என் மலர்
தமிழ்நாடு செய்திகள்
- தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 30 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு ரூ.12 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது.
- குறைவான மக்கள்தொகை கொண்ட தமிழகத்திற்கு குறைவான நிதி தான் ஒதுக்கப்படும்.
தமிழகத்தில் 100 நாள் திட்டம் என்று அழைக்கப்படும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிக்கும் திட்டத்தை மத்திய அரசு விபி-ஜி ராம் ஜி என பெயர் மாற்றம் செய்து, அடுத்த நிதியாண்டு முதல் நடைமுறைப்படுத்த உள்ளது. அதோடு, இந்த சட்டத்தின் மூலம் இனி 100 நாட்களுக்கு பதில் 125 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்து இருக்கிறது. ஆனால் இந்த திட்டத்தின் இதர அம்சங்கள், இந்த திட்டத்தையே முடக்கி போட்டு விடும் என்று எதிர்க்கட்சிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். உதாரணமாக முன்பு இந்த திட்டத்தில் இந்த திட்டத்திற்கான நிதி உதவி, அதாவது ஊழியர்களுக்கான சம்பளம் முழுவதும் மத்திய அரசு வழங்கியது. அதே நேரத்தில் சொத்துகளை உருவாக்குதல் திட்டத்தின் கீழ் பொருட்களுக்கான செலவில் மத்திய அரசு 75 சதவீதமும், மாநில அரசின் பங்கு 25 சதவீதமூம் இருந்தது.
ஆனால் புதிய திட்டத்தில் ஊழியர்கள் சம்பளம் மற்றும் பொருட்களுக்கான செலவில் மத்திய அரசின் பங்கு 60 சதவீதமும், மாநில அரசின் பங்கு 40 சதவீதமும் இருக்கும். இது மாநிலங்களுக்கு பெரும் நிதி சுமை ஏற்படுத்தும். குறிப்பாக இந்த திட்டத்தால் மற்ற மாநிலங்களை விட தமிழகத்திற்கு மிக அதிக பாதிப்பு ஏற்பட உள்ளது. ஏனென்றால் இந்தியாவிலேயே, இந்த திட்டத்தால் அதிகம் பலன் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.தமிழ்நாட்டில், இந்த திட்டத்தின் கீழ் வேலை செய்ய மொத்தம் 88 லட்சத்து 56 ஆயிரம் பேர் பதிவு செய்து இருக்கின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கையை விட பீகார், மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் அதிகம் பதிவு செய்யப்பட்டு இருந்தாலும் அதிகம் நிதி பெறுவதில் தமிழ்நாடு தான் முன்னணியில் இருக்கிறது.
தமிழகத்தில் சராசரியாக ஆண்டுக்கு 30 கோடி மனித சக்தி நாட்கள் உருவாக்கப்பட்டு ரூ.12 ஆயிரம் கோடி ஊதியமாக வழங்கப்படுகிறது. இந்த தொகை மற்ற மாநிலங்களை விட மிக அதிகம். ஆனால் அதே மதிப்பில் இந்த திட்டத்தை வரும் ஆண்டிலும் தமிழக அரசு செயல்படுத்தினால், அதாவது குறைந்தபட்சம் ரூ.4 ஆயிரத்து 600 கோடி தமிழக அரசு ஒதுக்க வேண்டி வரும். ஒரே ஆண்டில் இவ்வளவு பெரிய தொகையை நிச்சயம் ஒதுக்க முடியாது. எனவே இந்த திட்டத்தின் செலவை குறைக்க மாநில அரசு முற்படும். அப்படி செய்தால் வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து விடும். இது தவிர இந்த புதிய திட்டத்தால் தமிழக அரசுக்கு ஏற்படும் மற்ற பாதிப்புகள் விவரம் வருமாறு:-
* பழைய திட்டத்தில் தமிழக அரசு, ஒரு நிதியாண்டிற்கு எவ்வளவு திட்டங்களை செயல்படுத்த போகிறோம் என்று கூறி மத்திய அரசுக்கு உத்தேச அறிக்கை கொடுப்பார்கள். பின்னர் திட்டங்களை கூடுதலாக செயல்படுத்தினாலும், அந்த தொகையையும் மத்திய அரசு கொடுத்து விடும். ஆனால் இனி அது போல் நடக்காது. கூடுதலாக மேற்கொள்ளப்படும் திட்டத்திற்கான நிதியை 100 சதவீதம் மாநில அரசு மட்டுமே ஏற்கவேண்டும்.
* இந்த திட்டத்தின் கீழ் எந்த பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதனை கிராம ஊராட்சிகளும், மாநில அரசும் முடிவு செய்தது. ஆனால் இனி மத்திய அரசும் அதனை முடிவு செய்து ஒப்புதல் வழங்கும்.
