search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலி
    X

    மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி பலி

    • மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் வார்டில் சேர்க்கப்பட்டு தனி கவனம் செலுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.
    • ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தருமபுரி:

    தமிழகம் முழுவதும் பருவ நிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் அடிக்கடி காய்ச்சல், சளி போன்ற நோய் தொல்லைகளால் அவதிப்பட்டு வந்தனர். மேலும் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்தனர்.

    டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் அரசு அதிகாரிகள் வீடு, வீடாக சென்று கொசுப்புழுக்களை அழிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும், அந்தந்த மாவட்டங்களில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனியாக சிறப்பு டெங்கு காய்ச்சல் வார்டு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 50 படுக்கைகள் கொண்ட தனி வார்டும், மேலும் மாவட்டத்தில் உள்ள 4 அரசு மருத்துவமனைகளில் 60 படுகைகள் கொண்ட வார்டுகளும் தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது.

    மாவட்டத்தில் டெங்குவால் பாதிக்கப்பட்டவர்கள் டெங்கு காய்ச்சல் வார்டில் சேர்க்கப்பட்டு தனி கவனம் செலுத்தி டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் (45) மற்றும் சுமித்ரா(35) ஆகிய தம்பதியினருக்கு பிரித்திகா (15), தாரணி (13), யோகலட்சுமி (7), அபிநிதி(4), புருஷோத்தமன் 8 மாத கைக்குழந்தை என 5 குழந்தைகள் உள்ளனர்.

    இந்த நிலையில் யோகலட்சுமி, அபிநிதி, புருஷோத்தமன் ஆகிய 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கடந்த 23-ந் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதித்ததினர்.

    இந்நிலையில் யோகலட்சுமி மட்டும் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து தற்போது பெங்களூரில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இருந்து அபிநிதி மற்றும் புருஷோத்தமன் ஆகிய 2 குழந்தைகளும் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கடந்த 26-ந் தேதி மேல் சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு அபிநிதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    மேலும் புருஷோத்தமன் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    அப்போது அங்கு இருந்த சிறுமியின் பெற்றோர் அபிநிதியின் உடலை பார்த்து கதறி அழுதனர். இதைத்தொடர்ந்து டாக்டர்கள் சிறுமியின் உடலை அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் சிறுமியின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து சென்றனர்.

    திருப்பத்தூர் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகளுக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டு ஒரு பெண் குழந்தை உயிர் இழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சிறுமியின் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் டெங்கு தடுப்பு பணிகளில் மாவட்ட நிர்வாகத்தினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×