search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மக்கள் நலன் கருதி பேருந்துகளை இயக்குங்க - தொ.மு.ச.
    X

    மக்கள் நலன் கருதி பேருந்துகளை இயக்குங்க - தொ.மு.ச.

    • நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது.
    • பேருந்துகளை இயக்குவது தொடர்பாக தொ.மு.ச. அறிக்கை.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன. இதை தொடர்ந்து இன்று (ஜனவரி 8) நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது என சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

    இந்த நிலையில், தொ.மு.ச. உள்ளிட்ட சில தொழிற்சங்கங்களை சேர்ந்த போக்குவரத்து ஊழியர்களை வைத்து நாளை வழக்கம் போல் பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் சிவசங்கர் அறிவித்து இருந்தார். அதன் படி நாளை பேருந்துகளை இயக்குவது தொடர்பாக தொ.மு.ச. பொதுச்செயலாளர் மு. சண்முகம் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


    அதில், "தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களுக்கு 15-வது ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை துவக்கப்பட வேண்டும். போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியாளர்களால் வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வு நிலுவை, தற்போதைய 4 மாத அகவிலைப்படி நிலுவை வழங்க வேண்டும்."

    "ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும், மருத்துவ காப்பீடு திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. ஆயினும் அரசு ஓய்வு பெற்றோர் அகவிலைப்படி உயர்வு சம்மந்தமாக நல்ல முடிவு எட்டப்பட வேண்டும் எனவும் வலியுறுத்துகிறோம்."

    "அதே நேரத்தில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறது நமது கழக அரசு. இப்பிரச்சினைகளையும் தீர்க்கும் என்ற வாக்குறுதியை ஏற்று, பொதுமக்கள் நலன்களை கருத்தில் கொண்டும், நமது தமிழ்நாடு முதல்வரின் நல்லாட்சிக்கு களங்கம் விளைவிக்க முயலும் அ.தி.மு.க. தொழிற்சங்க நடவடிக்கைகளை முறியடிக்க வழக்கம் போல் பேருந்துகளை இயக்க வேண்டுமாய் தொ.மு.ச. பேரவை சார்பில் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களை தொ.மு.ச. பேரவை அன்போடு கேட்டுக் கொள்கிறது. கோரிக்கைகளை தீர்க்க தொ.மு.ச. பேரவை துணை நிற்கும் என உறுதியளிக்கிறோம்," என குறிப்பிடப்பட்டு உள்ளது.

    Next Story
    ×