* முன்பு தமிழக அரசு எவ்வளவு ரூபாய் மதிப்பீட்டுக்கு திட்டம் வகுத்தாலும், அதனை மத்திய அரசு ஏற்றுக்கொள்ளும். ஆனால் இனி நிதி ஒதுக்கீட்டினை மத்திய அரசு தான் முடிவு செய்யும். அதாவது மக்கள்தொகை போன்ற அம்சங்களை கவனத்தில் கொண்டு தான் மத்திய அரசு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படும். எனவே குறைவான மக்கள்தொகை கொண்ட தமிழகத்திற்கு குறைவான நிதி தான் ஒதுக்கப்படும்.
* கிராமப்புறங்களில் இந்த திட்டத்தின் கீழ் கட்டப்படும் பஞ்சாயத்து அலுவலகம், அங்கன்வாடி மையம், ரேஷன் கடை மற்றும் சிமெண்ட் ரோடு ஆகியவற்றுக்கும் 100 நாள் திட்டத்தின் வேலை உழைப்பு நாட்கள் பயன்படுத்தப்பட்டது. மேலும் இதற்கான பொருட்கள் செலவில் மத்திய அரசு 75 சதவீதம் வழங்கியது. ஆனால் இனி 60 சதவீதம் தான் வழங்கும். எனவே அதற்கும் தமிழக அரசுக்கு கூடுதல் நிதி சுமை ஏற்படும்.
- 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.
- தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
மத்திய அரசு 2024-25-ம் ஆண்டுக்கான சுற்றுலாப் பயணிகள் வருகையை உள்நாடு மற்றும் வெளிநாடு என்ற 2 வகைகளில் மாநிலம் வாரியாக வெளியிட்டுள்ளது. அதில் இந்தியா முழுவதும் 294.82 கோடி உள்நாட்டு பயணிகளும், 2 கோடியே 9 லட்சத்து 42 ஆயிரம் வெளிநாட்டு பயணிகளும் சுற்றுலா மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 64.68 கோடி சுற்றுலாப் பயணிகள் உத்தரபிரதேசத்திற்கு சென்றுள்ளனர். இது இந்திய அளவில் 21.9 சதவீதம் ஆகும். இதன் மூலம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது.
அடுத்தபடியாக தமிழகம் 30.68 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் 2-ம் இடத்தை பெற்றுள்ளது. இது தேசிய அளவில் 10.4 சதவீதமாகும். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதியம்மன் கோவில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோவில் என ஆன்மிக தலங்கள் மற்றும் ஊட்டி, கொடைக்கானல் என மலைவாழ் தலங்கள், மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் காரணமாக அதிக அளவில் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்ந்து 2012 முதல் 2018-ம் ஆண்டு வரை உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதல் இடத்தில் இருந்துள்ளது.
ஆனால், 2019-ம் ஆண்டு வாரணாசியில் அமைந்துள்ள காசி விசுவநாதர் கோவில் புனரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு 2021 டிசம்பர் 13-ந் தேதி காசி விசுவநாதர் கோவில் காரிடார் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து 2020-ல் அயோத்தி ராமர் கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2024 ஜனவரி 22-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதன் காரணமாக உத்தரபிரதேசத்திற்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் உத்தரபிரதேசம் முதல் இடத்தை பெற்றுள்ளது. அதனால், தமிழகம் 2-ம் இடத்திற்கு தள்ளப்பட்டது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் 30.45 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளை (தேசிய அளவில் 10.3 சதவீதம்) கவர்ந்து 3-வது இடத்தை பெற்றுள்ளது. 4-வது இடத்தில் 29.02 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 9.8 சதவீதம்) ஆந்திரபிரதேசமும், 5-வது இடத்தில் 23 கோடி உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் (தேசிய அளவில் 7.8 சதவீதம்) ராஜஸ்தானும் இடம் பெற்றுள்ளன.
இதேபோன்று வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் 37.1 லட்சம் எண்ணிக்கையுடன் மகாராஷ்டிர மாநிலம் முதல் இடத்தை பெற்றுள்ளது. 2-வது மாநிலமாக 31.2 லட்சம் பயணிகளுடன் மேற்கு வங்கமும், 3-வது மாநிலமாக 22.7 லட்சம் சுற்றுலாப் பயணிகளுடன் உத்தரபிரதேசமும் இடம் பெற்றுள்ளன.
அதே போன்று 22.7 லட்சம் பயணிகளுடன் குஜராத் மாநிலம் 4-வது இடத்தை பெற்றுள்ளது. 11.6 லட்சம் பயணிகளுடன் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் பட்டியலில் தமிழகம் 5-வது இடத்தை பெற்றுள்ளது. இருந்த போதிலும் தென்னிந்திய மாநிலங்களில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவர்வதில் தமிழகம் முதலிடம் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்.
- பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இந்த பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் இன்று மதியம் 2 மணியளவில் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்.
இந்த சிறப்பு திருத்தப் பணிகளின்போது, உயிரிழந்தவர்கள், முகவரி மாறியவர்கள், கண்டுபிடிக்க முடியாதவர்கள் மற்றும் இரட்டைப் பதிவு வாக்காளர்களின் பெயர்கள் சரிபார்க்கப்பட்டு, தகுதியான வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையானது, எந்த தகுதியான வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டினைப் பின்பற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், கண்டறிய இயலாத மற்றும் முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அணுகுவதற்கான வசதி, அந்தந்த மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இந்த பட்டியலில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
- கீழ்ப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.
- சிறுபான்மை மக்களின் பாதுகாவலனாக அ.தி.மு.க. செயல்பட்டு வருகிறது என இபிஎஸ் பேசினார்.
சென்னை:
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
கிறிஸ்தவ மக்களை பெருமைப்படுத்தும் விதமாக அ.தி.மு.க. சார்பில் கடந்த 20 ஆண்டாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது.
ஓட்டுக்காக மட்டுமே சிறுபான்மை நலனைப் பற்றி பேசும் தி.மு.க.வின் கபட நாடகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அ.தி.மு.க.வை பொறுத்தவரை மதத்திற்கும், ஜாதிக்கும் அப்பாற்பட்ட கட்சி. அனைத்து மதத்தினரையும் ஒன்றாக பாவிக்கும் கட்சி.
தீய சக்திகளிடம் நாம் ஏமாந்துவிட்டால் தமிழகம் இருளில் சிக்கிவிடும்.
ஏசு பிரான் தீய சக்திகளை அழிக்க உலகத்துக்கு ஒலியாக வந்தார். தீயசக்திகளாக இருப்பவர்களை ஒலியின் வேஷம் தரித்தவர்கள் என்றும் அவர்களிடம் மக்கள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தினார்.
கூட்டணி என்பது தேர்தல் சமயத்தில், கட்சிகளுக்கு இடையே ஏற்படுத்திக் கொள்கின்ற ஒப்பந்தம் மட்டுமே. அது சூழ்நிலைக்கு ஏற்ப அமைக்கப்படுகிறது. கொள்கை என்பது எங்களது கட்சியின் உயிர் மூச்சு போன்றது.
அ.தி.மு.க. தனது கொள்கையில் உறுதியாக உள்ளது. தேர்தலில் வெற்றி பெறவேண்டும் என்ற அடிப்படையில்தான் கூட்டணி வைத்து உள்ளோம்.
ஜெயலலிதா. தி.மு.க. எனும் தீய சக்தியை எதிர்த்து ஜெயலலிதா போராடினார்.
தீயசக்திகளிடம் ஏமாந்து போய்விட்டால் விடியல் என்பதே இருக்காது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அ.தி.மு.க. பாடுபடும் இயக்கம் என தெரிவித்தார்.
- இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமாக இருந்தது அவரது எளிமைதான்.
- இயேசுவின் மற்றொருக் கொள்கையான பகிர்வின் அடிப்படையில்தான் எல்லோருக்கும் எல்லாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்திவருகிறார்.
மதுரையில் திமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு பேசினார். அப்போது
"கிறிஸ்தவக் கொள்கைகளுக்கும், திராவிட இயக்க கொள்கைகளுக்கும் மிகப்பெரிய வேறுபாடு கிடையாது. இரண்டுமே எல்லா நேரத்திலும் அன்பை, மனிதநேயத்தை, சமத்துவத்தைதான் மற்றவர்களிடம் காட்டவேண்டும் என்பதைத்தான் வலியுறுத்துகிறது.
உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும், எல்லா மக்களாலும் ஒருவரின் பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது என்றால், அது இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாள்தான். அதைவிட முக்கியம் அவரது பிறந்தநாளை மட்டும் கொண்டாடினால் போதாது, அவரது கருத்துகளையும் பின்பற்றவேண்டும். ஏனெனில் இயேசுவின் வாழ்க்கையில் முக்கியமாக இருந்தது அவரது எளிமைதான்.
மக்களுக்கான தலைவர்கள் எப்போதும் அரண்மனையில்தான் இருப்பார்கள் என்ற கருத்தை தனது பிறப்பால் உடைத்தவர்தான் இயேசு. சாதாரண பின்புலத்தில் இருந்து வந்தால்கூட உழைத்தால் உயரலாம் என்பது நமது திராவிட இயக்கம். இயேசு கிறிஸ்துவை போல. அதற்கு எடுத்துக்காட்டு நமது பேரறிஞர் அண்ணா, பெரியார், கருணாநிதி. இவர்கள் எல்லாம் மக்களோடு மக்களாக வளர்ந்தவர்கள்.
