமலேஸ்வரி இதேபோல் பல்வேறு வாலிபர்களை காதல் வலையில் வீழ்த்துவது போல பழகி பணம் பறித்திருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.