search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எளிதாக பனை மரம் ஏறுவதற்கு கருவியை கண்டுபிடித்தால் விருது- தமிழக அரசு அறிவிப்பு
    X

    பனை மரம்

    எளிதாக பனை மரம் ஏறுவதற்கு கருவியை கண்டுபிடித்தால் விருது- தமிழக அரசு அறிவிப்பு

    • பனையோலை பொருட்கள் தயாரிப்பது தொடர்பாக 100 பெண்களுக்கு பயிற்சி வழங்குவதற்கும் மாநில அரசு ரூ.2.02 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.
    • பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரை தேர்ந்தெடுப்பதற்காக, அரசு தேர்வுக்குழு ஒன்றினை அமைத்துள்ளது.

    சென்னை:

    வேளாண்மை உற்பத்தி ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பனை மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், நடப்பாண்டில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறையின் மூலம் 10 லட்சம் பனை விதைகளை வினியோகம் செய்வதற்கும், பனையேறும் சிறந்த எந்திரத்தை கண்டுபிடிப்பவருக்கு விருதளிப்பதற்கும் 50 சதவிகித மானியத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பனை பொருட்கள் தயாரிக்கும் கூடம் அமைப்பதற்கும், 50 சதவீத மானியத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பனைபொருட்கள் தயாரிப்பதற்கான உபகரணங்கள் வழங்குவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும், பனை ஏறும் விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் கருவிகள் வழங்குவதற்கும், தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் மூலம் தரமான பனை வெல்லம், பனங்கற்கண்டு தயாரிப்பு தொடர்பாக 250 பனை விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பதற்கும், இப்பயிற்சியினை பெற்ற விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் உபகரணங்கள் வினியோகிப்பதற்கும், பனையோலை பொருட்கள் தயாரிப்பது தொடர்பாக 100 பெண்களுக்கு பயிற்சி வழங்குவதற்கும் மாநில அரசு ரூ.2.02 கோடி நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளது.

    இதன் தொடர்ச்சியாக, எளிதாக பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியினை கண்டுபிடிக்கும் நபருக்கு ஒரு லட்சம் ரூபாய் விருது வழங்கப்பட உள்ளது. இந்த போட்டியில், பல்கலைக்கழகங்கள், தனியார் நிறுவனங்கள், முன்னோடி விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்துகொள்ளலாம். பனை மரம் ஏறுவதற்கு சிறந்த கருவியை கண்டுபிடிப்பவரை தேர்ந்தெடுப்பதற்காக, அரசு தேர்வுக்குழு ஒன்றினை அமைத்துள்ளது.

    இக்குழுவில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்திலிருந்து தோட்டக்கலைத்துறையின் பேராசிரியர், வேளாண் பொறியியல் துறையின் பேராசிரியர், தோட்டக்கலை கூடுதல் இயக்குனர் (மத்திய மற்றும் மாநில திட்டம்), தமிழ்நாடு பனைபொருள் வளர்ச்சி வாரியத்தின் அலுவலர் மற்றும் பனை சார்ந்த தொழிலில் சிறந்து விளங்கும் முன்னோடி விவசாயி ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.

    இத்தகைய கருவியினை கண்டுபிடிப்பதற்கு ஆகும் மொத்த செலவினம், கருவியின் செயல்திறன், இதற்கான விலையின் உண்மைத்தன்மை, எந்திரத்தின் ஒட்டுமொத்த பயன்பாட்டுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் விருதுக்கான நபர் தேர்வு செய்யப்படுவார். இந்த விருதுக்கான போட்டியில் கலந்துகொள்ளவிரும்பும் நிறுவனங்களும், தனிப்பட்ட நபர்களும் www.tnhorticulture.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×