அதுபோல இரக்கம் என்பது எல்லோரிடத்திலும் இருக்கவேண்டும் என கிறிஸ்தவம் கூறுகிறது. அதைத்தான் நமது திராவிடமும் வலியுறுத்தி வருகிறது. ஆனால் மத்தியில் இருப்பவர்களுக்கு இரக்க உணர்வைவிட வெறுப்புணர்வுதான் அதிகம் இருக்கிறது. குறிப்பாக தமிழ்நாடு மீதும், தமிழ்நாட்டு மக்கள்மீதும். மதம், மொழி, சாதியின்பேரில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர். தமிழ்நாட்டில் அவர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி எப்போதும் நிறைவேறாது. ஏனெனில் தமிழ்நாடு எப்போதும் ஒரு தனித்துவமான மாநிலம்.
இயேசுவின் மற்றொருக் கொள்கையான பகிர்வின் அடிப்படையில்தான் எல்லோருக்கும் எல்லாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி நடத்திவருகிறார். ஆனால் பகிர்வு என்றாலே மத்திய அரசுக்கு பிடிக்காது. திமுக கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் உள்ளிட்ட அனைத்து சிறுபான்மை மக்களுக்கும் எப்போதும் ஒரு பாதுகாப்பு அரணாகத்தான் இருந்துள்ளது" என தெரிவித்தார்.
- நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது.
- இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றாததை கண்டித்து மதுரையில் முருக பக்தர் பூர்ண சந்திரன் தீக்குளித்து உயிரிழந்ததாக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், "மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி மலை தீபத்தூணில் தீபம் ஏற்றுவதைத் தடை செய்த திமுக அரசைக் கண்டித்து, மதுரை மாநகர் நரிமேடு பகுதியை சேர்ந்த தீவிர முருக பக்தர், சகோதரர் திரு. பூர்ண சந்திரன், தீக்குளித்து உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது. நீதிமன்றங்களின் மீது நம் அனைவருக்கும் முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், இது போன்ற வருந்தத்தக்க முடிவை, சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் எடுத்திருப்பது மிகவும் வேதனையளிப்பதாக உள்ளது. ஒவ்வொருவரும், அவர்களது குடும்பத்தினருக்கு முக்கியம். இது போன்ற முடிவுகள், எப்போதும், எதற்காகவும் வேண்டாம் என்று அனைவரிடமும் பணிவாகக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தருமாறு, மதுரை பாஜக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன்.
சகோதரர் திரு. பூர்ண சந்திரன் அவர்கள் ஆன்மா, முருகன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.
- மாநிலங்கள் மீது கடுமையான நிதிச்சுமைகளை சுமத்துவதுடன் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வண்ணம் உள்ளது
- 2023-24 ஆண்டில் மட்டும் 40.87 கோடி மனிதநாட்கள் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு 13,400 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது
மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி சட்டத்தை இரத்து செய்து அதற்கு பதிலாக விபிஜி ராம்ஜி என்ற புதிய சட்டமுன்வடிவை கொண்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், 2005 (MGNREGA)-ஐ இரத்து செய்து, அதற்குப் பதிலாக Viksit Bharat Guarantee for Rozgar and Ajeevika Mission (Gramin) (VB-G RAM G), 2025 சட்டமுன்வடிவினை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியதற்கு தமிழ்நாடு அரசின் ஆழ்ந்த கவலையையும், கடுமையான எதிர்ப்பையும் தெரிவிப்பதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
2005 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உருவாக்கச் (MGNREGA) சட்டமானது இந்தியாவின் கிராமப்புற வாழ்வாதார பாதுகாப்பில் ஒரு மிக முக்கிய பங்கு வகிக்கிறது என்றும், இது வேலைவாய்ப்பை வழங்கும் உத்தரவாதத்தை கோடிக்கணக்கான கிராமப்புற குடும்பங்களுக்கு வழங்குவதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழ்நாட்டில், இந்தத் திட்டம் 2006 முதல் செயல்படுத்தப்பட்டு, ஆண்டிற்கு சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி, சுமார் 12,000 கோடி ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2021-22 முதல் 2024-25ஆம் ஆண்டுவரை, சராசரியாக 30 கோடி மனித-வேலைநாட்கள் வேலையை வழங்கியுள்ளதாகவும், 2023-24 ஆண்டில் மட்டும் 40.87 கோடி மனிதநாட்கள் உருவாக்கப்பட்டு, தொழிலாளர்களுக்கு 