search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் புதிய தொகுதிகள்
    X

    பாராளுமன்ற தேர்தல்: தமிழ்நாட்டில் காங்கிரஸ் போட்டியிடும் புதிய தொகுதிகள்

    • கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.
    • கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் எல்லா கட்சிகளும் கூட்டணிகள் அமைப்பது, தொகுதிகளை தேர்வு செய்வது போன்ற வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன.

    தமிழகத்தில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கிறது. இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்த கட்சிகள் தொகுதி பங்கீட்டை விரைவில் முடிக்க வேண்டும் என்று இந்தியா கூட்டணி கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதையடுத்து அனைத்து மாநில காங்கிரஸ் தலைவர்களையும் அழைத்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே கருத்து கேட்டார்.

    தமிழகத்தின் சார்பில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, பொறுப்பாளர் அஜய்குமார், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இந்த ஆலோசனையின்போது கடந்த தேர்தலில் ஒதுக்கப்பட்ட தொகுதிகள், வெற்றி பெற்ற தொகுதிகள், இந்த தேர்தலில் கேட்க வேண்டிய தொகுதிகள் எண்ணிக்கை, எந்தெந்த தொகுதிகளை கேட்பது, வெற்றி வாய்ப்புகள் பற்றியும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

    கடந்த முறை திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது.

    இதில் தேனியை தவிர அனைத்து தொகுதிகளிலும் காங்கிரஸ் வென்றது. எனவே கடந்த முறை 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த முறை கூடுதலாக தொகுதிகள் கேட்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்காக விட்டுக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டாலும் 9 தொகுதிகளில் குறைய கூடாது என்று தெரிவித்து உள்ளார்கள்.

    அதே நேரம் கடந்த முறை காங்கிரஸ் வென்ற சில தொகுதிகளில் போட்டியிட தி.மு.க.வும், ஒரு சில கூட்டணி கட்சிகளும் விரும்புவதாக கூறப்படுகிறது.

    குறிப்பாக கரூர், திருச்சி, விருதுநகர் போன்ற சில தொகுதிகளில் தி.மு.க. போட்டியிடுவதில் உறுதியாக உள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் காங்கிரசும் சில தொகுதிகளை விட்டுக்கொடுக்க வேண்டிய நிலை வரலாம் என்று கருதப்படுகிறது. அப்படியானால் மாற்று தொகுதிகளாக எந்த தொகுதியை விட்டுக் கொடுப்பது? அதற்கு பதிலாக எந்த தொகுதியை கேட்பது? என்ற குழப்பம் வரும்.

    கடைசி நேரத்தில் சம்பந்தம் இல்லாமல் ஏதாவது தொகுதிகளை வாங்க வேண்டிய சூழ்நிலையை தவிர்ப்பதற்காக காங்கிரசுக்கு சாதகமான தொகுதிகளை கண்டறிந்து அந்த பட்டியலையும் தருமாறு காங்கிரஸ் மேலிடம் கேட்டு உள்ளது.

    இதையடுத்து புதிதாக 9 தொகுதிகள் பட்டியலை காங்கிரஸ் தயாரித்துள்ளது. அந்த பட்டியல் வருமாறு:-

    திருநெல்வேலி, தென்காசி, ராமநாதபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஈரோடு.

    இந்த தொகுதிகள் பட்டியலும் மேலிடத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த தொகுதிகளை தேர்வு செய்வதற்கு காரணம் தென்காசியில் 9 முறையும் மயிலாடுதுறையில் 7 முறையும் காங்கிரஸ் வென்றுள்ளது. தஞ்சாவூரில் 4 முறை வெற்றி பெற்றுள்ளது. ராமநாதபுரத்தில் 3 முறை வெற்றி பெற்றுள்ளது. பெரம்பலூர் மற்றும் நெல்லையில் தலா 2 முறையும் காங்கிரஸ் வென்று உள்ளது.

    எனவே வெற்றி பெற முடியும் என்று நம்பப்படும் தொகுதிகளை காங்கிரஸ் தேர்வு செய்துள்ளது.

    இதற்கிடையில் தி.மு.க. தரப்பிலும் ஒரு பட்டியல் காங்கிரஸ் மேலிடத்திடம் வழங்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    அதில் தி.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள் மற்றும் காங்கிரஸ் தவிர இதர கூட்டணி கட்சிகள் விரும்பும் தொகுதிகள், அந்த தொகுதிகளில் கட்சிகளுக்கான வெற்றி வாய்ப்புகள் பற்றியும் குறிப்பிட்டு உள்ளன. இந்த பட்டியலில் 30 தொகுதிகளுக்கு மேல் இடம் பெற்று இருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த தொகுதிகளை அடிப்படையாக வைத்து காங்கிரஸ் மேலிட தலைவர்கள் தி.மு.க. மேலிட தலைவர்களுடன் விரைவில் பேச்சுவார்த்தையை தொடங்க உள்ளார்கள்.

    Next Story
    ×