என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: கர்நாடக முதல்வரின் பேச்சுக்கு திருப்பூர் விவசாயிகள் கடும் கண்டனம்
- தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநில மக்களின் உரிமை.
- மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு இழப்புகள் அதிகம் ஏற்படும்.
பல்லடம்:
கர்நாடக பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகதாது அணை கட்டப்படும். அதற்கு தேவையான நிதி ஒதுக்க அரசு தயாராக உள்ளது என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை பேசியுள்ளார். இதற்கு திருப்பூர் மாவட்ட விவசாய சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இது குறித்து உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பல்லடத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
காவிரியில் இனி அணை கட்டுவது என்பது நடக்காத காரியம். அதனை தெரிந்து கொண்டே கர்நாடக முதல்வர் பேசுவது வேடிக்கையாக உள்ளது. காவிரிஆறு கர்நாடகத்திற்கு மட்டும் சொந்தமானது அல்ல. தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட 3 மாநில மக்களின் உரிமை. ஏற்கனவே கர்நாடகாவில் ஒருதலைப் பட்சமாக அணைகளை கட்டியுள்ளனர். இதனால் கடந்த ஆண்டுகளில் காவிரி தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகத்தில் சுமார் 15 லட்சம் ஹெக்டேர் சாகுபடி பரப்பு குறைந்துள்ளது. ஆனால் அதே சமயம் கர்நாடகத்தில் சுமார் 28 லட்சம் ஏக்கர் சாகுபடி அதிகரித்துள்ளது. அணை கட்டுவதற்கு முன்பு 3 மாநில அரசுகள், விவசாயிகள் கூடி முடிவெடுத்து செய்ய வேண்டிய விஷயம்.
இதனை காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவை தெளிவாக இதனை உணர்த்தி உள்ளது. இதனை மீறி, உச்ச நீதிமன்ற உத்தரவையும் மீறி கர்நாடக முதல்வர் பேசுவது அழகல்ல. இது வரம்பு மீறிய செயல். இதனை உழவர் உழைப்பாளர் கட்சி கண்டிக்கிறது. இது போன்ற பேச்சுக்களால் 3 மாநில உறவுகள் பாதிக்கப்படும்.விவசாயிகள்- பொதுமக்கள் ஆகியோருக்கிடையே மனக்கசப்பு உருவாக்கும் வகையில் கர்நாடக முதல்வர் பேசியதை கண்டிக்கிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன் கூறியதாவது :-
காவிரி நீர் மேலாண்மை ஆணையம், காவிரி நடுவர் மன்றம் ஆகியவற்றை மீறி கர்நாடக முதல்வர் காவிரியில் மேகதாது அணை கட்டப்படும் என பேசி உள்ளது ஜனநாயகத்திற்கு விடும் சவாலாக உள்ளது. இது ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் செயலாகும்.காவிரி நீரை நம்பி இருக்கும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அந்த திட்டம் பாதிக்கும். கர்நாடக முதல்வரின் இந்த நடவடிக்கை தமிழக மக்களிடையே அச்ச உணர்வை உருவாக்கி உள்ளது.காவிரியில் இனிமேலும் உரிமைகளை இழப்பதற்கு தமிழ்நாடு தயாராக இல்லை. ஒட்டுமொத்த தமிழக மக்களும், அமைப்புகளும், விவசாய சங்கங்களும், கட்சிகளும், ஓரணியில் போராடி காவிரியில் இருக்கிற உரிமைகளை காக்க வேண்டும். அதையும் மீறி அணை கட்டினால் கட்டப்படும் அந்த அணை தமிழர்களால் உடைக்கப்படும்.
பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கர்நாடக மாநில இணைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் தமிழ்நாடு மாநில பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை இது குறித்து அவரது நிலைப்பாட்டை விளக்க வேண்டும் என்றார்.
கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்க தலைவர் வெற்றி கூறியதாவது:-
கர்நாடக முதல்வரின் பேச்சை கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. காவிரி பிரசனை தொடர்பாக தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா ,புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களின் ஒப்புதலை கேட்டுத்தான் முடிவுகளை எடுக்க வேண்டும் என ஏற்கனவே உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில் கர்நாடக முதல்வரின் தன்னிச்சையான போக்கு ஜனநாயகத்தை கேலி கூத்தாக்குகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டிற்கு இழப்புகள் அதிகம் ஏற்படும். காவிரி உற்பத்தியாவது கர்நாடகம். ஆனால் அதன் பயணம் தமிழகத்தில் தான் செல்கிறது. ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையால் தமிழகத்தில் பாசனப்பரப்பு வெகுவாக குறைந்துள்ளது. இதில் மீண்டும் அணை கட்டுவதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை. விவசாயிகளுக்கு மட்டுமல்ல பொதுமக்களுக்கும் இது மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மத்திய அரசு இதில் அரசியல் செய்யாமல், தமிழகத்தின் உண்மை நிலையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.