13,400 கோடி ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார். பாசனத்திற்கு ஜீவ நதிகள் இல்லாத பகுதிகளிலும், விவசாயப் பகுதிகளில் மழை குறைவாக பெய்யும் காலங்களிலும், பட்டியல் இன மக்கள் உட்பட பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு இத்தகைய வேலை முறையே வருமானத்திற்கு முக்கிய ஆதாரமாக இருந்து வருகிறது என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த சட்டமுன்வடிவில் உத்தரவாத வேலைவாய்ப்பை ஆண்டுக்கு 125 நாட்களாக அதிகரித்திருப்பது ஒரு வரவேற்கத்தக்க அம்சமாக இருந்தாலும், அதன் மற்ற விதிகள் இந்தத் திட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளை பலவீனப்படுத்துவதாக உள்ளதுடன் மாநிலங்கள் மீது கடுமையான நிதிச்சுமைகளை சுமத்துவதுடன் கூட்டாட்சி தத்துவத்தை அழிக்கும் வண்ணம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் இச்சட்டமுன்வடிவு மாநிலங்களின் நிதியையும், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழை கிராமப்புறத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்றும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தேவை அடிப்படையிலான ஒதுக்கீட்டிலிருந்து விநியோக அடிப்படையிலான ஒதுக்கீட்டிற்கு மாறுதல்:
இந்த சட்டமுன்வடிவில், ஒன்றிய அரசால் பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களின் அடிப்படையில் மாநிலவாரியான திட்ட ஒதுக்கீடுகளை நிர்ணயிக்க ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் உள்ளது. இது செலவினங்களுக்கு வரம்பு விதித்து, கூடுதல் செலவுகளை மாநிலங்களே ஏற்க வேண்டும் என்றும் கோருவது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் தேவை அடிப்படையிலான தன்மையிலிருந்து மாறுபடுகிறது. காலநிலை மற்றும் புவியியல் காரணங்களால் தேவை அதிகமாக உள்ள தமிழ்நாட்டில், இத்தகைய நிர்ணயம் (உள்ளூர் தேவைகளைக் கருத்தில் கொள்ளாமல், மக்கள் தொகையின் அடிப்படையில் கணக்கிடுவர்) வேலை நாட்களையும் கூலியையும் குறைத்து, கிராமப்புறத் தொழிலாளர்களுக்கு பெருத்த இன்னல்களை ஏற்படுத்தும்.
மாநிலங்கள் மீது அதிகரிக்கும் நிதிச்சுமை:
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், திறனற்ற தொழிலாளர்களுக்கான ஊதியச் செலவுகள் மற்றும் நிருவாகச் செலவுகள் முழுவதையும் ஒன்றிய அரசு ஏற்கிறது, மேலும் மூலப்பொருட்களுக்கான செலவில் 75:25 என்ற விகிதத்தில் பகிர்ந்துகொள்கிறது. ஆனால் இந்த புதிய சட்ட முன்வடிவில் ஊதியம், மூலப்பொருட்கள் மற்றும் நிருவாகம் ஆகியவற்றுக்கான புதிய 60:40 நிதிப்பங்கீட்டு முறை, ஏற்கெனவே நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் பல மாநிலங்கள் மீது பெரும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும்.
அதிகப்படியான மையப்படுத்தல்;
இந்த சட்ட முன்வடிவின்படி வேலை உறுதியளிப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் பகுதிகளை அறிவிக்கவும், திட்டங்களை தேசிய அமைப்புகளுடன் ஒருங்கிணைக்கவும் ஒன்றிய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் விதிகள், கிராம ஊராட்சிகளின் பரவலாக்கப்பட்ட திட்டமிடலைக் குறைத்து, அடிமட்ட ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் வகையில் உள்ளன.
மகாத்மா காந்தியின் பெயரை நீக்குதல்:
MGNREGA திட்டத்தின் பெயரை மாற்றுவது, மகாத்மா காந்தியின் கிராம சுயராஜ்ஜியம் மற்றும் அதிகாரப்பரவல் பற்றிய தொலைநோக்குப் பார்வையை சிதைக்கும் வண்ணம் உள்ளது.
எனவே, மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரசு வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் அடிப்படையான தன்மையை மாற்றி, அதை ஒன்றிய அரசால் கட்டுப்படுத்தப்படும் வகையிலும், வரவுசெலவுத் திட்ட வரம்புக்குட்பட்ட ஒரு திட்டமாக மாற்றும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்திய ஆய்வுகளில் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியும் இந்த சட்டமுன்வடிவானது மாநிலங்களின் வளர்ச்சி செயல்பாடுகளுக்கான வாய்ப்பைக் குறைப்பதுடன் ஜனநாயகத்தை மேம்படுத்த தடையாக அமைந்துவிடும் என்றும் பல்வேறு ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் கட்டிக்காட்டியுள்ளார்.
ஆகவே, முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்டமுன்வடிவானது கோடிக்கணக்கான கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிப்படையச் செய்து, தமிழ்நாடு போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் ஒன்றிய-மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது என்றும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, 2025 விபி-ஜி ராம் ஜி சட்டமுன்வடிவினை செயல்படுத்த வேண்டாம் என்று ஒன்றிய அரசை தாம் வலியுறுத்துவதாகவும் அதற்குப் பதிலாக, மாநிலங்களுடன் விரிவான கலந்தாலோசனைகளுக்குப் பிறகு, திருத்தங்கள் மூலம் வேலை நாட்களை 125 நாட்களாக அதிகரிப்பது மற்றும் விவசாயப் பருவகால இன்னல்களைத் தவிர்ப்பது போன்ற பிற நேர்மறையான அம்சங்களை சேர்த்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தக்கவைத்து வலுப்படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது கடிதத்தின் வாயிலாக பிரதமருக்கு வலியுறுத்தியுள்ளதுடன் நாட்டின் கிராமப்புற ஏழைகளுக்கு ஒரு வலுவான, தேவை அடிப்படையிலான வாழ்வாதாரமாகத் திகழும் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டம் தொடர்வதை உறுதிசெய்திடும் பணியில் தமிழ்நாடு ஆக்கப்பூர்வமாகப் பங்கேற்கத் தயாராக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
- போராடும் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் திமுக அரசின் செயல் மக்களாட்சிக் கோட்பாட்டை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்.
- திருப்பூர் மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இருக்கும் இடுவாய் கிராமத்தில் அமைய இருக்கும் குப்பைக் கிடங்குத் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்திட்டம் குறித்த முன்மொழிவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ளப் பதிவில்,
"திருப்பூர் மாவட்டம் பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட இடுவாய் ஊராட்சி சின்ன காளிபாளையத்தில் உள்ள பகுதிகளில், நாள்தோறும் சேகரிக்கப்படும் ஏறக்குறைய 700 முதல் 800 டன் அளவுள்ள குப்பைகளை கொட்டும் முயற்சியை அரசு செய்து வருகின்றது. திருப்பூர் மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை விதிகளுக்கு மாறாக, குப்பைகளைத் தரம்பிரிக்காமல் பொதுவெளியில் கொட்டியதற்காகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் ஆகியவற்றால் ஏறக்குறைய 3.15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த நிகழ்வுகளுக்குப் பிறகும் திருப்பூர் மாநகராட்சியின் பொறுப்பற்ற செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியதாகும்.
முதலிபாளையம், காளாம்பாளையம், சிறுபூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல் ஆகிய பகுதியில் கைவிடப்பட்ட கல் குவாரியில் கொட்டிய குப்பையை அகற்றாமல் தற்போது இடுவாயில் புதிய குப்பைக் கிடங்கு அமைத்து மாநகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் பிரிக்கப்படாதக் குப்பைகள் கொட்டப்பட்டு வருவது துளியும் பொறுப்பின்றி செயல்படும் ஆட்சிக்கான எடுத்துக்காட்டாக விளங்குகிறது. குப்பையைத் தொடக்கத்திலேயே பிரிக்காமல், அறிவியல் அடிப்படையில் அகற்றாமல் கிராமங்களைக் குப்பைத் தொட்டியாக மாற்றும் பணியைத் திமுக அரசு செய்து வருகிறது .
அரசின் இந்த செயலால் திருப்பூர் மாநகராட்சியின் முதன்மைச் சாலைகளான அனுப்புர்பாளையம் சாலை, காந்தி நகர், வேலம்பாளையம், அங்கேரிபாளையம், புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் குப்பைகள் அனைத்தும் சாலையின் ஓரத்தில் கொட்டப்பட்டு மிகவும் துர்நாற்றம் ஏற்பட்டு பொது மக்களுக்கு தொற்றுநோய் ஏற்படும் ஆபத்து உள்ளது. மேலும் திருப்பூர் நகரின் முதன்மைப் பகுதியான நொய்யல் ஆற்றங்கரையோரம் அனைத்துக் குப்பைகளையும் கொட்டி, அதனைத் தீயிட்டுக் கொளுத்திக் காற்று மாசுபாடு மற்றும் நீர் மாசுபாட்டினை அரசே ஏற்படுத்தி வருகின்றது.
இடுவாய் கிராமத்தில் குப்பைக் கொட்டப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடுவாய் மற்றும் சுற்றியுள்ள 5 ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இடுவாய் சின்ன காளிபாளையத்தில் அறப்போராட்டத்தில் ஈடுபடும் பொதுமக்களை காவல் துறை தனது அடக்குமுறையால் பெண்கள், வயதானவர்கள் என்றும் பாராமல் கைது செய்து அடைத்துவைத்து குப்பையை மக்களுக்கு தெரியாமல் கொட்டும் செயலை செய்து வருகிறது. போராட்டத்தில் ஈடுபடும் மக்களை காலையில் கைது செய்து பின்னர் இரவு நேரங்களில் விடுவித்து, பிறகு மீண்டும் கைது செய்யும் அடக்குமுறை நடவடிக்கைகளை அரசு கைவிட வேண்டும். போராடும் மக்களின் அடிப்படை உரிமைகளை முடக்கும் திமுக அரசின் செயல் மக்களாட்சிக் கோட்பாட்டை காலில் போட்டு மிதிக்கும் செயலாகும்.
எனவே, திடக்கழிவு மேலாண்மை விதிகளையும் பின்பற்றாமல், மக்களின் கோரிக்கைகளையும் கேட்டறியாமல் அவர்களின் உடல் நலன் மீது துளியும் அக்கறையின்றி செயல்பட்டு வரும் திருப்பூர் மாநகராட்சி உடனடியாகத் தனது தவறுகளை சரி செய்து கழிவு மேலாண்மை விதிகளை முழுவதுமாக செயல்படுத்திட வேண்டும். இடுவாய் கிராமத்தில் அமைய இருக்கும் குப்பைக் கிடங்குத் திட்டத்தினை எதிர்த்துத் தொடர்ந்து போராடிவரும் பொதுமக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படும் அடக்குமுறையை அரசு இத்தோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இத்திட்டம் குறித்த முன்மொழிவை தமிழ்நாடு அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் நாம் தமிழர் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
- தாடி பாலாஜி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்தார்.
- விஜய்யின் முகத்தை நெஞ்சில் பச்சைக் குத்தியிருந்தார்.
நடிகர் தாடி பாலஜி, ஜோஸ் சார்லஸ் மார்ட்டினின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.
லாட்டரி அதிபர் மார்ட்டினின் மகனான, ஜோஸ் சார்லஸ் சொன்னவாறே இம்மாதம் புதுச்சேரில் புதுக்கட்சி ஒன்றை தொடங்கினார். லட்சிய ஜனநாயக கட்சி எனப் பெயரிடப்பட்ட கட்சியின் கொடியையும் கடந்த வாரம்தான் அறிமுகம் செய்தார்.
இந்நிலையில் நடிகர் தாடி பாலஜி இக்கட்சியில், அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் முன்னிலையில் இணைந்துள்ளார். முன்னதாக நடிகர் தாடி பாலாஜி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இருந்தார். தவெக கட்சி தொடங்கப்பட்ட சிலநாட்களிலேயே அக்கட்சியில் தன்னை இணைத்துக்கொண்ட தாடி பாலஜி, தவெகவுக்கு எவ்வளவு ஆதரவாக பேசியும் பொருப்பு வழங்கப்படாததால் விரக்தியில் இருந்தார். பின்னர் தவெகவையே விமர்சனம் செய்யத் தொடங்கினார்.
இந்நிலையில் தவெகவில் இருந்து விலகி, விஜய் பாணியிலேயே புதுச்சேரியில் கட்சி ஆரம்பித்த ஜோஸ் சார்லஸின் லட்சிய ஜனநாயக கட்சியில் இணைந்துள்ளார். தனது நெஞ்சில் விஜய்யின் முகத்தை தாடி பாலாஜி பச்சைக் குத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது.
- போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கு எனது மனமார்ந்த நன்றி
கரூர் சம்பவத்திற்கு பிறகு, பொதுவெளியில் இன்று ஈரோட்டில் பொதுக்கூட்டம் நடத்தி முடித்துள்ளார் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய். இந்த கூட்டத்தில் ஈரோடு மாவட்ட செயலாளர்களை எல்லாம் அறிமுகப்படுத்தி மக்களுக்கு முகத்தை பரிட்சயப்படுத்தினார். மேலும் வழக்கம்போல திமுகவை சாடி, பெயர் குறிப்பிடாமல் அதிமுகவையும் விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் பிரச்சாரம் சுமூகமாக முடிந்தநிலையில் தனது கட்சி பொறுப்பாளர் செங்கோட்டையனுக்கும், காவல்துறைக்கும் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,
"என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் என் அன்பான வணக்கம்.
எப்போதும், என் வாழ்வின் ஒவ்வொரு நிலையிலும் நீங்கள் உடன் வருகிறீர்கள். நீங்கள் காட்டும் எல்லையில்லா அன்பினாலும், ஆதரவினாலும் பெரும் உத்வேகம் அடைந்து வருகிறேன். இந்த உத்வேகமே எனக்கு எப்போதும் மிகப் பெரிய உந்துசக்தியாக இருக்கிறது. எத்தனை அரசியல் கட்சிகள், எத்தனை ஆண்டுக்காலம் நம்மை ஆண்டாலும், வறுமையின் பிடியில் சிக்கியுள்ள என் அன்புக்கு உரியவர்களாகிய உங்களுக்கு ஒரு விடிவு காலம் கண்டிப்பாக வரவேண்டும். ஏக்கத்திலேயே, கனவுகளிலேயே காலங்கள் கடந்து போய்விடக் கூடாது. எனவே தான், வளர்த்து ஆளாக்கிய உங்களோடு இணைந்து உங்களுக்காக உழைக்கவே நாம் நம் அரசியல் பயணத்தைத் தொடங்கினோம்.
அந்தப் பயணத்தில், உங்களைச் சந்திப்பதற்கு நாம் புறப்பட்டதில் இருந்தே எவ்வளவோ தடைகள் தொடர்ந்து நமக்கு வந்தவண்ணம் இருந்தன. அவற்றில் உங்களுக்குத் தெரிந்தவை பல. உங்களுக்குத் தெரியாதவை பல. ஆனால், அவற்றையெல்லாம் உங்களின் பேராதரவு மற்றும் தூய அன்பின் துணையோடு முறியடித்து வெற்றி அடைந்து வருகிறோம். உங்களுடனான சந்திப்பைத் தொடர்ந்து நிகழ்த்தி வருகிறோம்.
அந்த வகையில் இன்று மஞ்சள் மாநகரான ஈரோட்டில் நடைபெற்ற நமது சந்திப்பானது, வாழ்நாளில் இதுவரை இல்லாத வகையில் மிகுந்த மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்தச் சந்திப்பில், அளப்பரிய அன்பும் ஆதரவும் அளித்த, என் நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
இந்த நெகிழ்ச்சிமிகு சந்திப்பை, மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த பாதுகாப்புடனும் மெச்சத் தகுந்த வகையிலும் ஏற்பாடு செய்திருந்த நம் கழகத்தின் நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையனுக்கும், அவருக்கு உறுதுணையாக இருந்த நம் கழகப் பொதுச் செயலாளர் ஆனந்த்-க்கும், மாநில நிர்வாகிகளுக்கும், ஈரோடு மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் M.பாலாஜி http://B.Com, ஈரோடு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் M.வெங்கடேஷ் B.E., MBA, ஈரோடு மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் A.பிரதீப்குமார் DCE ஆகியோருக்கும், கழகத்தின் அனைத்து நிர்வாகிகளுக்கும், தன்னார்வலர்களுக்கும் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு உள்ளிட்டவற்றைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்த காவல் துறைக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மீண்டும் சந்திப்போம்!
வெற்றி நிச்சயம்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
- ஈரோட்டில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று பிரச்சார கூட்டம் நடைபெற்றது.
- செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
ஈரோட்டில் இன்று காலை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஏராளமான தவெக தொண்டர்கள் பங்கேற்றனர்.
அப்போது விஜய் தனது உரையின்போது, திமுக ஒரு தீய சக்தி என்று ஆக்ரோஷமாக பேசினார். மேலும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்தும், திமுக அரசு குறித்தும் விமர்சனங்களை முன்வைத்தார்.
இந்நிலையில், திமுக அரசின் மீதான தவெக தலைவர் விஜயின் விமர்சனம் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
மேலும், உதயநிதி ஸ்டாலினிடம்,"அரசாங்கம் நடத்துகிறீர்களா அல்லது கண்காட்சி நடத்துகிறீர்களா" என விஜய் விமர்சித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதில் அளித்த உதயநிதி ஸ்டாலின்," என்னைக்காவது விஜயிடம் போய் கேள்வி கேட்டிருக்கிறீர்களா? ஒருவாட்டி அவரை பேச விடுங்கள் பார்க்கலாம்.." என்றார்.
- மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று 5-வது நாளாக தொடர்ந்து நடந்தது.
- எழுத்துபூர்வமான வாதங்களை நாளை தாக்கல் செய்ய உத்தரவு
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பாக தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில், உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
மேலும் இதுதொடர்பாக திருப்பரங்குன்றம் மலையில் உள்ள சிக்கந்தர் தர்கா நிர்வாகம், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், இந்து முன்னணி உள்ளிட்ட பலர் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்து இருந்தனர். இந்த மனுக்கள் மீதான விரிவான விசாரணை கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி இன்று 5-வது நாளாக தொடர்ந்து நடந்தது.
நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் நடைபெற்று வந்த இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்தது. இதனையடுத்து தனி நீதிபதி விசாரிக்கும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கு எதிரான மேல்முறையீடு உள்ளிட்ட இது தொடர்பான அனைத்து வழக்குகளும் அடுத்தமாதம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரிவித்தனர். தொடர்ந்து எழுத்துபூர்வமான வாதங்களை நாளைக்கும் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, தீர்ப்புக்கான தேதியை குறிப்பிடாமல் வழக்கை ஒத்திவைத்தனர்.






